ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

வட்டிக்குப் பணம் பெற்று கடனாளியாகி இறுதியில் நிம்மதியைத் தொலைக்கும் அவலம்

வட்டிக்குப் பணம் பெற்று கடனாளியாகி இறுதியில் நிம்மதியைத் தொலைக்கும் அவலம்

கிழக்கு மாகாணத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை காரணமாக பணம் பெற்றுக்கொண்ட மக்கள் வீடு. வளவு, பொருட்கள், நகைகளை இழந்து வருகின்றனர்.

இச்செயற்பாடு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியமூன்று மாவட்டங்களிலும் பரவலாக நடைபெற்று வருகின்றது. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களில் அதிகமானவர் கள் அரச ஊழியர்கள் ஆவர்.

இவ்வட்டியானது நாள், வாரம், மாதம், ஆண்டு என கணிக்கப்பட்டு அறவீடு செய்யப்படுகின்றது. அரச நியதிச் சட்டத்திற்கு இணங்க வங்கிகள் ஒன்றரை சதவீதத்துக் குறைவாக வட்டி அறவீடு செய்கின்றன. ஆனால் வசதிபடைத்த தனியார் கம்பனிகள், நகை மாளிகை போன்றவற்றால் ஐந்து தொடக்கம் பதினைந்து வீதம் வரை வட்டி அறவீடு நடைபெறுகின்றது.

இந்த வட்டியை பெற்றுக் கொள்ளும் வசதிபடைத்தவர்கள், அரச ஊழியர்கள் சமூகத்தில் செல்வந்தர்களாக மிளிர்கின்றார்கள். இவர்கள் வட்டிக்குப் பணம் கொடுக்கும்போது வீடு, வீட்டுடன் கூடிய காணி, நெற் செய்கைக் காணி, தோட்டக் காணி போன்றவற்றை நொத்தாரிசைக்கொண்டு எழுதி எடுத்துக்கொண்டு உரியவருக்கு பணத்தைக் கொடுக்கின்றார்கள்.

அப்படி எழுதிக் கொடுக்காதவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றார்கள். கடன் கொடுக்கும் போது நொத்தாரிஸ் கட்டணமும் அறவிடப்படுகின்றது. நொத்தாரிஸ் கட்டணத்துடன் மொத்தத் தொகைக்கும் வட்டி கணிக்கப்படுகின்றது.

இன்னும் சிலர் நகைகள், துவிச்சக்கர வண்டிகள், கையடக்கத் தொலைபேசிகள். வாகனங்களின் ஆவணப் புத்தகம். அடையாள அட்டைகள் போன்றவற்றை வைத்தும் வட்டிக்கு பணம் பெறுகின்றார்கள். இவர்கள் ரூபா ஐம்பதினாயிரம் பணத்துக்கு உட்பட்ட தொகையைத்தான் இப்பொருட்களை அடைமானமாகக் கொடுத்து கடனைப் பெறுகின்றார்கள்.

குறைந்த தொகைக்கு நாள், வாரம், மாத வட்டிகளையும் ஒரு இலட்சத்துக்கு மேல் உள்ள தொகைக்கு ஆண்டு வட்டியும் வாங்குகின்றார்கள். இன்னும் சிலர் கஷ்டப்பட்ட வறிய பிள்ளைகள் வெளிநாடு செல்வதற்கு பணம் வட்டிக்குக் கொடுப்பார்கள். நம்பிக்கை அடிப்படையில் பேசி ஒரு இலட்சத்துக்கு (ஒரு வருடம் கழிந்த பின்) இரண்டு இலட்சம் வாங்கும் சிலரும் உள்ளனர்.

தமிழ்க் கிராமங்களில் அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து சம்பாதிப்பவர்களின் செயற்பாட்டினால் பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகள், பிணக்குகள், விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் சமூகத்தில் சீரழிவுகளும் இடம்பெறுகின்றன. இன்னும் சில குடும்பங்களில் வட்டிப் பணத்தை கேட்டு அவமானம் ஏற்படும் போது விரிசல் ஏற்படுகிறது. தம்பதியர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

மேலும் வட்டிக்கு பணம் பெற்றவர்கள் உரியவருக்கு பணத்தை குறித்த திகதிக்கு முன்னர் கொடுக்கத் தவறும் போது இப்பிரச்சினை பொலிஸ் நிலையம். இணக்க சபை, சிவில் பாதுகாப்புக் குழு, கிராம அபிவிருத்தி சங்கம். கிராம உத்தியோகத்தர் வரை கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வட்டிக்குப் பணம் பெற்றவர்கள் அவமானப்படுகின்றனர். இப்படி பணம் கொடுக்காவிட்டால் வட்டிக்காரர்கள் திட்டித் தீர்க்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணத்தை ஆட்டிப் படைக்கும் வட்டிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சமூகநல அமைப்புகள் முன்வர வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி