ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

சிவாஜpக்கு எஸ்.பி. பாடிய முதல் பாட்டு

சிவாஜpக்கு எஸ்.பி. பாடிய முதல் பாட்டு

ஞிமதி என் சுந்தரி படத்தில் வரும் “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடல் சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.

“ஆயிரம் நிலவே வா”, “இயற்கை என்னும் இளைய கன்னி” ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.

அந்தக் கால கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் டி.எம்.செளந்தரராஜன்தான் பாடிக் கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன், ஜெய்சங்கர். முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர் அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.

சிவாஜிகணேசன் நடித்த “சுமதி என் சுந்தரி” என்ற படத்தில் சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. “பொட்டு வைத்த முகமோ” என்ற அந்தப் பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன் தேர்ந்தெடுத்தார்.

“சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே” என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார் பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.

பொதுவாக பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.செளந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உட்பட அனைவரும் வியப்படைந்தனர். பாலுவை ஒரு தணி அறைக்கு அழைத்துச் சென்றார் சிவாஜி.

“பாலு எனக்குப் பாடப்போவதை நினைத்து உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு நான் உன் பாட்டைக் கேட்க வேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்” என்று கூறினார்.

சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.

சிவாஜியும் பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வ நாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிர மணியமும். பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.

சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான “சுமதி என் சுந்தரி” யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம். தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

“பொட்டு வைத்த முகமோ” பாடல் காட்சியில் பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார்.

சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார் பாலு.

படம் முடிந்ததும் எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். “பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்” என்று பாராட்டினர்.

1971 ஏப்ரல் 14 ம் திகதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து “சுமதி என் சுந்தரி” வெற்றிப்படமாக அமைந்தது.

தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கில் பின்னணி பாடகர்களில் “முடிசூடா மன்னன்” அவர்தான்.

வயதானதால் பாடுவதை குறைக்கலானார் கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடையூறு.

ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர் ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாது ஆந்திர ரசிகர்கள் ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர். தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு பாலு பாட நேரிட்டது.

இந்த சமயத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால் அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. “இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள் மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம்.

ஆனால் காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்” என்று பாலுவிடம் கூறினார் கிருஷ்ணா.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார் பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி