ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

தன்னடக்கத்துடன் வாழ்ந்தால் துன்பமில்லை என்பதே சக்தி வழிபாட்டின் தத்துவம்

தன்னடக்கத்துடன் வாழ்ந்தால் துன்பமில்லை என்பதே சக்தி வழிபாட்டின் தத்துவம்

சுதுமலை ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 27ம் திகதி ஆரம்பம்

இந்தியாவில் தாய்த் தெய்வ வழிபாட்டின் தோற்றத் தைச் சிந்துவெளி நாகரிக வழிபாட்டுச் சின்னங்களிற் காண முடிகின்றது, சிந்துநதி மக்களது வழிபாட்டில் முதன்மை பெற்று விளங்கியது தாய்த் தெய்வ வழிபாடே என்பது ஆய்வாளர் பலரது கருத்தாகும்.

பெண்தெய்வ வழிபாடு அல்லது தாய்த் தெய்வ வழிபாடு மிகவும் புராதனமானது. பெண்தெய்வ வழிபாடு உலகெங்கிலும் காணப்பட்ட மைக்கான சான்றுகள் தொல்பொரு ளியலாளர்களினால் கொண்டு வரப்பட்டுள்ளன. தாயைத் தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மிகத் தொன்மையானது.

உயிருக்குயிரானவள் தாய், அவளே எல்லா வன்மையும் உடையவள் என்னும் கருத்துக்கள் நிலவியமையால் தாய் வடிவில் தாய்மார்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் அன்னையாக விளங்கும் பராசக்தியை முதன்மைத் தெய்வமாகக் கொண்டு எமது முன்னோர் வழிபடலாயினர்.

பக்தர்கள் எந்த வடிவில் வணங்கினாலும், எந்த வழியில் அணுகினாலும் பிம்பம் பரம்பிரம்மம் அந்தப் பக்தர்களுக்கு அருள் புரிவாரென்று கண்ணபிரான் பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் அம்பிகை பாலசுரூபிணியாகக் காட்சி தருகின்றாள். இதுவும் ஓர் அற்புத விளக்கத்தை நமக்கு அளிக்கின்றது. அம்பிகையின் வலக்கரத்தில் தாமரை மலர், இடக்கரம் குலமகள் பாங்கில் அடக்க ஒடுக்கத் தன்மையில் இருக்கின்ற ஓர் நிலை.

இத்தோற்றம் நிர்மலமான ஓர் பூவின் மென்மையோடு, தன்னடக்க உணர்வினோடு ஒருவர் வாழ்ந்தால் உலகில் துன்பமின்றி இன்புற்று வாழலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்குகின்றது. திருவண் ணாமலை, பஞ்சதலங்களில் ஒன் றாகும். அங்கு மஹோற்சவ நாளில் அம்பாள் சிவனுடன் இலிங்க வடிவில் காட்சி தந்து அடியார்களுக்கு அருள்பாலிக் கின்றாள்.

சிவபெருமான் சக்தியாலே உரு வத்தை எடுத்துக்கொண்டார். சிவத் திற்கு உருவத்தை தந்தது சக்தி ‘ஓர் நாமம் ஓர் உருவம் ஒன்று மில்லாருக்கு’ என்பது திருவாசகம். ஆண்டவனுக்கு சக்தி தான் வடிவம்.

சக்தி பல பெயர்களில் அழைக்க ப்படுகின்றாள். பார்க்குமிடமெல் லாம் கோயில்கள் நிறைந்து காணப்படும் தமிழ் நாட்டில் சக்திக்கென இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேல் தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்று. திருக்குடந்தை ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் மங்கள நாயகி, மந்திரபீடேசுவரி, மந்திரபீடதலத்தாள், வளர்மங்கை என்னும் திருநாமங்களுடன், உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடிவரை ஐம்பத்தொரு சக்தி வடிவ பாகங்களாக காட்சி அளிக்கின்றாள்.

மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரு சக்தி வடிவை மட்டும்கொண்டவை. இத்தலத்து அம்பாள் ஐம்பத்தொரு சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக அருள்பாலிக்கின்றாள். சக்தி பீடங்கள் அறுபத்து நான்கு என்பதாகவும் நூற்றெட்டு என்பதாகவும் கூறப்படுகின்றது.

பிரசித்தி பெற்ற பீடங்களில் ஒன்றான “காளஹஸ்தி” ஞானபீடத்தில் அருளாட்சி புரிபவள் ஞானமே வடிவான ‘ஞானப்பிரசுமீளாம்பிகை’. இது ஜாலந்தபீடம் என்றும் பிரசித்தி பெற்றுள்ளது. அம்பிகையின சக்திகளை விளக்கும் ஜாலந்தொரு சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

இலங்கையின் வடபால் உள்ள சுதுமலை கிராமத்தில் “சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள்” என்னும் திருநாமத்துடன் ஆதிபராசக்தி அருள்பாலித்த வண்ணம் கோயில் கொண்டருளியுள்ளாள்.

துன்பம் சூழ்ந்த நேரத்தில் பிரத்தியேகமாக தோன்றிக் காப்பவள் நம் தாய். அவள் “சாந்த சொருபியாக” புவனேஸ்வரி அம்பாள் என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள்.

இறைவன் அறிவு வடிவானவன். ஞானப் பொருளாக, அனுபவ வஸ்துவாக விளங்கும் இறைவனை அனுபவத்தால் உணர்த்தல் வேண்டும். நூலறிவால் அன்று, பரம்பொருள் எங்கும் பரந்திருக்கின்ற உணர்ச்சி எல்லோருக்குமிருந்தால், சூது, வாது, வஞ்சனை, பொய்கள் ஒன்றும் இருக்காது. எனவே, அருவ சக்தியாயிக்கும் அருள் நிலையம் ஆலயமாகும். மந்திரம், தோத்திரம், அபிஷேகம், அர்ச்சனை முதலியன அருட்சக்தியை சேமிக்கும் கருவிகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் முதலியன, அந்தச் சோதனா சக்தியை நாம் பெறும் உபகரணங்களாகும்.

ஓர் தாய் தனது பிள்ளைகளை பேதமில்லாமல் எப்படியெல்லாம் பார்வையிடுகின்றாளோ, அதேபோல், மிகப்பெரிய காரியங்களை சாதித்தவர்கள் அகட விகடம் செய்கின்றவர்கள் என்ற பேதமில்லாமல் நன்மையெல்லாம் நமது தாயாக இருந்து சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் காத்தருளுகின்றாள். அவளுக்கு மிருகங்கள், பட்சிகள், புல், பூண்டு என்ற பேதமில்லை. சகல ஜீவன்கள் பொருட்கள் யாவும் அவளது பார்வைக்குள்ளே அடங்குகின்றன.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பெருமானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தம் காளா மணி விளக்கே’

திருமூலர்- திருமந்திரம்

அம்பாளின் தேவஸ்தான புனராவஸ்தான பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் கடந்த (25.04.2014) வெள்ளிக்கிழமை நடைபெற்று மண்டலாபிஷேகம் 25.05.2014 வரை நடைபெற்றது.

இக்கோயிலின் வருடாந்த உற்சவம் இன்று 27. 05. 2014 (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவிருக்கின்றது.

அருள்மிகு சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் மனத் தூய்மையுடன் வழிபாடு செய்து முக்தியின்பம் அடைவோமாக.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி