ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவு

2014 (உ.த) பரீட்சை பொருளியல் வினாத்தாள் சர்ச்சை

அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவு

உயர்தர பரீட்சையில் பொருளியல் வினாத்தாள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து அமைச்சரவைக்கு தெளிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக பிரதான பரீட்சை கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய பேராசிரியர் டெனி அத்தபத்து சேவையிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு பணித்துள்ளார்.

இதனையடுத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா. பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமாரவுக்கு ஐந்து பிரதான விடயங்களை ஆராய்ந்து ஒரு வாரத்துள் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் தமக்கு வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய தான் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன பரீட்சை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

01) ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேசிய பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தியின்படி “2013 உயர்தர பரீட்சையில் பொருளியல் வினாத்தாள் லண்டன் உ/த பிரதி” என்ற தலைப்பில் விபரங்கள் வெளிவந்திருந்தன. இதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையானவையா? அதில் குறிப்பிடப்பட்டதைப் போன்றே நடைபெற்றுள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

02) பேராசிரியரை (2014) இம்முறை வினாத்தாள் தயாரிப்பிலிருந்து நீங்குவதற்கு நீங்கள் எடுத்த தீர்மானம் குறித்தும் இதற்கு சாதகமான இருந்த காரணங்கள் எவை என்பது பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

03) 2014 ஆம் ஆண்டிலிருந்து பொருளியல் வினாத்தாள் தயாரிப்பு விடயத்தை மற்றுமொரு நிபுணரிடம் ஒப்படைக்க நீங்கள் எடுத்த முடிவினால் உங்களுக்கு. பரீட்சை திணைக்களத்துக்கு அரசின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

04) 2014 பொருளியல் வினாத்தாளில் பிழைகள், பிரச்சினைகள் இருப்பதாக சில ஆசிரியர் சங்கங்கள் ஊடகங்களூடாக தெரிவித்திருந்தன. இதன் உண்மை நிலை என்ன? அல்லது அவை பொய்யானவையா? என்பது பற்றியும் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

05) லட்சக் கணக்கான அப்பாவி மாணவர்கள் தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நேற்றும் இந்த பொதுப் பரீட்சையில் அவர்களது வாழ்க்கையில் வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்புவதை தடுக்க, இல்லாமல் செய்வதற்கு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உங்களால் பரிந்துரை செய்யக்கூடிய விடயங்கள் இருப்பின் அவை தொடர்பாக விளக்கமாக அறிக்கையிடல் வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனா பரீட்சை ஆணையாளருக்கு உத்தர விட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி