ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு

தெலுங்கானா சட்டம் தாக்கல் செய்யப்பட்டதா?

எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு

மக்களவையில் தெலுங்கானா தனி மாநில சட்டம் தாக்கல் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதில் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ‘சட்டம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இப்போது அது நாடாளுமன்றத்தின் சொத்து’ என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறினார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத், மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலும் கூட, மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் பிரதான எதிர்க் கட்சியான பா. ஜ., இந்திய கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், அ. தி. மு. க. போன்ற கட்சிகள் சட்டம் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளன.

இது தொடர்பாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எதிர்க் கட்சி தலைவர்கள் சபாநாயகர் மீரா குமாரை சந்தித்து சட்டம் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்று கூறினர். சபாநாயகரை சந்தித்த பிறகு சுஷ்மா அளித்த பேட்டியில், சட்டம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக அரசு கூறுகிறது. நாங்கள் அதை ஏற்க மாட்டோம்.

மிளகு ஸ்பிரே சம்பவம் நடந்த பிறகும் அவையில் நான் அமர்ந்திருந்தேன். ஸ்பிரே அடிக்கப்பட்டு இருப்பதால் உடல் நலம் பாதிக்கும் என்று அவை காவலர்கள் வந்து சொன்ன பிறகே வெளியே சென்றேன். அதுவரை சட்டம் படிக்கப்படவில்லை. சட்டம் தாக்கலை ஏற்பதாக உறுப்பினர்கள் யாரும் ‘ஆமாம்’ என்று சொல்லவில்லை என்றார். சட்டம் தாக்கல் சர்ச்சையை ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோன் ரெட்டிதான் முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், சட்டம் தாக்கல் செய்யப்பட்டதாக அரசு கூறுவது கேலிக்கூத்தானது.

அவையில் நடந்த வன்முறை சம்பவம் பத்து நொடியில் முடிந்துவிட்டது. சட்டம் தாக்கல் செய்யப்படவில்லை’ என்றார். ஆனால் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க போராடி வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திர சேகர ராவ், ‘சட்டம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’ என்று கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி