புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
13 தான் தீர்வுக்கான அடிப்படை

13 தான் தீர்வுக்கான அடிப்படை

கேள்வி: ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமெனக் கோருகின்றார்களே! அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பி இது தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

பதில்: 13ஆவது திருத்தமே தீர்வின் அடிப்படை. இதனைத் தொடக்கமாகக் கொண்டே தீர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். 13 பிளஸ் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கருத்துக் கூறியுள்ளார். அத்துடன் திவிநெகும சட்டமூலம் வாயிலாக கிராமிய அபிவிருத்தியையும் வறுமையையும் நீக்க முடியும். எமது மக்களுக்கு இரண்டுமே தேவையாகிறது.

கேள்வி: ஆனால் ‘திவிநெகும’ சட்டமூலம் மத்திய அரசின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற சில கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நீங்கள் அதிகாரப்பகிர்வைக் கோருகின்aர்கள். இதை எந்த வகையில் நோக்க முடியும்?

பதில்: தமிழர் பிரச்சினைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஒருபோதும் தீர்வை நாடி நிற்கவில்லை. அவர்கள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டு. அவர்கள் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு கதை சொல்பவர்கள். தொட்டிலையும் ஆட்டுவர். பிள்ளையையும் கச்சிதமாகக் கிள்ளிவிடுவர். அவர்களுக்கு நிரந்தரமான தீர்வில் அக்கறையுமில்லை. தேவையுமில்லை. தேசியப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதே அவர்களுக்குத் தேவையான ஒன்று. கடந்த காலங்களில் பல்வேறு அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை. பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை. அந்த நேரத்தில் 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது “அதனை மிகச் சிறியது - மிகத் தாமதமானது” என கூட்டமைப்பு விமர்சித்தது. இப்போது 13ஆவது திருத்தத்துக்காக கூக்குரலிடுகின்றனர். கடந்த காலத்தில் பயங்கரவாதப் பிரச்சினை இருந்தது. நாங்கள் அதற்கு முடிவு கட்டினோம். அதைப்போன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு விரைவில் வழியேற்படுத்துவோம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இது மேற்கொள்ளப்படும்.

கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நடை முறைப்படுத்துவதில் சிக்கலாகவுள்ளதே?
* திவிநெகும சட்டம் தமிழ் மக்களுக்கு பல வழிகளிலும் பயன்தரக்கூடியது
* இனப்பிரச்சினை தீரவேண்டுமென்ற இதய
சுத்தியான எண்ணம் ஹினிதி க்கு கிடையாது
* பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த வழிமுறை
* வடமாகாணத் தேர்தல் முக்கியமான ஒன்று

பதில்: அனைத்து தரப்பினரையும் இந்தக் குழுவுக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எண்ணமும் நோக்கமும். தமிழ்க் கூட்டமைப்பும் இதில் பங்கெடுக்க வேண்டுமென்பதே அரசின் விருப்பம். இது ஒரு தேசியப் பிரச்சினை. எனவே ஒவ்வொருவரினதும் பங்குபற்றுதலும் தேவையாகிறது. கூட்டமைப்பு இதில் பங்கேற்க மறுத்தால் நாங்கள் மாற்று உபாயங்களைக் கையாள வேண்டிவரும். கூட்டமைப்பின்றி நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிவரும். விடுதலைப்புலிகள் வெல்ல முடியாத ஒரு சக்தியாக கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பு பங்கேற்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அரசாங்கம் முன்னெடுக்குமென்று நீங்கள் நினைக்கின்aர்களா?

பதில்: நான் முன்னர் பலதடவை குறிப்பிட்டது போன்று புலிகளின் பிரச்சினையிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை வேறுபட்டது. அதைப்போன்று தமிழ்க்கூட்டமைப்பின் பிரச்சினைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. தமிழ்க்கூட்டமைப்பை இந்த விவகாரத்தில் ஒரு பக்கத்தில் நாம் வைத்து விட்டு நமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற வேண்டும்.

கேள்வி: 13ஆவது திருத்தம் தீர்வுக்கு வழியேற்படுத்தும் என நீங்கள் நினைக்கின்aர்களா?

பதில்: இது ஒரு ஆரம்பமே. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த அடிப்படை.

கேள்வி: அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகியன 13ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனவே?

பதில்: இது ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் அபிப்பிராயமும் நோக்கும் இருக்கின்றது. நாடு என்ற ரீதியில் நாங்கள் ஒருமித்து செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் இந்தத் திருத்தத்தை ஐ.தே.க அறிமுகம் செய்தபோது ஸ்ரீ.ல.சு.க எதிர்த்தது. தற்போது அக்கட்சி அதனை ஏற்றுக்கொள்கின்றது. சகல மாகாண சபைகளையும் தற்போது ஸ்ரீ.ல.சு.க வே நிர்வகிக்கின்றது.

கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டத்தில் நீங்கள் ஏதாவது குறைபாடுகளைக் காண்கின்aர்களா?

பதில்: இருக்கக்கூடும். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நாம் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இந்தச் செயன்முறை முன்னெடுக்கப்படும் போதே நாங்கள் பிரச்சினைகளைக் கண்டறிய முடியும். இதனை நடைமுறைப்படுத்தும்போது பிரச்சினைகளை இனங்காண முடியும். அதன் பிறகு தீர்த்துக்கொள்ளலாம். தமிழர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் வகையிலேயே இந்தத் திருத்தம் அறிமுகஞ் செய்யப்பட்டது. ஆனால் புலிகள் இருந்த வேளை இதன் பயனை அடைந்து கொள்ள முடியாது போய்விட்டது. இப்போது நாம் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. வடக்குக்கும் இதனை நாம் பிரயோகிக்கவேண்டும்.

கேள்வி: இந்தத் திருத்தம் இல்லாதொழிக்கப்படுமாயிருந்தால் இதன் விளைவுகள் என்னவாகும்.

பதில்: உங்கள் கேள்விக்கு என்னால் இந்த தருணத்தில் பதில் சொல்ல முடியாது. ஆனால் அரசாங்கம் அவ்வாறான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

கேள்வி: இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 1987இல் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம் குறித்த உங்கள் அனுபவங்களைக் கூறமுடியுமா?

பதில்: தமிழ் மக்கள் பிரச்சினையில் தத்தளித்த ஒரு காலப்பகுதி ஆளுந்தரப்பு மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காத ஒரு காலம் “தி” தான் தீர்வு என ஆளுங்கட்சி கூறும் “கி” தான் சரியான தீர்வு என எதிர்க்கட்சி பதிலுக்கு கூறும். எனவே நீண்ட காலமாக தமிழர் பிரச்சினை இழுபட்டுக்கொண்டிருந்தது. தமிழ்மக்கள் ஆயுத மோதல்களுக்குள் அகப்பட்டுத்துன்பப்பட்ட ஒரு காலம். இந்தக்காலகட்டத்திலேதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கேள்வி : 13ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதில் இந்தியா பெரும் பாத்திரம் வகித்தது. இந்தியா இன்னுமே அந்தப் பாத்திரத்தை தொடர்ந்தும் வகிப்பதாக நீங்கள் நினைக்கின்aர்களா?

பதில் : உள்நாட்டிலேயே தீர்வு ஒன்றைக் காண வேண்டுமென்பதே எனது கருத்தாகும். அவர்களால் மருத்துவ மாது போன்றே உண்மையில் தொழிற்பட முடியும். தாய் நாடான இலங்கை தனது குழந்தையை பிரசவிக்கும். வெளிநாட்டுத் தலையீடுகள் மேலும் பிரச்சினைகளைச் சிக்கலாக்கவே உதவும் தமிழ்க்கூட்டமைப்பு இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் உதவிதேடிச் செல்கின்றது. இது ஒரு முறையான வழியல்ல. மேலும் பல்வேறு தடுமாற்றங்களை ஏற்படுத்தவே இது வழிவகுக்கும் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபையின் வரதராஜப் பெருமாளின் நியமனம் கூட தவறுகளை பல ஏற்படுத்தியது. எனக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் பிரச்சினையை யதார்த்த ரீதியில் தீர்த்துவைக்க முடியும்.

கேள்வி : இந்திய நீதிமன்றம் உங்களுக்கெதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளதே. இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு கையாள்கின்aர்கள்?

பதில் : தமிழ்நாட்டில் சேரிப்புறமொன்றில் சட்டவிரோத கூட்டம் ஒன்றை கூட்டியதாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு கொலைக் குற்றச்சாட்டல்ல. ஆனால் தமிழ் ஊடகங்கள் இதனை ஊதிப் பெருப்பிக்கின்றன. இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றத்தில் தான் என்மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சென்னை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காவிடின் நான் புதுடெல்லியிலுள்ள மேல் நீதிமன்றில் நீதி கோருவேன். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் செல்வேன். நான் அமைதியை நிலைநாட்டவே அந்தப் பகுதிக்கு சென்றேன். வரதராஜப் பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் அங்கு நின்றனர்.

கேள்வி : வடமாகாண தேர்தல் எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றது?

பதில் : இது முக்கியமானது. அடுத்த வருடம் செப்டம்பரில் தேர்தல் இடம்பெறுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார். களநிலைமைகளைச் சரிசெய்ய எமக்கு காலம் தேவைப்படுகின்றது. கறி சமைக்க முன்னர் அதற்குரிய பதார்த்தங்களைச் சேர்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது.

கேள்வி : வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் இன்னும் உள்ளதா?

பதில் : நிச்சயமாக. நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சுஐப் எம்.காசிம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.