புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

சுனாமி

சுனாமி வந்ததற்குப் பிறகு. கந்தப்புவின் தோட்டத்து நிலத்தின் தன்மை உப்பாகி விட்டது. அதை விற்போமென்று அவர் பார்த்தால். கடல் அலை அடித்துப்போன அந்த நிலத்தை எவரும் நல்ல விலைக்கு வாங்குதாக இல்லை. அடிமாட்டு விலைக்குக் காணியை விற்க கந்தப்புவும் தயாராயில்லை.

கண்ணீரில் கிடந்து நனைந்து கொண்டிருக்கும் நிலைக்கு கந்தப்புவின் மனைவி செல்லமாளும் கூட இப்போது வந்துவிட்டாள். தொலைதூரத்தில் வாழ்க்கைப்பட்ட மகள் தாய் வீட்டுக்கு வந்து போகிறபோது தாய்க்கும் தகப்பனுக்குமென்று கொஞ்சம் காசு கொடுத்து விட்டுப் போவாள். தோட்டம் ஏதுமில்லாத நிலையிலே இப்படித்தான் அவர்களுக்கு வாழ்க்கை கஷ்ட சீவியமாகப் போனது. இருக்கிற துண்டு துண்டுப் பவுண் நகைகளை சிறிது சிறிதாக விற்று விற்றுச் சாப்பிட்டு அவர்களின் உடம்பு கிடந்தது.

முன்னமென்றால் காணிக்குள்ளேயுள்ள தென்னைமரத்திலிருந்து தேங்காயாவது அவர்களுக்கு பிடுங்கி விற்க வரும். அந்தக் காசே போதும் வீட்டுக்கு அவருக்குக் காய்கறிகள் வாங்க. அந்த ஊர் முழுக்கவும் இந்த வருமானத்தைப் பற்றி அப்போதெல்லாம் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தச் சுனாமி வந்தான பிறகு ஆசுவாசித்துநின்ற தென்னைமரத்தையே முழுதாகப் பாதித்துக் கருக்கிவிட்டது. இவரது காணித்தென்னைகள் மட்டுமல்ல அப்படிப்போனது. கடல் தண்ணீர் வந்து அடித்து பிறகு உள் இழுத்துக்கொண்டதான ஏகதேசமெல்லாம் அவரது தென்னைகள் பட்டுப்போன கணக்காய்த்தான் தீப்பற்றி எரிந்தது போலாகிவிட்டன. நெருப்பெரித்துவிட்டால் கூட எரிந்த பனை வடலி மீண்டும் தளிர்க்கும். ஆனால், சுனாமி வந்து கடல் பொங்கி அடித்த இடமெல்லாம் உள்ள பனைகள் கூட சில இழவு விழுந்தது போல கருகிச் செத்தும்விட்டன.

பூச்சி ராஜன்தான் முன்னம் வந்து தோட்டத்தை அழித்தான். வெள்ளாமை வயலைச் சாகப் பண்ணினான். ஆனால் இப்படிச் சூடான தார்போல கடல் தண்ணீர் வந்து நிலத்தைக் கூடக் கருக்கி நாறச்செய்து நிர்மூலமாக்கி விட்டுப் போனதைத் தங்கள் தோட்டத்துக்கு தண்ணீர் விடும் அந்த நேரமெல்லாம் நினைத்து அந்த இடத்து விவசாயிகள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். மூளை நரம்பு தெறிக்கிற அளவுக்கு இதையெல்லாம் தங்களுக்குள் அவர்கள் யோசிக்கவும்தான் செய்தார்கள்.

உடம்புத் தேய்வை ஒவ்வொரு நாளும் உணருகிற வயது போன காலம் தான் இப்போது. கந்தப்பவுக்கு ஓய்வாக இருந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டிய ஒரு காலம்தான் அவருக்கு நிலத்துக்குத் தான் எல்லாத்திலும் பார்க்க பெரியமதிப்பு. அதுதான் சொத்துக்களில் அசையாத சொத்து என்று அவர் மற்றவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. இப்படியாக வந்த கேடு கெட்டுப்போன ஒரு நிகழ்வாலே எல்லோருக்கும் பிறகு கண்காட்சிகளாக அவர் சொன்னதெல்லாம் பொய் என்றதாய்ப் போய்விட்டன. இப்போது அவ்விடயங்களில் கரையோரச் சேற்று நாற்றம் மூக்கை அரிக்கிறது. அந்தக் காற்றை எதிர்க்க முடியாத அளவுக்கு திண்டாடவும் தொடங்கி விட்டார் கந்தப்பு. அவர் மட்டுமா அப்படி? அவரது மனைவி கூடத்தான் இப்படி கஷ்டமெல்லாம் பட்டுக்கொண்டிருந்தாள். கண்ணீர் விட கடவுள் இவளுக்கு வரம் கொடுத்து விட்டது போல ஒவ்வொரு நாளும் தங்கள் இருவரின் நிலையையும் நினைத்து இவள் அழுது கொண்டேதான் இருப்பாள்.

சுனாமி கொடிய பேய்ப் பிடியாக அழிவு செய்ததற்குப் பிறகு அந்த இடத்துச் சனங்களுக்கெல்லாம் இன்னும் கூட தங்கள் கண்ணெதிரே கண்டு வரும் காட்சியாக அவைகளெல்லாம் மனத்துள் இருந்து வரத்தான் செய்கின்றன. அவர்களுக்கெல்லாம் சங்குக் கூட்டம் ஒலி எழுப்பியதுபோல அந்தச் சாவுகளின் அழுகை ஒலிகள் காதுகளில் இப்போதும் கேட்டபடியேதான் இருக்கின்றன. பிணங்களைக் கண்டு அவர்கள் பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தக் கடலடியே தங்களுக்குச் சரணம் என்று வாழ்ந்த மீனவர்கள் குடும்பத்திலே தங்கள் கணவரின் பிரேதங்களைப் பார்த்து முலை பொலிந்த மார்பகம் அழல் பற்றும் படி அறைந்து கொண்டு பெரிய முழக்கம் போட்டு அவர்களில் எத்தனையோ பேர் அழுதார்கள்.

மீன் பிடிக்கும் தொழிலாளர்களிலே திரும்புதலில்லாமல் போனவர்கள் எத்தனைபேர்? இப்பொழுது கூடச் சாகக் கொடுத்த அந்த உப்புக் கடலை நினைக்க அந்தப் பெண்களுக்கு மனத்தைப் போட்டு உறுத்தத்தான் செய்கின்றது. கடலலை வந்து அடித்துக் கிழிக்கப்பட்ட மரங்களைக் கவனிக்கும் போது நீல நஞ்சு பரவி கைகால்களை இழுப்பது மாதிரி பயம் படபடப்பாக இதிலே சிக்குண்டு அனுபவப்பட்டவர்களுக்கெல்லாம் இருக்கின்றன.

கந்தப்புவின் வீட்டுக்காணியில் வாசலுக்குத் தூரமாய் இருந்தது கம்பீரமும் இனிமை அழகும் கொண்ட ஒரு வேப்பமரம். இளம் கன்றான அந்த வேப்பமரம் அதில் நின்று காற்றுக்கு இலைகளை விசிறிக்கொண்டிருந்தது. சிலிர்த்துப்போன மாதிரி நின்ற அந்த மரத்திலிருந்து தென்றலில் உதிரும் பூக்களை கந்தப்பு சில வேளைகளில் மனோரஞ்சித வாசத்தோடு நின்றவாறு பார்த்துக்கொண்டேயிருப்பார். அந்த வேம்பின் இலைச் சுவை அவருக்குப் பிடித்தமானது. இரண்டு மூன்று இலைத்துளிர்களைக் கூட தன் தேக சுகத்துக்காக அதிலே பிடுங்கி அவர் விருந்தாகவும் மருந்தாகவும் நினைத்து சுலபமாகச் சாப்பிட்டு விடுவார்.

அதைச் சாப்பிட்டான பிறகு உடம்புக்கு இது மருந்தாகிவிடும் என்பது மாதியான ஒரு மனத்திருப்தி அவருக்கு வரும். அப்படியெல்லாமாக அதிலே நின்ற வேம்பு, பிணம் மாதிரி இப்போது தூங்கிப் போனதாய் விட்டது அவருக்குப் பெரியதொரு கவலைதான். ‘முழிப்பு இல்லாத தூக்கமான நிலைக்கு இதுவும் கூட இனிமேல் போய்விடுமோ...........?’

இதையெல்லாம் நினைத்து கரிச்சுக்கொண்டே கிடக்கிறது அவரது மனம்.

“தனக்கு கஷ்டம் இப்போது” - என்று எங்கேயாவது அவர் கூலி வேலைக்கென்று போனால் இளம் இரத்தங்களுக்கு முன்னால் நிகராக அவருக்கு நிற்க முடியுமா? மற்றவர்கள் வேலை செய்வதோடு இவரை ஒப்பிடும்போது அவரது வேலை மிகவும் குறைவாக இருந்தது.

திடகாத்திரம் இல்லாத தன் வேலையை பிறகு அவருக்கே செஞ்சுக்குள்ள கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்னைத் தானே அந்த வேலைகளிலிருந்து அவர் பிறகு வேலை நீக்கம் செய்த மாதிரி ஆக்கிக்கொண்டுவிட்டார்.

“இப்படிக் கூலிவேலைக்கெல்லாம் போய்க் கிடந்து கஷ்டப்பட வேண்டிய ஒரு நிலைக்கு என்னைக் கொண்டு வந்ததாய் விடடு விட்டதே இந்தக் கடல் தானே?” பொங்கி வந்து அடித்த கடல் தண்ணீர் என்னையும் அப்பிடியே உயிரோடு விடாம உள் இழுத்துக் கொண்டு கடலுக்க போயிருந்தா எனக்கும் அது நல்லதாய் இருந்திருக்குமே? இவ்வளவு கஷ்டம் வந்து எனக்கு இப்பிடி எல்லாம் கிடந்துகொண்டு இப்ப கஷ்டப்பட வேண்டியிருக்காதே?

இந்தக் கவலைகள் அவரின் மனத்தை நிறைத்துக்கொண்டு மூச்சுக் காற்றில் வெளியேறிக் கொண்டிருந்தது. அந்த மண்ணில் தீயேறி, பிறகு கரியை மினுங்கச் செய்து கொண்டிருக்குமாப் போல கிடக்கின்ற அன்றைய அந்த கொடிய வெக்கை மாதிரி, அவரின் மனதுக்குள் அனேகம் சிந்தனைகள் பெருகிவந்து உறைக்க ஆரம்பித்தன.

சுனாமி வந்ததற்குப் பிறகு அழிவு நிலைமையை கணக்கெடுத்து நிவாரணம் தருவதாக அரசாங்கத்தால் அப்போது அறிவிக்கப்பட்டது. இது விடயம் ஒழுங்காக அறிய செய்தித்தாள்களைத் தேடித் தேடிப் படிப்பது அங்கேயுள்ளவர்களுக்கெல்லாம் முக்கிய தொழிலாகிவிட்டது.

கடல் தண்ணீர் வந்து தொட்டுப் பார்க்காத இடத்துக்காணி வீடுகளில் உள்ளவர்களெல்லாம் தங்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கிலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், இழப்புக்குப் பதிந்து லட்சக்கணக்கில் பணம்பெற்றுக்கொண்டார்கள்.

பாதிப்படைந்தவர்கள் இதை அறியவும் அவர்களுக்கு உடம்பைப் போட்டு ஆத்திரத்தில் உலுக்குவதாக இருந்தது. அவர்களைத் துக்கம் கோலோச்சியது. தமக்குக் கொடுக்கிற நிவாரணப் பச்சரிசிச் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு பிழைப்பொன்றும் இல்லாமல் கிடக்கிற இவர்களெல்லாம், அவற்றை யோசித்துப் பார்க்கையில் உடம்புக்கு பெரிய அலுப்பாக இருந்தது. வகை வகையான சமையல் செய்து மட்டனோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல்காரர்களை நினைத்து நினைத்து விளைச்சலெல்லாம், வெள்ளாமையெல்லாம், நெருப்பில் எரிந்ததைப் பார்த்த கணக்காய் இவர்களெல்லாம் ஆத்திரப்பட்டார்கள்.

பரபரவென்று தன்னைப் போன்ற பாதிப்புற்றவர்கள் பலரிடம் கந்தப்புவும் அந்த லஞ்ச ஊழல்கள் பெறுபவர்கள் பற்றி ஆவசமாக விவாதித்தார். அவரின் முகமும் இந்தக் கொடுமைகளைக் கேள்வியுற்று அழுக்கடைந்து கிடந்தது. அப்படிப்பட்ட சில விதானைமார்களின் தலைகளெல்லாம் அவருக்கு கொடியகாட்டு எருமைகளின் தலைகள் போல நினைவில் தென்பட்டன.

சூழல் மாசுபட்டதால் என்னென்று வெளியே சொல்லமுடியாத படிக்கு ஒரு வித காய்ச்சல் வருத்தம் அவருக்கும் மனைவிக்கும் வந்தது. “உயிரோட இருப்பனோ இல்லையோ?” என்று தெரியாத அளவுக்கு அவர் அந்த வருத்தத்தோடு கிடந்தார். அவருடைய மனைவிக்கு இந்த வருத்தம் வந்து பாயில் கிடக்கையில். “சவமாக இப்போது தன்னை புதைத்துவிட்டார்களோ” என்ற சந்தேகம் வருவது போலவும் இருந்தது.

காய்ச்சல் நேரம் கந்தப்பு சூம்பிப் போன கை விரல்களால் மரத்துப்போன நெஞ்சுப் பக்கம் சொறிந்துகொண்டே கண்களை விழித்து முகட்டுப் பக்கம் பார்ப்பார். எரிந்து கொண்டிருக்கும் அந்தக் குத்துவிளக்கின் ஒளியிலே ஒரு மன வலிமையோடு அவருக்கு தன் வீட்டு யோசனை, “பாரன் இப்பிடி கோப்பிசமே இல்லாத மாதிரி எல்லாம் இடிஞ்சு போச்சு என்ரை வீடு... இப்ப அதுக்காக நான் போட்ட கிடுகுக் கூரை கூட ஒழுங்கா இல்லாமல் பாக்க லட்சணம் கெட்டுப் போச்சு... எப்பிடியும் இந்த வீட்டுக் கதவுகளையும் முன்னம் இருந்தது போல நான் புதுசாச் செய்து போட்டு... விதையை விருட்சமாக்கிப் பாக்கிற அளவுக்குப் பழையதா இருந்த மாதிரி இதுகளையும் திருத்தி அப்பிடியாகக் கொண்டந்திர வேணும்...”

இதை அவர் நினைத்து முடித்த வேளையிலே, செத்த சிலந்தியின் உடல் சீர்கெட்டுப்போன அந்தச் சுவரிலே ஒட்டிக் கொண்டிருப்பதும் அவருக்குத் தெரிந்தது.

உடலைக் குளிர்வித்த அந்தக் காய்ச்சலுக்குள்ளே புழுக்களாகப் பிறகும் பழைய பேய் வழி நினைவுகள் அவருக்கு நகர்ந்துகொண்டிருந்தன. அவைகளை நினைக்க காய்ச்சலிலும் அவருக்கு மூச்சுச் சீறி வெளிப்பட்டது.

கடல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு, சோர்வில் பேசாமடந்தையாகிவிட்ட கன்னியர் சிலரை காடையர் சிலர் காப்பாற்றி விட்டு, அபயம் கொடுப்பதாக நடித்து அவர்களை அந்நேரம் கற்பழித்துமிருக்கிறார்கள்.

அதை அவர் அறிந்த வேளை அணை உடைத்ததாய்க் கோபத்தில் பொங்கியெழுந்தார். இதுமட்டுமா அங்கு நடந்தது?

சேறுபட்ட உடம்போடு செத்துக்கிடந்த பெண்களின் கழுத்துத் தாலி அறுக்க எத்தனை கள்வர்கள், புருஷன் உறவு கொண்டாடி அவர்களை கட்டிப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தார்கள். நகைகளைசுழற்றிக் கொண்டு கம்பி நீட்ட மட்டும் இப்படியாய் உறவு சொல்லி அவர்கள் பிணங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்கள்.

தடம்புரண்ட ரயில் பெட்டியில் திருடும் திருடர் கூட்டம். இந்தச் சுனாமியிலும் இப்படியான தொரு திருட்டுக் கைவரிசையை காட்டத்தானே செய்தது.

தத்தமதாம் பீதியின் பேயுரு மனதைப் போட்டு ஆட்ட, இடுகாடான அவ்விடமெல்லாம் அவ்வேளை அலைந்து திரிந்தவர்கள், இந்த அநியாயங்களையெல்லாம் எங்கு கண்ணால் கண்டார்கள்? மனித முகமோ இடமோ தெரியாத அளவுக்கு வீறிடும் அலறலோடு சித்தம் தடுமாறித் திரிந்தவர்களுக்கு இதைக் கவனித்துப் பார்க்குமளவிற்கு மனநிலை ஒரு நிலையுள்ளதாயிருந்ததா? விழி மூடிக்கிடந்த பிணங்களுக்கு ஒப்பானவர்கள் போலத்தான் விழி திறந்த கொண்டு உயிருடன் திரிந்து அவ்விடத்து மனிதர்களெல்லாம் அவ்வேளையில் இருந்தார்கள்.

கோயிலில் காலையில் கேட்கும் பண்ணோடு தொடங்கியது மாதிரித் தானே இந்தச் சுனாமியும் அன்று தொடங்கியது. கந்தப்புவும் கோயிலுக்குப் போய்க் கும்பிட்டு வீடு வந்து சேர்ந்த வேளைதான் பீதியூட்டும் படி அது புயல்போல வெடித்தது. வயது போன இந்த வேளையிலும் கூட அவரின் கூர்ப்பார்வை அந்த நேரக்கொடுமைகளை சிந்தனையில் கொண்டுவந்து நெற்றி சூடேற யோசிக்க வைக்கின்றதற்குத்தான் செய்கின்றன. எல்லாமே முள்நிறுத்தங்களாய் இருந்து மூளைக்குள் அவருக்குக் குத்துகிறதாகத்தான் இருக்கின்றன.

இப்படியெல்லாம் கொடுமைகள் நடந்து ஆகிவிட்டதன் பிறகு கடல் என்றும் போல் தன் வழியில் நின்றுகொள்ளும் என்கிற நம்பிக்கை அவருக்கு இப்போது விடுபட்டதாகி விட்டது. அலையோசை திரும்பி ஊருக்குள் வரக்கேட்கும் ஒலியாக இப்போது அவரது காதுகளில் பேரிரைச்சல் கேக்கின்றதைப் போலவே ஆகிவிட்டன.

கந்தப்புவையும் மனைவியையும் அமர்த்திக் கிடந்தின காய்ச்சல் இப்போது கொஞ்சம் உடலைச் சீராக்கி காலையில் எழுப்பிவிட்டது. கந்தப்பு செருமிக் கொள்ளக் குரலெடுக்கு முன்னம் குயிலொன்று தூரத்திலிருந்து கூவியது. அந்தக் குயிலின் குரல் கேட்டவுடனே தனக்கும் மனைவிக்கும் இன்னும் சிறிது காலங்கள் வாழும் தகுதி இருப்பதாக அவர் எண்ணிக் கொண்டார். உலகில் இருக்கின்ற மொத்த மனிதத் தொகுதியோடு நாங்களும் சேர்ந்து சீவிப்பம் என்ற நம்பிக்கையும் அவரில் உதயமாகியது.

துன்பம் கொஞ்சம் அகன்று, இலைக்குள்ளே கத்தரிப் பூப்பூத்தது மாதிரி சிறியதொரு மகிழ்ச்சி நினைவில் கடலொரு இறுதிப் புள்ளியாகி தூரத்திலே போய் நிற்க.

இனிக்கும் ஒரு உச்சம் அவருக்கு மனதுக்குள் சுரந்தது.

அவர் இனிக்கும் ஒரு கனிமையுடன் கனடாவிலிருக்கும் தன்மூத்த மகளை நினைத்தார். அவளை நினைக்கவும் தன் உடல் தெம்பாய்த்தேறியது மாதிரி அவருக்கு இருந்தது. தன்மகள் இந்தச்சுனாமி வந்ததை அறிந்து தனக்கு அனுப்பிய அந்த 100 டொலர் றங்குப் பெட்டியில் கிடக்கின்றங்து என்றதை அவர் யோசித்துப் பார்க்கவும் நாவின் சுவை மொட்டுக்கள் உயிர்த்ததைப் போல அவருக்கு வந்தது. உமிழ் நீரும் முகிழ்க்க நல்ல கறிசோறுகளையும் அவர் நினைத்தார்.

“மகனாக இருந்தால் இவ்வளவு இன்னும் அனுப்பிவை என்று கேட்டு வாங்கலாம். ஆனால், கலியாணம் முடித்துக்கொண்டுபோன மகளிடம் எப்படித்தான் காசு பணம் உதவியென்று கேட்பது? ஏதோ அவர்கள் அனுப்பியதை பெற்றுக்கொண்டு நன்றி சொல்வதோடு இனிமேலும் வேண்டாம் இங்கேயெல்லாம் எங்களுக்குத் திருப்தி என்றதாயும் சொல்லிவிட வேண்டும். அதுதானே பெண்பிள்ளையை அனுப்பிய இடத்துக்கு நாங்களும் வைத்துக் கொள்கிற மரியாதை...?” சேற்றின் எச்சங்கள் - வீசும் காற்றில் திரும்பவும் மணக்கின்றதைப் போல அவருக்கு இருந்தது. அந்த மணத்தில் தான் வயிற்றடியிலும் குடல் திரள்கிறது மாதிரியாக அவர் அப்போது உணர்ந்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.