ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
வழிபடுவோருக்கு இஷ்டசித்திகளை வழங்கி அருளும் முன்னேஸ்வரம் முன்னைநாதர் திருத்தலம்

வழிபடுவோருக்கு இஷ்டசித்திகளை வழங்கி அருளும் முன்னேஸ்வரம் முன்னைநாதர் திருத்தலம்

tடமேல் மாகாணத்திலே சிலாபம் நகரிலிருந்து குருநாகலுக்குப் போகும் பாதையில் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலே ஸ்ரீமுனீஸ்வரம் என்னும் நாமம் பூண்டு சிறப்புற்றோங்கும் ஒரு திவ்ய ஷேத்திரமுண்டு.

அந்த ஷேத்திரத்தின் கண்ணுள்ள ஆலயத்தின் முன்பாக தாமரைகள் நிறைந்த தடாகங்களும் தம்மையடைந்தவர்கள் களைப்பை நீக்கும் மருதமரச் சோலைகளும் சூழ்ந்து விளங்குகின்றன. இத்திவ்ய ஷேத்திரம் கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் முதலிய ஷேத்திரங்களைப் போல சரித்திரப் பிரசித்திபெற்றது.

இந்தச் ஷேத்திரத்திலே வியாசமுனிவர் வந்து தமக்கும் நைமிசாரணிய முனிவர்களுக்கும் உண்டான வாக்குவாதத்தினால் அடைந்த துன்பத்தினின்றும் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் வியாச முனிவரிடம் நைமிசாரணிய முனிவர்கள் சிவமா, விஷ்ணுவா பரத்துவமுள்ளார் என வினவிய பொழுது வியாசமுனிவர் விஷ்ணுவே பரத்துவமுள்ளவரென்று கூறுதலும் நைமிசாரணிய முனிவர்கள் அதற்குடன்படாது நீர் ஸ்ரீகாசிஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் விஸ்வநாதசுவாமி சந்நிதானத்தில் வந்து உமது வலக்கையை உயர்த்திக் கூறுவீராயின் நாங்களுண்மையெனக் கொள்வோமென்று கூற அதற்கிசைந்து ஸ்ரீகாசியையடைந்து தமது வலக்கையையுயர்த்தி விஷ்ணுவே பரத்துவமுள்ளவரென்று கூறினார்.

அதைக்கேட்டிருந்த நந்தியத்தேவர் கோபங்கொண்டு உயர்த்தியகையை அவ்வாறு நிற்குமாறு சபித்தருள வியாசமுனிவர் கையைத் தாழ்த்திக்கொள்ள இயலாது வருந்தி “எம்பெருமானே அடியேன் மாயாசம்பந்தத்தினால் அறியாது செய்து கொண்ட பிழையைப் பொறுத்து என்னை இரட்சிக்க வேண்டும்” என்றார்.

ஈந்தருளுங் கருணாநிதியாகிய சிவபெருமான் அவ்வேண்டுகோளுக்கிரங்கி “ஏ வியாச, நீ இலங்கையிலே முன்னேசுரத்து விளங்கும் ஸ்ரீவடிவாம்பிகைச் சமேதராம் முன்னநாத சுவாமியைப் பூசிப்பாயாகில் உனது கரம் பழையபடி நீட்ட முடக்கக் கூடியதாக வரும்” என்று கூற, வியாசமுனிவர் பலகாலுந்தொழுது வணங்கி கிருதார்த்தனானேனென்று இலங்கையடைந்து ஸ்ரீமுன்னேஸ்வர சுவாமி சந்நிதானத்திலே மனம், வாக்கு, காயங்கள் ஒருமித்துப் பூசித்து அக்கடவுளை வேண்டிநிற்க அவர் மனமிரங்கிக் கரத்தைப் பழையபடியாகும்படி வரமருளினார்.

இராமபிரான் இராவண சம்மாரத்தின் பின் தன்னைத் தொடர்ந்த பிரமகத்தி தோஷத்தோடு இத்தலத்தையடைதலும் அப்பிரமஹத்தியா தோஷம் தம்மைத் தொடராது நீங்குதல் கண்டு பேரானந்தமுற்று முன்னநாத சுவாமியைப் பூஜிக்க அப்பெருமான் பிரசன்னமாகி பிரமஹத்தி தோஷ நிவாரணத்தின் பொருட்டுச் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யுமாறு அருளிச் செய்ய இராமபிரான் அவ்வாறு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப் பெற்றுள்ளது.

இந்த ஷேத்திரத்தில் விளங்கும் சிவாலயம் இலங்கையை அரசாண்ட ஆறாவது ஸ்ரீபராக்கிரமபாகு என்னும் அரசனால் திருப்பணி செய்யப்பெற்றது. இதற்கு நித்திய நைமித்தியங்களுக்காகச் சில கிராமங்களும் விடப் பெற்றிருந்தன.

இத்தகைய பல்வகைச் சிறப்பு வாய்ந்ததெனத் தெட்ஷணகைலாய மான்மியத்திலும் பிற சாதனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

முன்னைய காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட பொழுது அங்குள்ள விக்கிரகங்களை பரிசாரகர்கள் அதற் கருகாமையுள்ள மடுக்கரையென்னுந் தடாகத்தில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டுப் போனார்கள்.

இத்திவ்விய ஷேத்திரத்திலிருந்து குருநாகலுக்குப் போகும் வீதியில் தீர்த்தக் கடவையென இப்போதும் வழங்கி வரும் இடமே முன் சுவாமி தீர்த்தமாடுவதற்குப் போகிற இடமாக இருந்திருக்க வேண்டும். அவ்விடத்தில் பூங்காவனமென்று அழைக்கப்படும் ஓர் நந்தவனமிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

கண்டியை அரசாண்ட கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில் செம்படவர் அந்த மடுவிலே மீன்பிடிப்பதற்காகக் கரப்புக்குத்தி மீன் பிடிக்குந் தருணத்தில் அக்கரப்புக்குள் அகப்பட்ட சுவாமியுடைய விக்கிரகத்தைக் கண்டு அஞ்சி கண்டி அரசனுக்கு அறிவிக்க அவன் அந்த விக்கிரகத்தைத் தனது இராசதானிக்குக் கொண்டு போய் வைத்திருந்தான்.

இதைக் கேள்விப்பட்ட கப்புறாளை ஒருவர் மனம் வருந்திச் சுவாமியை வழிபட்டார். முனீஸ்வரர் அவருக்குக் கனவிலே தோன்றிக் கண்டியரசனிடம் கேட்பாயாகில் அவனாக விக்கிரகத்தைக் தருவான். நீ கொண்டு வந்து பழையபடி ஸ்தாபித்து வழிபடக்கடவா யென்றுரைத்தார். அவர் மகிழ்ந்து கண்டியையடைந்து அரசனிடம் போய் விக்கிரகத்தைத் தரும்படி கேட்க அவன் மறுத்து நீர் இன்னும் எட்டு நாட்கழித்து வந்ததால் தரவேனென கூறினான்.

மனம் வருந்தி நாளையெண்ணிக் கொண்டு அங்கேயிருந்தார். அரசன் அந்த விக்கிரகத்தை கொடுப்பதற்கு மனமொவ்வாது ஒருவித ஆலோசனை செய்து அதேமாதிரி ஆறு விக்கிரகங்களைச் செய்வித்துத் தனது சொல்லுக்கு மாறு செய்யாது கப்புறாளையுடைய வரவை எதிர்பார்த்திருந்தான்.

சுவாமி பழையபடி கப்புறாளைக்குக் கனவிலே தோன்றி அரசன் உன்னை மாறுபாடு செய்யக் கருதி அதேமாதிரி ஆறு விக்கிரகம் செய்து வைத்திருக்கிறான். நான் உனக்குத் தெரியும் படியாக ஒரு நெல்லிடை மற்ற விக்கிரகங்களிலும் முந்தி யிருப்பேன்.

நீ அதைக் கண்டு என்னை எடுத்துக்கொள்ளக் கடவா யென்று கூறி மறைந் தருளினார்.

கப்புறாளை மனமகிழ்ந்து சுவாமியைப் பலமுறை யுந்துதித்து மறுநாள் உதயத்திலெழுந்து கடவுளை வழிபட்டு அரசன் சந்நிதானத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அரசன் “நீர் தேடிய விக்கிரகம் இங்கே உள்ளது. அங்கேபோய் மறு விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு வருவீராக” என்று கூறினான். அவர் மனமகிழ்ந்து அரசனை வணங்கி விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும் மறையிலே போய்ப் பார்த்தார்.

அங்கே ஒரே மாதிரியான விக்கிரகங்கள் ஏழு இருப்பதைக் கண்டு கடவுளைத் தியானித்து அக்கடவுளுக்கு முன்னே அஸ்டாங்க தெண்டம் சமர்ப்பித்துப் பார்த்த பொழுது முனீஸ்வர சுவாமியுடைய அருளினால் அந்த விக்கிரகம் ஒரு நெல்லிடை முந்தியிருப்பதைக் கண்டு சந்தோஷித்தார். முனீஸ்வரருடைய விக்கிரகத்தையே தூக்கி அரசனிடம் கொண்டு போனார். அரசன் ஆச்சரியம் கொண்டு தானெண்ணிய எண்ணம் மாறானது கண்டான்.

கடவுளுடைய அனுக்கிரகம் இப்படியிருந்தால் அதற்கு தான் தடைசெய்யக்கூடாதென்று தேறுதலடைந்தார்.

விக்கிரகத்தைக் கொண்டு சென்று நித்திய நைமித்தியங்கள் வழுவாது ஆலயம் ஒன்று ஸ்தாபித்து அங்கே எழுந்தருளச் செய்து பூஜையைக் கிரமப்படி செய்வீராக என்று கூறினான். அரசனை வணங்கி பழையபடி விக்கிரகத்தைக் கொண்டு வந்து எழுந்தருளச் செய்து நித்திய நைமித்தியங்கள் வழுவாது செய்து வந்தனர்.

இத்தகைய பல்வகைச் சிறப்பு வாய்ந்த தெனக் கூறப்பெற்றுள்ளதும் வழிபடுவோ ருக்கு இஷ்டசித்திகளையும் இகபரசாதனங் களையும் அனுக்கிரகிக்கும் மூர்த்தி, தலம் தீர்த்தமென்னும் மூன்றுமொருங்கே சிறந்து விளங்கப் பெற்றுள்ளதும் ஒப்புயர்வில்லாததுமாகிய இம்முன்னேஸ்வர ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் முன்னைநாதர் என்னும் காரணப் பெயர் பெற்று வடிவழகியம்மாள் சமேதராய் விளங்கும் சிவபெருமானை வழிபடுவோர்க்கு எல்லா சுகமும் பரத்தில் மோட்சமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி