ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 
ஜனாதிபதி - சார்க் செயலாளர் நாயகம் கண்டியில் நேற்று சந்தித்து பேச்சு

ஜனாதிபதி - சார்க் செயலாளர் நாயகம் கண்டியில் நேற்று சந்தித்து பேச்சு

பொருளாதார ரீதியில் சார்க் நாடுகள் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து ஆராய்வு

பிராந்திய இளைஞர்களை ஒன்றிணைத்து செயற்படுவது குறித்தும் கவனம்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் (சார்க்) செயலாளர் நாயகம் அர்ஜூன் பாதூர் தபார், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கைக்கு முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சார்க் செயலாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்திருந்தார்.

இவ்வருடம் நவம்பர் மாதம் காத்மண்டூவில் நடைபெறவிருக்கும் 18வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் உறுதிப்படுத்தியிருந்தார்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்து இச்சந்திப்பில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

சார்க் உறுப்பு நாடுகளிடையே ஏற்படுத்த வேண்டிய இரண்டு முக்கிய முயற்சிகள் தொடர்பாக ஜனாதிபதி இச்சந்திப்பில் வலியுறுத்தியிருந்தார். சார்க் பிராந்திய நாடுகளில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து இப்பிராந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய வேண்டுமெனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது ஆலோசனை தெரிவித்தார்.

இது மட்டுமன்றி சார்க் பிராந்தியத்தில் உள்ள மத மற்றும் கலாசார தொடர்புடைய இடங்களுக்கிடையிலான வலைப்பின்ன லொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள், சார்க் செய லாளர் நாயகத்திடம் சுட்டிக்காட்டினார்.

சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையி லான ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்துவதுடன், பிராந்தியத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் சார்க் நாடுகள் பொருளாதார ரீதியில் பங்களிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் ஆராயப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி