புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

பெருந்தோட்;டப் பெற்றோரும்

பெருந்தோட்;டப் பெற்றோரும்

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும்

இலங்கையில் வாழும் சமூகங்களில் பெருந்தோட்ட சமூகத்தின் வரலாறு, சமூக அமைப்பு, அதன் மேம்பாடு போன்ற விடயங்களில் ஏனைய சமூகத்துடன் ஒப்பிடுகையில், இன்னும் முன்னேற்ற மடைய வேண்டியிருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

உலக வளர்ச்சிக்கு ஏற்ப எமது சமூகமும் போட்டிபோட்டு வாழ்ந்தாலும் மட்டுமே ஒரு தரமான சமூகமாக வாழும் என்பதை எவரா லும் மறுக்க முடியாது. ஒரு சமூகத் தின் விடிவு அது பெற்றுக்கொண்ட கல்வியிலேயே தங்கியுள்ளது.

பெருந்தோட்டப் பிரதேச கல்வித்துறையைப் பொறுத்தவரையில் கல்வித்துறையானது வளர்ச்சியடைந்து வருகிறது. தரம் ஒன்றில் மாணவர்களின் சேர்வு வீதம் அதிகரித்து காணப்படுகிறது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் சித்தியடைகின்றனர். க.பொ.த. சாதாரண பெறுபேறுகள் 30 வீதத்திலிருந்து 55 வீதம் வரை உயர்ந்திருக்கிறது. அதேபோல் க.பொ. உயர்தரத்தில் வர்த்தகம், கலை ஆகிய பாடங்களில் மாணவர்களின் பெறுபேறுகள் ஓரளவு திருப்தியைத் தரக்கூடியதாக இருப்பினும் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் போதிய பெறுபேறுகளைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோருக்கு சம பங்கிருக்கிறது. என்னதான் ஆசிரியர்கள் என்னதான் கஷ்டப்பட்டு படிப்பித்தாலும் அதனை கிரகித்துக்கொள்வதற்கான ஆற்றல்கள் பிள்ளைகளிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

பிள்ளைகளை ஆரம்ப வகுப்பில் சேர்த்துவிட்டால் மட்டும் போதாது. அவர்களின் கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பெற்றோர் முன்வரவேண்டும். இவ்விடயத்தில் பல பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சில பிள்ளைகளின் பெற்றோர் இரண்டு மனைவிமாருடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற னர். முதலாம் தாரத்தின் பிள்ளைகளை அவர்கள் கண்டுகொள்ளாமல் இரண்டாம் தாரத்து பிள்ளைகளின் நலனில் கூடிய அக்கறையுடன் செயற்படுகிறார்கள். இன்னும் சிலர் வேறொரு பெண்ணுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு அவர்களுக்காக செலவு செய்கின்றனர் என்பது வேறு விடயம்.

ஏற்கனவே வறுமை, மந்தபோசணை, அதிக பிள்ளைகள் ஒரு லயன் அறைக்குள் வாழ்வதால் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அத்துடன் மதுபாவனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடுகிறது. பெற்றோர் தமது பிள்ளைகளை முறையாகவும் நேர்த்தியாகவும் கவனிக்காதபோது அவர்கள் படும் வேதனைகளை யாரிடம் சொல்வார்கள்?

வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும்போது பல பிள்ளைகளிடம் அப்பியாசக் கொப்பி, பேனை, பென்சில் போன்ற கற்றல் உபகரணங்கள் எதுவும் இல்லாமலே வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மாணவர்களின் தேவைகளை அந்த நிமிடத்திலேயே நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருப்பர்.

சில பிள்ளைகள் தாயின் பாதுகாப்பில் இல்லாதபோது சிறிய தாயார் அல்லது தமது பாட்டனார், பாட்டி போன்றோரின் அரவணைப்பில் வாழ்கின்றனர். சில வீடுகளில் பிள்ளைகளை முறையாக கவனிக்காமல் விடுவதால் பெண் பிள்ளைகள் வழிதவறி நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. லயன் அறைகளில் வாழும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதபோது பல விபரீதமான விடயங்கள் நடைபெறுவதற்கான சூழல் காரணமாகிவிடுகிறது.

இந்நிலையில் சிறுவர் நலனில் அக்கறை செலுத்தும் பொதுநல அமைப்புக்கள், சிறுவர் பாதுகாப்பு, அபிவிருத்தி அதிகார சபை, சிறுவர் கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் பெற்றோர்களாலேயே கைவிடப்படும் சிறுவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.