ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124

தன்னிகரில்லாத் தலைவரின் 44 வருட கால சாதனைகள்

தன்னிகரில்லாத் தலைவரின் 44 வருட கால சாதனைகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது அரசியல் வாழ்வில் நாற்பத்து நான்கு வருட காலத்தை இன்று பூர்த்தி செய்கிறார். சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பலவிதத்திலும் நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்து, எமது நாட்டின் கீர்த்தியை நிலைநிறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதுவரை ஆற்றிய மகத்தான பணிகளை இத்தருணத்தில் மீட்டுப் பார்ப்பது எமது நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவனதும் கடமையாகும்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மெதமுலன கிராமத்தில் புகழ்பூத்த குடும்பமொன்றில் பிறந்தவர் இவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தந்தையார் அமரர் டி. ஏ. ராஜபக்ஷ அவர்கள் விவசாயத்தையே தனது உயிர்நாடியாகக் கொண்டவர். அவர் அரசியல் பாதை மீது நாட்டம் கொண்டிருந்தவர் அல்லர். ஆனாலும் அவரது பிரதேச மக்களின் ஏகோபித்த வேண்டுகோள் காரணமாக அரசியலில் காலடியெடுத்து வைத்தவர் அமரர் டி. ஏ. ராஜபக்ஷ அவர்கள்.

மக்களின் நலனுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து அரசியல் பணி புரிந்து வாழ்ந்த அமரர் டி. ஏ. ராஜபக்ஷ அவர்களின் புதல்வனான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் தந்தையின் வழியைப் பின்பற்றி அரசியல் வாழ்வில் காலடி பதித்தார். 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பெலியத்தை தொகுதியில் போட்டியிட்டு பெருவெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக சபைக்குள் பிரவேசித்த போது அவர் 24 வயது இளைஞராக இருந்தார்.

வாலிப வயது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் மக்கள் நலனில் அவர் காண்பித்த அதீத அக்கறையானது மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மக்கள் நாயகனாக உயர்த்தியது. மக்கள் பணியும் பொதுநலன் சார்ந்த தொண்டுகளும் அவரை அரசியலில் உயர் பதவிகளுக்கு உயர்த்திக் கொண்டே வந்தன.

பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில் இடம்பிடித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சராக, பிரதமராக பதவிகள் வகித்து இன்று இலங்கையின் தன்னிகரற்ற தலைவராக விளங்குகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றுடன் அரசியல் வாழ்வில் நாற்பத்து நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்து தனது மக்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இலங்கையில் முப்பது வருட காலம் நிலவிய கொடிய பயங்கரவாதத்தை முறியடித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டியமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிகப் பெரும் சாதனையென சர்வதேசம் பாராட்டுகிறது.

இலங்கையில் முப்பது வருட காலம் நிலவிய அநியாய உயிரிழப்புகளையும் உடைமை அழிவுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து மக்களின் வாழ்வில் அச்சத்தை அகற்றி நிம்மதியையும் எதிர்கால நம்பிக்கையையும் உருவாக்கிய ஒரேயொரு தலைவரென்ற புகழை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெறுகிறார். ஜனாதிபதி இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த விடுதலையை எமது மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் நோக்குமிடத்து அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க தேசமாக இலங்கை இன்று மிளிர்வதற்குக் காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கமே ஆகும். கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, வெளிநாட்டு நட்புறவு, விவசாயம், மீன்பிடித்துறை, ஏற்றுமதித் துறை என்றெல்லாம் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் எமது நாடு துரிதமான முன்னேற்றத்தை எட்டியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். இலங்கையில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதும், பொருளாதார முன்னேற்றம் உச்சத்தை எட்டியிருப்பதும் இன்றைய அரசாங்கத்தின் சாதனைகளென்பதை எவருமே மறுப்பதற்கில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் சிறப்பான அபிவிருத்தித் திட்டங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முட்டுக்கட்டைகள் உள்ளதையும் மறுப்பதற்கில்லை. எனினும் அனைத்துத் தடைகளையும் தாண்டி அரசாங்கம் தனது அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

ஜனாதிபதியின் திடமான மன உறுதியும் நாட்டு மக்கள் அளித்து வரும் பூரண ஒத்துழைப்புமே இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தி மிகு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்த தன்னிகரில்லாத தலைவனின் அரசியல் வாழ்வில் 44 வருடங்கள் பூர்த்தியடையும் இன்றைய தினத்தில் அவரை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் நாமும் ஒன்றிணைவதில் மகிழ்கிறோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி