ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

கல்முனை சுனாமி வீடமைப்புத் திட்டங்களில் சுகாதார சீர்கேடு

கல்முனை சுனாமி வீடமைப்புத் திட்டங்களில் சுகாதார சீர்கேடு

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுனாமிவீடமைப்புத் திட்டங்களில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.

கல்முனை குருந்தையடி தொடர்மாடி வீடமைப்பு திட்டம் , பாண்டிருப்பு மேட்டுவட்டை வீட்டுத் திட்டம், பெரிய நீலாவணை தொடர்மாடி வீடமைப்பு திட்டம் ஆகியவற்றில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன. இதனால் டெங்கு மற்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு இங்குள்ள மக்கள் ஆளாகிவருகின்றனர்.

இவ்வீட்டுத்திட்டங்களில் மலசலகூடக் கழிவுகள் நிரம்பிவழிவதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் முறையாக வழிந்தோட முடியாததால் வீட்டு முற்றங்களிலும் , பொது இடங்களிலும் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது.

தொடர்மாடி குடியிருப்புக்களில் பொருத்தப்பட்டுள்ள கழிவு நீர்குழாய்கள் வெடித்தும்,சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதனால் மேல்மாடியில் வசிப்போர் பயன்படுத்தும் நீர் கீழ்மாடியிலுள்ளவர்களின் மனைகளுக்குள் செல்வதால் தினமும் சண்டை, சச்சரவுகளும் இடம்பெற்று வருகின்றன.

மின்சார ஒழுக்கும் ஏற்படுகின்றது. மேலும் வெளியிடங்களில் இருந்து வரும் நபர்கள் பாண்டிருப்பு மேட்டு வட்டை வீடமைப்பு திட்டத்தில் மாமிசக் கழிவுகளை வீசிவிட்டுச் செல்கின்றனர்.

கல்முனை வடக்கு சுகாதார பணிமனையூடாக இக்குடியிருப்பு மனைகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர். கணேஷ்வரன் தெரிவித்தார்.

சுற்றாடலை துப்புரவாக வைத்திருப்பதில் பொதுமக்களும் அக்கறை செலுத்த வேண்டுமென வாசகர்குரல் வாயிலாக கோருகிறோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி