ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

டில்லி சட்டசபையில் அமளி; கெஜ்ரிவால் இன்று இராஜினாமா?

டில்லி சட்டசபையில் அமளி; கெஜ்ரிவால் இன்று இராஜினாமா?

டில்லி சட்ட சபையில் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்வேன் என்று அடம் பிடிக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக நேற்று காங். எம். எல். ஏ. க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபை வெளியே போராட்டம் நடத்தியதை அடுத்து காங். மற்றும் பா. ஜ. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

எந்தவொரு சட்டமும் பாராளுமன்றத்தின் அனுமதிக்கு பின்னரே நடைமுறைக்கு கொண்டுவரப்படும். ஆனால் டில்லி முதல்வர் சட்ட சபையில் தாங்கள் விரும்பும் இலஞ்ச ஒழிப்பு ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். இந்திய அரசியல் சட்டமைப்பின்படி இது ஒத்து வராதது என்றும், இதற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று டில்லி சட்டசபை துவங்கியதும், பா. ஜ., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மக்கள் எதிர்பார்ப்பை எதுவும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.

ராஜினாமா ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்ற முடியவில்லை எனில் தனது பதவியை கெஜ்ரிவால் இராஜினாமா செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

ஜன் லோக்பால் கொண்டு வந்தால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெறும் பேது தானாக ஆட்சி கவிழும். இதில் மக்கள் பக்கம் எங்கள் மீது தப்பில்லை என ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தங்களின் நிலையை எவ்வாறு விளக்கலாம் என டில்லி அரசியல் கட்சியினர் பாடம் படிக்க துவங்கி விட்டனர். ஜன் லோக்பால் கொண்டு வருவதற்காக தான் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கவும், எதையும் இழக்கத் தயாராக இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார் என்பது நினைவில் கூறத்தக்கது.

இந்நிலையில் நேற்று டில்லியில் பேட்டியளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘காங்கிரசும், பா. ஜ. வும் இப்படி இணைந்து ஒரே அணியில் செயல்படுவது வேறு எங்கும், முன் எப்போதும் இல்லாதது ஆகும். காங்கிரஸ் ஆம் ஆத்மியை ஆதரிக்கவில்லை. பா. ஜ. வை தான் ஆதரித்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு இன்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. காங்கிரசையும், பா. ஜ. வையும் இணைத்தது முகேஷ் அம்பானி தான். இன்று ஜன்லோக்பால் சட்டம் தாக்கலாகும்’ என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி