ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
மேல், மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் வரட்சி

மேல், மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியுடன் கூடிய காலநிலை காணப்படும் சூழலில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக 100 மில்லிமீற்றர் மழை பதிவாகக் கூடும் என்றும் வழிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களிலேயே மழைவீழ்ச்சி அதிகரிக்குமென்றும் சில இடங்களில் தற்காலிகமாக கடும்காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் தொடர்பாக மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம் கொழும்பு மற்றும் காலி ஊடாக புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மழை வீழ்ச்சி அதிகம் காணப்படும், இப்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 20 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வீசும், மன்னார் ஊடாக புத்தளம் முதல் காங்கேசன்துறை கடற்பரப்பில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றராகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மலையகத்தில் பனிமூட்டம்

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் நிறைந்திருப்பதால் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மலையகப் பகுதிகளில் தொடர்ந்து வரும் மழை காரணமாக மரக்கறி செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி