ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

மாத்தளை அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று சித்திரத் தேர்த் திருவிழா

மாத்தளை அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று சித்திரத் தேர்த் திருவிழா

'நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு, அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம், இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்' - என்று அன்னை முத்துமாரியை பாடிப் பரவினார் மகா கவி பாரதியார்.

அன்னை முத்துமாரிக்கு நம் இலங்கைத் திருநாட்டில் அருள் நிறைந்த புகழ்மிக்க வழிபாட்டுத் தலங்கள் பல உள. இவற்றுள் 'பன்னகமம்' என்னும் மாத்தளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தலை சிறந்ததாகும்.

திருமந்திரத்தில் திருமூலர் இலங்கையை சிவபூமி என்று குறிப்பிடுகின்றார். விஜயன் வடக்கே கீரிமலைச்சாரலில் அமைந்துள்ள திருத்தம்பேஸ்வரன் கோவிலையும் கிழக்கில் கோணேஸ்வர கோவிலையும் தெற்கில் சந்திரசேகர ஸ்வரன் கோவிலையும் வழிபட்டு திருப்பணி வேலைகள் பல செய்ததாக வரலாறு கூறுகின்றது.

சிவவழிபாட்டினைப் போன்றே சக்தி வழிபாடும் தொன்மையானது. சிந்துவெளியில் லிங்கவழிபாடு நிலைத்திருந்துள்ளது. சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் தாய்த்தெய்வம் சித்தரிக்கப்பட்டுள்ளது. முழுமுதற் பொருளாகிய இறைவனை சிவனாகவும் அவரின் சக்தியை பெண்ணாகவும் உருவகித்து வழிபடுவது இந்துகளின் தொன்மையான மரபு.

காஞ்சியில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், தில் லையில் சிவகாமியாகவும், திருக்கடவூரில் அபிராமியாகவும், முன்னேஸ்வரத்தில் வடிவாம்பிகையாகவும் பொலன்ன றுவையில் வானவன் மாதேவியாகவும், நெல்லையில் காந்திமதியாகவும், திருக்கேதீஸ்வரத்தில் கெளரியம் மையாகவும், திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்மையாகவும் விளங்கும் சக்தி பன்னகமமென்னும் மாத்தளையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியாகவும் எழுந்தருள்புரிகின்றாள்.

இன்று தமிழகத்திலும் கடல் கடந்த மலேசியா, ரியூனியன், கரிபியன் தீவுகளிலெல்லாம் அன்னையின் முக்கிய திருக்கோலமாக விளங்குவது மாரியம்மன் திருக்கோலமே ஆகும்.

ஐரோப்பியரின் ஆள்புலப்படச்சியின் போது புலம்பெயர்ந்த தமிழக கிராமவாசிகள் எங்கெல்லாம் புலம் பெயர்ந்தார்களோ அங்கெல்லாம் அருள்மிகு அன்னை முத்துமாரியையும் அழைத்துக்கொண்டே சென்றனர்.

மாரி என்றால் மழை. மழையைப் போன்று வெப்பத்தை தணிப்பவள். வெப்ப நோய்களான அம்மை, வைசூரி போன்றவற்றை தீர்த்து வைப்பவள். நல்மழை பொழிந்து பயிர் பச்சைகளை செழிக்கச் செய்து மக்களையும், கால்நடைகளையும் காப்பவள். அம்பிகையை மாரி மகமாயி என்றழைப்பர். மாரி மகமாயி மழைக்குரிய தெய்வமாக கொள்ளப் படுகின்றாள். கைமாறு எதிர்பாராமல் மழையாக பொழிவது மேகத்தின் தன்மையாகும். மாரியின்றி பயிர் இல்லை. பயிர் இன்றி உயிர் இல்லை. மழை மேகமாக உயிர்களுக்கு அருளை பொழிவாள் என்று பக்தர்கள் அம்பிகையை துதிக்கின்றனர்.

தஞ்சையில் காத்தாயி அம்மன் கரகத்தில் ஆவாதனம் செய்யப்பட்டுள் ளாள். மாரியம்மனின் போர்க்கோல வடிவமாக மகாசூரனை அழித்த வடிவத்தை புராணக் கதை கூறுகின்றது. அம்மை தீயோரை அழித்து நல்லோரைக் காத்தமை அதன் வாயிலாக விளக் கப்பட்டுள்ளது. மாரியம்மனின் திரு வுருவத்தில் நான்கு கரங்கள் உள்ளன. இந்நான்கு கரங்களில் கபாலம், கத்தி, பாசம், உடுக்கு ஆகிய நான்கு பொருட்களை ஏந்தியுள்ளாள். இதில் உடுக்கு என்பது படைத்தல் தொழி லையும், கபாலம் அழித்தல் தொழி லையும் உணர்த்துகின்றன. கையில் ஏந்திய பாசம் உயிர்கள் தீய நெறிகள் செல்லாதவாறு தடுக்கவும், அநீதிகளை அழித்து ஒழிக்கவும் பயன்படுகின்றன.

மக்களின் வரலாற்றுடன் இணைந்த (ஓர்) ஆலயம் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமாகும். மாரியம்மனிடம் அடைக்கலம் புகுந்து மலைநாட்டில் அடியெடுத்து வைத்த வர்கள் அப்பகுதி மக்களின் மூதா தையர்கள். தமிழக கரையிலிருந்து படகுகள் மூலம் ஆபத்தான கடலைக் கடந்து பயங்கர கானகங்களுக்கிடையே கொடிய பயங்கர மிருகங்களின் தாக் குதல்களுக்கு உட்பட்டு கால்நடையாக நடந்து; தேய்ந்து நோய் வாய்ப்பட்டு செத்து மடிந்தோர் போக, எஞ்சியோர் குற்றுயிரும், குலைஉயிருமாக தப்பி வந்து காலடிகள் வைத்து அடைக்கலம் புகுந்தது மலையகத்தில் வடக்கு வாயிலில் வீற்றிருக்கும் அன்னை முத்துமாரியம்மன் ஆலயமாகும்.

இந்த ஆலயத்தில் அன்னை முத்துமாரிக்கு எடுக்கப்படும் விழாக்கள் பல. இவற்றுள் மாசி மகத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவே பிரசித்தமானதாகும். இன்று மாசி மகத்தில் சித்திரத் தேர்களாக அமைக் கப்பட்டுள்ள பஞ்ச இரதங்களின் பவனி கண்கொள்ளா காட்சியாகும்.

பஞ்ச இரதங்கள் முறையே விநா யகப்பெருமானும், வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமானும், சிவன் அம்பாளும், அன்னை முத்துமாரியம் மனும், ஸ்ரீ சண்டேஸ்வரியும் பவனி வந்து உலகமே போற்றும் தேர்த் திருவிழாவாக விளங்குகிறது.

மாசி மகம் சிறப்புடையது. தக்கன் உமாதேவியாரை மகளாக பெற தவம் செய்து வரம் பெற்றி ருந்தார். எனவே அம்பிகை காளிந்தி நதியில் ஒரு தாமரைப்பூவில் வலம்புரி சங்கு வடிவாக இருந்தாள். மாசிமகத்தன்று தக்கன் வேதவள் ளியுடன் நீராட வந்தபோது வலம்புரிச் சங்கை கண்டு எடுத்தான். அச்சங்கு அழகிய பெண் குழந்தையாக மாறியது. உமாதேவியாரே பெண் குழந்தையாக வந்த தினமாக மாசி மகத்தினிலேயே இங்கு தேர்த்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சஇரத பவனி அம்பிகை அழகிய மணிகள் குலுங்கும் சித்திரத் தேரிலே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். பஞ்ச இரதங்களும் மாத்தளை நெடும் வீதியிலும், இராஜ வீதியிலும் பூரண கும்பம், மாவிலை தோரணங்கள், தென்னேலை, கமுகு, வேப்பிலை, வாழை தோரணங்கள் அசைந்தாட பக்தர்களின் அரோகரா ஓசை எட்டுத் திக்கையும் நிறைக்க, அடியார்களின் கூட்டுப் பிரார்த்தினை, பஜனை பக்திப் பாடல்கள் ஒலிக்க கரகம், காவடி, கண்டிய நடனம், மயில் நடனம், கோலாட்டம், கும்மி என்பனவற்றை நங்கையரும், ஆடவரும் ஆடிவர தயாள குணம் படைத்த பெரியோர்கள் தண்ணீர் பந்தல்களையும், தான சாலைகளையும் அமைத்து பக்தர்களுக்கு உதவ பஞ்ச இரதம் அசைந்துவர பாவையர்கள் வடம்பிடிக்க மஞ்சுதவழ் மாத்தளையில் அன்னை முத்துமாரியம்மனின் மாசி மக இரதோற்சவம் இனிதே சிறந்திடும்.

வாரீர் வடம் பிடிக்க.... அம்பிகையின் அருள் பெற்றிடுவீர்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி