புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...

நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...

 (சென்றவார தொடர்)

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி எஸ். எம். சவாஹிர் சேதுராமன் இரு சஞ்சிகைகளை தானே ஆசிரியராக பொறுப்பேற்று நடாத்தியதுடன் இலக்கியவாதிகளை மதித்துநடந்தமைபற்றி குறிப்பிட்டதுடன் மாத்தளைக்கு புகழ்சேர்த்த எழுத்தாளருமாக அவ்வப்போது பத்திரிகைகளில் பல புனைப் பெயர்களில் எழுதியுள்ளார்.

அவரது படைப்புகளை சேகரித்துவைத்திருப்போர் தந்து உதவ வேண்டுமெனவும், அவற்றை தொகுத்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனவும் இதற்கென மாத்தளையில் வெகுவிரைவில் ஒரு கூட்டத்தை நடாத்தவேண்டுமெனவும் எடுத்துக்கூறியதுடன் இதற்கு சம்பந்தப்பட்ட சகலருடனும் தொடர்பு கொண்டு செயல்படப்போவதாகவும் குறிப்பிட்டமை சந்தோஷமாக இருந்தது.

அமரர் கந்தசாமி ஐயாவினது மறைவிற்குப்பின்னர் செல்வம்பாக்கியம் அம்மையார் பாக்கிய வித்தியாலயத்தை அரசு சுவீகரிக்கும் வரையில் மிகத்திறம்பட நிர்வகித்ததார். மாத்தளை வாழ்தமிழ் மக்களின் கலை, இலக்கிய சமய நிகழ்ச்சிகளை நடாத்த இயன்றளவும் ஒரு நவீன அரங்கு இல்லை. மிகநீண்டகாலமாக பாக்கியவித்தியாலய மண்டபம் பஜனை பூஜைவழிபாடுகளுக்கும் கலை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் துணைபுரிந்துள்ளது.

மாத்தளையில் நாடக அரங்காகத் நிகழ்ந்து பின்னர் திரைப்பட மாளிகையாகமாறி தற்போது நவீன சந்தையாக உருவெடுத்துள்ள மாத்தளை தாஜ்மஹால் தியேட்டர் ஐந்து தசாப்தங்களுக்குமுன்னரே நாடக அரங்காக மிளிர்ந்துள்ளது. என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோரின் நாடகங்களும், தாராசிங் முதலான குத்துச் சண்டைவீரர்களின் குஸ்தியும் நடந்தேறியதாக லங்கா தோட்டத்தொழிலாளர் யூனியனின் மாத்தளை மாவட்டத்தலைவர் வேரகம செல்லத்துரை கூறுகின்றார். இந்நிகழ்ச்சிகள் பாக்கியவித்தியாலய அரங்கிலும் நடந்தேறியதாக கூறுவாரும் உளர். குல தெய்வம் இராஜகோபாலின் குழுவினரும் பாக்கிய அரங்கினை அலங்கரித்துள்ளனர்.

சமகால தமிழ் அறிஞர் பலரும் இவ்வரங்கில் உரையாற்றியுள்ளனர். அ.ச. ஞானசம்பந்தர் பேராசியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். பெ.சு.மணி, சாரதாநம்பியாரூரன், இளம் பிறைமணிமாறன், அழகிரிசாமி, பாரதியாரின்பேத்தி விஜயபாரதி , பேராசிரியர் சுந்தரராஜன், இர. சிவலிங்கம், எஸ்.எம். கார்மேகம், உடுவை. எஸ். தில்லைநடராஜா, பேராசிரியர்கள் எஸ். தில்லைநாதன், கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் துரைமனோகரன் கலாநிதி க. அருணாசலம், அமரர் அம்பலவாணர் சிவராஜா ஆகியோர் அலங்கரித்தமேடை இது!

புகழ்பூத்த எழுத்தாளர்களான எஸ். அகஸ்தியர், கே. டேனியல், செ. கணேசலிங்கம், டொமினிக்ஜீவா, எஸ். பொன்னுத்துரை, தெளிவத்தை எஸ். ஜோசப், சரால்நாடன், அந்தனிஜீவா ஆகியோர் தம்கருத்துக்களை எடுத்தியம்பிய மேடை பாக்கிய வித்தியாலய அரங்கு! முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் கண்டியில் நீண்டகாலம் பணியாற்றியவர். எழுத்துப்பணி மட்டுமன்றி ஓர் இயக் கத்தோழனாக இயங்கியவர். ஒருசில மலையகத்தமிழரை “தோட்டக்காட்டான்” என்று ஆசூசையாக எண்ணிய கால கட்டத்தில் மலையகத் தொழிலாளர்களுடனும் மஹியாவை பகுதிவாழ் மக்களுடனும் தோழமை கொண்டு உறவாடி மகிழ்ந்தவர். யோ. பெனடிக்பாலன் அவர்களும் இதுபோல் எழுத்தால் மட்டும் முற்போக்காக அன்றி மஹியாவ பகுதிவாழ் மக்களுடன் அன்று இரண்டறக்கலந்து வாழ்ந்தவர்.

எழுபதுகளில் மாத்தளையில் பல காத்திரமான இலக்கிய அமர்வுகள் நடந்தன. நாளும் பொழுதும் ஏதோ ஓர் இலக்கிய விழா நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அதனை கண்ணுற்ற விமர்சகர் மு. நித்தியானந்தன் “மாத்தளையில் தான் இலக்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன” என்று வியந்து பாராட்டினார்.

இந்த எழுச்சி, இலக்கிய விழாக்கள் பேராசிரியர் எஸ். தில்லைநாதன், அரசியல் பேராசிரியர் அமரர் அம்பலவாணர். சிவராசா ஆகியோரையும் கவர்ந்திருக்க வேண்டும் அப்போது பாளவியூர் தேவதாசனை தலைமையாகக் கொண்டு இயங்கிய மாத்தளை தமிழ் இலக்கிய வட்டத்தினரே எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் பிரியாவிடைநிகழ்வினை நடாத்தும் சந்தர்ப்பத்தினை வழங்கினார்கள்.

இவ்விருபேராசிரியர்களின் வழிநடத்தலில் மாத்தளை பாக்கியவித்தியாலய அரங்கில் அகஸ்தியர் உள்ளம் குளிர பிரிவுபசார வைபவம் நடந்தேறியது. அப்போது மாத்தளை தமிழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராக கோட்டகொடை ரஹ்மான் ஆற்றிய பணி அளப்பரியது.

மாத்தளை கோம்பிலிவெல அடைக்கலன் கோணார் பெரியாரின் திராவிட இயக்கதின் வழி நடப்பவர். அகஸ்தியரின் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வடை, இனிப்பு பட்சணங்கள் தந்த போஷகராக விளங்கிய வாரிய பொல பெருந் தோட்டத்தின் தலைமைக்குமாஸ்தா திருவாளர் எஸ். இராஜமணி ஆவர் “ஆட்டுக்கடா வெட்டி” இரவில் தங்கிய எஸ். அகஸ்தியர் உட்பட அனைவருக்கும் விருந்துபசாரம் அளித்தார். மனம் நெகிழ்ந்த அகஸ்தியர் இராஜமணியின் அன்பு உபசரிப்பில் திளைத்த போதும் இராப்பொழுதில் இலக்கிய சந்திப்பினை வைத்திருக்கலாமே என வருத்தப்பட்டார். அந்தனிஜீவா என்னோடு நோர்த்மாத்தளைக்கு வந்தமை அவரின் கவலைக்கு காரணமாகும்.

இலங்கையின் பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் செ. கணேசலிங்கம் குமரன் சஞ்சிகையினை ஆரம்பித்து நடாத்திய பொழுது பலபுதிய எழுத்தாளர்கள் கவிஞர்கள் தோன்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இலக்கிய ஆர்வம் புதிய கண்ணோட்டத்தில் எழுந்தது. பாட்டில் புதிய பொறி, நெறி தெறித்தது.

இந்தபின்னணியில் மாத்தளை பாக்கியம் அரங்கு கவிமலர்களை தமிழன்னையின் பாதங்களில் சமர்ப்பித்தது. இதய நெருப்பெடுத்து இலக்கியம் படைத்த இம்மகாநாட்டினை ஆ.இராஜலிங்கம் மாத்தளை செல்வா (விக்கி) ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

திருகோணமலை கவிராயர், கவிஞர் சுபத்திரன், சில்லையூர் செல்வராசன், புதுவை இரத்தினதுரை, மலைத்தம்பி ஆகியோர் கவியரங்கினை அலங்கரித்தனர். “காக்காய் காக்காய் கருங்கால் காக்காய் நீ சென்று கவுடுப்பனை நீருற்றில் குளித்து...” என்று சுபத்திரன் பாடிய கவிதை இன்றும் நெஞ்சில் பதிந்துள்ளது.

(தொடரும்...)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.