ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்து தமிழ் சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்தவர்

மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்து தமிழ் சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்தவர்

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும் தலைசிறந்த இயக்குநருமான பாலு மகேந்திரா நேற்று முன்தினம் (பெப்ரவரி 13 ஆம் திகதி) மாரடைப்பால் காலமானார். சென்னை, சாலிகிராமம், இந்திரா நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொணடிருந்த பாலு மகேந்திராவிற்கு அன்று அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டொக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது.

பாலு மகேந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து அவரிடம் உதவியாளர்களாக பயின்ற இயக்குநர்கள் பாலா, ராம், பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, நடிகர் கருணாஸ் மற்றும் ஏராளமான உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்.

பாலு மகேந்திரா, ஒளிப்பதிவாளர், இயக்குனர், கதாசிரியர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர். 1939 மே 20 ஆம் திகதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற ஊரில் பிறந்தார்.

இயற்பெயர் மகேந்திரா. அங்குதான் வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமராவை பரிசாக வழங்கினார். பாடசாலை படிப்பை நிறைவு செய்த இவர், லண்டன் பல்கலையில் பி. எஸ். சி. பட்டப் படிப்பு முடித்தார். பின் புனேயில் சினிமேட்டோகிராபி படிப்பில் சேர்ந்தார். தங்கப் பதக்கத்துடன் படிப்பை நிறைவு செய்தார்.

படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி. கே. மூர்த்தி சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் ஈர்க்கப்பட்டார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. 1971 ல் மலையாள படமான ‘நெல்லுவில் ஒளிப்பதிவாளராக பணியை துவங்கினார். இப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கேரள அரசு வழங்கியது.

1976 வரை பல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 1977 ல் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம், இயக்குனர் அவதாரம் எடுத்தார். இப்படத்தில் கமலஹாசன், ஷோபா நடித்தனர். இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. சென்னையிலேயே 150 நாட்கள் ஓடியது. இப்படத்துக்காக ‘சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார்.

தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும், 1979 ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் ‘அழியாத கோலங்கள். பின், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம், சமீபத்தில் வெளியான தலைமுறைகள் உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார். இதில் மூன்றாம் பிறை திரைப்படம், படத்தில் நடித்த கமலுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு செய்யும் போது இயற்கையில் என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதையே பயன்படுத்துவார். இவரது படங்களில் பெரும்பாலும் நாயகிகள், கறுப்பு நிறத்தில் தான் இருப்பர். வித்தியாசமான இவரது பாணியை விரும்பிய பலர், இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வந்தனர். இயக்குனர் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் உருவானவர்கள்.

தலைமுறைகள் படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படத்தில் ‘தமிழை யாரும் மறக்காதீர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

ஐந்து முறை தேசிய விருது பெற்றவர். 1978 ல் கோகிலா, 1983ல் மூன்றாம் பிறை, 1988ல் வீடு, 1990ல் சந்திய ராகம், 1992ல் வண்ண வண்ண பூக்கள், இயக்குனர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் ஆகிய அனைத்து துறைக்கும் விருது வாங்கியவர் இவர் ஒருவரே. மூன்று முறை பிலிம்பேர் விருது, கன்னட மாநில விருது, இருமுறை கேரள மாநில விருது, இருமுறை நந்தி விருது பெற்றவர்.

இலங்கை பிரச்சினையை ஏன் தொடவில்லை?

இலங்கையில் மட்டக்களப்பில் பிறந்த தமிழர் பாலு மகேந்திரா. ஆனால் இலங்கைப் பிரச்சினை பற்றி எதையும் அவர் தன் படைப்புகளில் பதிவு செய்யவில்லையே என்ற கேள்வியை பலர் அவர் முன் வைத்திருக்கிறார்கள். அதற்கு பாலு மகேந்திரா சொன்ன பதில்... பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விஷயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே என்றார். அந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை

சினிமாவைப் படைக்கும் தன்னை ஒரு உத்தமன் என அவர் எப்போதும் கூறிக்கொண்டது இல்லை. மற்றவர்களைப் போன்ற அழுக்கும் பொறாமையும் காதலும் காமமும் வன்மமும் தனக்கும் உண்டு. அது தன் படைப்பிலும் உண்டு என்பதை பேட்டிகள், மேடைகள், எழுத்துக்கள் என எதிலும் மறைத்ததில்லை அந்த படைப்பாளி.

தனது கடைசி படமான தலைமுறைகள் வெளியான பிறகு நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பாலு மகேந்திரா பேசியது, ‘எங்கள் ஊரில் மகனோ பேரப்பிள்ளைகளோ குழந்தைகள் பெற ஆரம்பிக்கும் போது தாத்தாக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்வர்.

என்னால் அது முடியவில்லை. அவரது பிள்ளைகள், பாலா, வெற்றி மாறன் (இயக்குனர்கள்) ஆகியோரும் (படங்களை) பெற்றுக் கொண்டிருக் கிறார்கள்.

நானும் பெறுகிறேன். இன்னும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றுவிட்டுதான் சாவேன் என்றார். ஆனால், சொன்னதை நிறைவேற்றும் முன்பே மறைந்து விட்டார்.

அப்போதே சொன்ன பாடல்:

பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி

இருக்கின்றதென்பது மெய்தானே...

பேதை மனிதனே... உடம்பு என்பது

கனவுகள் வாங்கும் பைதானே

- இந்த பாடலைப் படமாக்கிய கலைஞன் அவர்தான்

பாலு மகேந்திராவின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது உடல் வடபழனியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலுமகேந்திரா கிறிஸ்தவ மதத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் நேற்று அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப் பட்டது.

பாலுமகேந்திராவின் மறைவை கேட்டு ஏராளமான திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, கண்ணீர் விட்டு கதறி அழுது தன் அஞ்சலியை செலுத்தினார். இயக்குநர்கள் விக்ரமன், ராம், பாலா, நடிகர்கள் சந்திரசேகர், மனோஜ், நடிகை வீடு அர்ச்சனா, பாண்டியராஜன், அவரது மகன்கள், மோகன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ், கேயார், கே. எஸ். ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, பொன்ராம், பி. சி. ஸ்ரீராம், ஜீவன், செழியன், பிரியன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்

பாரதிராஜா பேசுகையில் :

இந்திய சினிமாவின் மிகப்பெரிய சொத்தை இழந்து விட்டோம் என்று கண்ணீர் விட்டபடி கூறினார்.

சினிமாவின் தந்தையை இழந்துவிட்டேன் என நடிகர் மோகன் கூறினார்.

தமிழ் சினிமாவின் நடமாடும் பல்கலைக்கழகம் பாலுமகேந்திரா, அவரை நாம் இழந்துவிட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார்.

பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்,

பாலுமகேந்திரா இழந்ததற்கு இறப்பை சொல்வதைவிட பெற்றதற்கு நன்றி சொல்வது முக்கியம். பாலுமகேந்திரா அளித்த கொடை மிகப்பெரியது. இங்கே நன்றி சொல்லுதல் என்று கூட செல்லலாம். பாலு ரொம்ப திறமையானவர். அறிய மனிதர், உலக சினிமா கொண்டாடியவர், ஏற்கனவே வேறுயொரு பேட்டியில் சொல்லியிருந்தேன். இன்னும் நிறைய படங்கள் செய்யாமல் போனது எனக்கு திகைப்பு அல்ல வருத்தமே. தமிழ் சினிமா நன்றியுடன் பார்க்கிறது சீடர்களை தந்திருக்கிறார். அவரை வழியனுப்பும் நேரத்தில் அவருடைய சீடர்களையும் வரவேற்க வேண்டும். நன்றி பாலு.

பாலு மகேந்திராவின் மறைவையொட்டி நேற்று தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி