ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக ஒதுக்கீடு

ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக ஒதுக்கீடு

24 ஆம் திகதிக்குள் பதிலளிக்க மராட்டிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

100 கோடி ரூபா மதிப்பிலான நிலத்தை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி பதிலளிக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மும்பையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன தலைவர் வைபவ் கிருஷ்ணா என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது :-

அந்தேரியில் அரச பாடசாலை மற்றும் கிளப் ஆகியவை கட்டப்பட இருந்த இடத்தை மாநில அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு பெக்ஸ் பிலிம்ஸ் கல்வி சமூகத்துக்கு விற்பனை செய்தது. அதன் செயலதிகாரியாக மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பியுமான ராஜூவ் சுக்லா செயல்பட்டு வருகிறார். அந்த இடம் மிகவும் சொற்ப விலைக்கே, அதாவது 2 ஆயிரத்து 821 சதுர மீற்றர் நிலம் வெறும் 98 ஆயிரத்து 375 ரூபாவுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பின் விளையாட்டு மைதானம் கட்டப்பட இருந்த நிலம் 15 ஆண்டுகள் குத்தகைக்கு 6 ஆயிரத்து 309 ரூபாவுக்கு விடப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரு. 100 கோடி ஆகும். ஆனால் மாநில அரசு இதை முறைகேடாக ஒதுக்கீடு செய்து உள்ளது.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பெக்ஸ் பிலிம்ஸ் கல்வி சமூகம் சார்பில் ஒரு கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலத்தை மாநில அரசிடமே ஒப்படைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பெக்ஸ் பிலிம்ஸ் கல்வி சமூகம் தெரிவித்தபடி, அந்த நிலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதா என்பது குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் பதிலளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி