புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
உலகையே உலுக்கிய படுகொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு!

உலகையே உலுக்கிய படுகொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு!

ராஜிவ் காந்தி கொலை முக்கிய வீடியோ மறைப்பு;.

21 வருடங்களின் பின் எம்.கே. நாராயணன் மீது சந்தேகம்

ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை,ஐ.பி.உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க கவர்னராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகிப்பவர், எம்.கே.நாராயணன். முன்னதாக அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன் ஐ.பி.உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். கேரளாவைச் சேர்ந்த நாராயணன், ஐ.பி தலைவராக இருந்தபோது, 1991 மே, 21ல் ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜிவ், படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, தற்கொலைப் படை பெண் தனு, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராஜிவை கொன்றார்.

உலகையே உலுக்கிய இந்த படுகொலை வழக்கு, அவ்வப்போது வெளியாகும் தகவல் களால், பரபரப்படைவது வழக்கம். அந்த வகையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த, சி.பி.ஐ அதிகாரி, கே.ரகோத்தமன், “ரஜீவை கொல்லச் சதி - சி.பி.ஐ ஆதா ரங்கள்” என்ற பெயரில், சமீபத்தில் தமிழில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில், ரகோத்தமன் தெரிவித்திருந்த தகவல்களில், எம்.கே.நாராயணன் குறித்த, சில விவரங்கள், டில்லி, மும்பை நகரங் களில் வெளியாகும், டி.என்.ஏ.என்ற நாளி தழில் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக் கப்பட்டு விட்டது என்பதுதான்! ராஜீவ் கொல்லப்பட்ட மறுநாள் அப்போதைய பிரதமர் சந்திர சேகருக்கு ஐ.பி அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் ஒரு கடிதம் எழுதினார். அதில் எங்களிடம் ஒரு முக்கிய கேசட் உள்ளது. அதில் அந்த பெண்மணியை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் கடைசிவரை ஐ.பி.வசம் இருந்த அந்த கேசட் சி.பி.ஐ.யிடமும் சரி வேறு எந்த ஒரு விசாரணை அமைப் பிடமும் ஒப்படைக்கப்படவே இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு. ராஜிவ் கொலை வழக்கில் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் தான் பிரதான ஆதாரமாக இருந்தது. இந்த நிலையில் சிவராசன், உள்ளிட்டோர் சில மணி நேரம் ஸ்ரீ பெரும் புதூர் மைதானத்தில் காத்திருந்து ராஜீவை கொலை செய்திருக்கின்றனர். அந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார், யாரு டன் பேசினர்? எப்படி ராஜீவுக்கு மாலை யிடும் இடத்துக்கு மெதுவாக நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐ.பி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி இருக்கலாம் என்பதுதான் ரகோத்தமனின் சந்தேகம். தமது முந்தைய புத்தகத்தில் இதுபற்றி எழுதியுள்ள ரகோத்தமன், அப்படி ஒரு கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சினை வரும் என்று கருதி முழுப்பூசணியை மறைத்து விட்டது ஐ.பி.என்று சாடியுள்ளார். அத்துடன், இறந்த தலைவரை விட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகி விடுகிறார்கள் என்றும் ரகோத்தமன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர் மூலமே சிவராசன் குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்துக்குள் நுழைய முடிந்தது என்பது பலதரப்பிலும் வெளியான தகவல். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் ரகோத்தமன் இத்தகைய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.