ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

குட்டி பத்மினிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?

இந்தியில் நெஞ்சில் ஓர் ஆலயம்:

குட்டி பத்மினிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?

nலீஞ்சில் ஓர் ஆலயம் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, தமிழில் குட்டி பத்மினி நடித்த வேடத்தில் இந்தி குழந்தை நட்சத்திரம் நடிப்பதாக இருந்தது. ஆனால் முடிவில் குட்டி பத்மினிக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. காதலின் இலக்கணத்தை மூன்றே மூன்று கெரக்டர்கள் மூலம் நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன ஸ்ரீதர், இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர் ஆகிவிட்டார்.

இந்தப் படத்தின் வெற்றி, அதை இந்திக்கும் கொண்டு சென்றது. இந்தியில் அப்போது பிரபலமாக இருந்த ராஜேந்திரகுமார், மீனாகுமாரி நடித்தார்கள். ஸ்ரீதரே இயக்கினார். படத்துக்கு ‘தில் ஏக் மந்திர்’ என்று பெயர் வைத்தார் ஸ்ரீதர்.

தமிழில் செய்த அதே கெரக்டரை இந்தியிலும் குட்டி பத்மினியே செய்தார். ஆனால் இந்த கெரக்டரில் நடிக்க அவர் ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. அதுபற்றி குட்டி பத்மினி கூறுகிறார்.

ராஜேந்திரகுமார் இந்தியில் பிரபல நடிகர். தமிழ்ப் படத்தை பார்த்ததும் ஆர்வமாக நடிக்க ஒப்புக்கொண்டவர். நான் நடித்த குழந்தை கெரக்டரில் அப்போது இந்தியில் பிரபலமாக இருந்த ‘பரீதா’ என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.

ஸ்ரீதர் சாருக்கோ என்னைத்தான் அந்த கெரக்டரில் போடவேண்டும் என்று ஆசை. ஆனால், படத்தின் ஹீரோ விருப்பம் வேறு மாதிரி இருக்கிறதே. நாம் பணம் போடுகிறோம்.

ஆனால் நம் இஷ்டப்படி நடிகர்களை தேர்வு செய்ய முடியவில்லையே’ என்று அம்மாவிடம் வருத்தப்பட்டவர் உங்கள் பெண்ணையும் செட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள். ஆனதை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.

இந்திப் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தான் நடந்தது. செட்டுக்கு வந்ததும் நடிகை மீனாகுமாரியிடம் ஒட்டிக்கொண்டேன். அந்த என்ட்டிக்கு குழந்தை கிடையாது. அதனால் என் மீது அதிக பாசம் காட்டினார்கள். படப்பிடிப்பு இடைவேளையில் என்னைக் கொஞ்சிக் கொண்டிருப்பார்கள்.

அதே நேரத்தில் தமிழில் நான் நடித்த கேரக்டரில் அந்தப் பெண் பரீதாவே இந்தியில் நடித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதர் சாராலும் எதுவும் செய்யாத நிலை.

ஆனால் இந்த நிலைக்கும் ஒரு முடிவு வந்தது. நடிகர் மகமூத் (தமிழில் நாகேஷ் செய்த வேடம்) அந்தப் பெண்ணுடன் நடித்துக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில் காட்சி சரியாக அமையவில்லை. பரீதா 15 டேக் வரை போய்விட்டார். அப்போது டைரக்டர் ஸ்ரீதரை நோக்கிப்போன மீனாகுமாரி, என்னை சுட்டிக்காட்டி, ‘தமிழில் இந்தப் பொண்ணுதானே செய்தது. இதை ஒரு தரம் ட்ரை பண்ணிப் பாருங்களேன் என்றார்.

இப்படியொரு வாய்ப்பைத்தானே ஸ்ரீதர் சேர் எதிர்பார்த்தார். இப்போது அந்த சீனில் நான் நடித்துக்காட்ட வேண்டும். காட்சி ஓகே என்றால் தொடர்ந்து நானே நடிக்கலாம். ஸ்ரீதர் சாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த டைரக்டர் மாதவன், டைரக்டர் சி.வி. ராஜேந்திரன் இருவரும், ‘ஒரே டேக்ல ஓ. கே. பண்ணிடு தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்று’ என்றார்கள். நான் அந்தக் காட்சியை ஒரே டேக்கில் சரியாகச் செய்தேன். இப்படியாக நான்தான் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதர் சார் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது.

இந்தப் படத்துக்காக ‘பிலிமாலயாவின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது எனக்கு கிடைத்தது.

அப்போதெல்லாம் குழந்தை நட்சத்திரங்களுக்கென்று படத்தில் ஒரு பாட்டு நிச்சயம். நாங்கள் பாடாவிட்டாலும் எங்களை மையமாக வைத்தாவது பாட்டு இருக்கும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் தேவிகா என்னை தூக்கி வைத்துக்கொண்டு ‘முத்தான முத்தல்லவோ...’ என்று பாடுவார். ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எனக்கு 2 பாட்டுகள்.

‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்று 2 பாட்டுகளுமே மிகப் பிரபலம். நவராத்திரி படத்தில் சாவித்திரி என்னை வைத்துக்கொண்டு ‘சொல்லவா, கதை சொல்லவா’ என்று பாடுவார்.

நான் நடித்த முதல் கன்னடப்படம், முதல் மலையாளப்படம் இரண்டையுமே தயாரித்தவர் டைரக்டர் பி. ஆர். பந்துலுதான். இந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் நடிக்கும் ‘பேபி நட்சத்திரம்’ என்ற பெயர் எனக்கு வந்து சேர்ந்தது. 5 மொழிகளிலும் நடிக்க வேண்டி வந்தால் மொழிப் பிரச்சினை அதாவது உச்சரிப்புப் பிரச்சினை ஏற்படவே செய்யும்.

அதைத் தவிர்க்க, அம்மா எனக்கு ஒவ்வொரு மொழியிலும் ‘டிஷன்’ வைத்தார்கள். அந்தந்த மொழியின் உச்சரிப்பு முறைகளை அர்த்தத்துடன் புரிந்து நடிக்க இது உதவியாக இருந்தது.

‘நவராத்திரி’ படத்தில் நடிக்கும்போது நான் ரொம்ப சின்னக்குழந்தை. இதனால் ‘லஞ்ச்’ சமயத்தில் சாவித்திரியம்மாவே எனக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சாதம் ஊட்டி விடுவாங்கள்.

அப்போதெல்லாம் பிரபல நடிகைகளுக்குள் நடிப்பில் மட்டுமே போட்டி இருந்தது. நடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நல்ல தோழிகளாக இருப்பார்கள். ஒரு சமயம், வாகினி ஸ்டூடியோவில் நடந்த படப்பிடிப்பில் இருந்தேன்.

அங்கே நடந்த படப்பிடிப்புகளில் பத்மினி, சாவித்திரி, விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர் தனித்தனி செட்களில் இருந்தார்கள். ‘லஞ்ச்’ சமயத்தில் எல்லோருமே சாவித்திரியின் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஒன்றாகவே சாப்பிடுவார்கள். இன்றைய முன்னணி நட்சத்திரங்களிடம் இந்த அன்யோன்யம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

அது மாதிரி பத்மினி கேரளா போனால் சக நடிகைகளுக்கு புடவை எடுத்துக்கொடுப்பார். சாவித்திரி மும்பை போனால் விதவிதமான கொஸ்ட்லி ஹேண்ட்பேக் வாங்கி வந்து பரிசளிப்பார்.

சிறுவயதிலேயே ‘பேபி’ பத்மினி என்ற பெயரில் நடிக்க வந்து விட்டதால், என் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற கவலை அம்மாவுக்கு இருந்தது. அதனால் என்னை தி. நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் சேர்த்தார்கள்.

அங்கே, போதிய நாட்கள் நான் ஆஜராகவில்லை என்பதற்காக, திருப்பி அனுப்பி விட்டார்கள். அடுத்து ஹோலி ஏஞ்சல்ஸ் கொன்வென்ட் அங்கும் இதுதான் நடந்தது. இதனால் அம்மா ஒரு காரியம் செய்தார். காலையில் 7 மணிக்கு தானே ஷ¤ட்டிங் அதிகாலை 4 மணிக்கே என்னை எழுப்பி விடுவார்.

6 மணிக்கு இந்தி பிரசார சபாவில் நடந்த இந்தி வகுப்புக்கு அழைத்துப்போவார். ,இந்தியில் வலுவாக வளரத் தொடங்கியதற்கு, இந்த அதிகாலைப் பயிற்சி உதவிக்கரமாக இருந்தது. பின்னாலில் இந்தியில் ‘பி. ஏ’ தேறினேன்.

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி