ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

பெருமைக்கு சொல்லாதே பொய்

பெருமைக்கு சொல்லாதே பொய்

கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. அதில், பயணம் செய்த குரங்கு ஒன்று தண்ணீரில் தத்தளித்தப் படி, உயிருக்குப் போராடியது.

அங்கே வந்த டொல்பின் ஒன்று குரங்கின் நிலையைப் பார்த்தது.

“குரங்கே! என் முதுகில் அமர்ந்துகொள். உன்னைப் பாதுகாப்பான இடத்தில் விடுகிறேன்," என்றது.

குரங்கும் அதன் முதுகில் ஏறி அமர்ந்தது.

டொல்பின் நீந்தத் தொடங்கியது. நீண்ட நேரம் நீந்தியதால் அது களைப்பு அடைந்தது.

அருகில் இருந்த தீவு அதன் கண்ணில் பட்டது.

“மனிதர்களோ, விலங்குகளோ இல்லாத தீவு அது. சிறிது நேரம் அங்கே ஓய்வு எடுப்போம். பிறகு குரங்கைச் சுமந்து சென்று மனிதர்கள் உள்ள இடத்தில் விடுவோம்" என்று நினைத்தது.

மெல்ல நீந்திய அது அந்தத் தீவின் கரையை அடைந்தது.

தீவைப் பார்த்தது குரங்கு.

மகிழ்ச்சியாக கத்தியபடி தீவிற்குள் ஓடத் தொடங்கியது.

“குரங்கே! எங்கே ஓடுகிறாய்?" என்று கேட்டது டொல்பின்.

“தன்னைப் பற்றி டொல்பின் பெருமையாக நினைக்க வேண்டும்" என்று நினைத்தது குரங்கு.

“டொல்பினே! இளவரசனான நானும், இந்தத் தீவின் இளவரசனும் நெருங்கிய நண்பர்கள். நான் பலமுறை இங்கே வந்திருக்கிறேன். எனக்கு இங்கே வயிறு முட்ட விருந்து தான்," என்று அளந்தது.

“நீ இளவரசன் அல்ல. இன்று முதல் இந்தத் தீவின் அரசனே நீதான்," என்றது டொல்பின்.

“நான் இந்தத் தீவின் அரசனா? எதனால் அப்படிச் சொல்கிறாய்?" என்று மகிழ்ச்சியுடன் கேட்டது குரங்கு.

“தீவிற்குள் செல். நீ அரசனானது உனக்கே தெரியும்," என்ற டொல்பின் தண்ணீருக்குள் மூழ்கி மறைந்தது.

குதித்தபடி தீவிற்குள் சென்றது குரங்கு. அங்கே மனிதர்களோ, விலங்குகளோ இல்லை என்பதை அறிந்தது.

“பெருமைக்காக பொய் பேசி இந்தத் தீவில் சிக்கிக் கொண்டேனே... இங்கிருந்து வெளியே செல்ல வழி இல்லையே. நாம் பொய் பேசியதற்கு இந்த தண்டணை தேவைதான்" என்று அழுது புலம்பியது.

சிறுவர்களே இதற்குத்தான் பெருமை, பொய் இவைகளெல்லாம் கூடவே கூடாது!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி