ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

தேசத்தைக் கட்டியெழுப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு ஒன்றுபடுவோம்

தேசத்தைக் கட்டியெழுப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு ஒன்றுபடுவோம்

‘எமது தாய்நாட்டின் 66 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில் இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிக்காக எமது ஒற்றுமையுடன் கூடிய பங்களிப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.’ என பிரதமர் தி. மு. ஜயரட்ன விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கடந்த எட்டு வருட ஆட்சிக் காலத்தினுள் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாக முன்னேற்றமடைந்துள்ள காலகட்டத்தில் இலங்கையானது தனது 66 வது சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடு கின்றது.

எக்காலத்திலும் தோற்கடிக்கப்பட முடியாதென எண்ணிய குரூர பயங்கரவாதம் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டதுடன், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதன் காரணமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை ஈட்டிக்கொடுத்துள்ள பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

யுத்தத்தினால் பாதிப்புக்குட்பட்ட வடக்கு, கிழக்கு பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான பெளதீக மற்றும் சமூக ரீதியான திட்டங்கள் பல அப்பிரதேசங்களில் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கும் புனர்வாழ்வளிப்பதற்கும் ஒரு குறுகிய காலத்தினுள் முடியுமாகியது.

விவசாயம், மீன்பிடி மற்றும் சிறுகைத்தொழில் போன்ற துறைகளை மீண்டும் உயிர்ப்பித்ததன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வட மாகாண சபையை அமைப்பதற்காக 2013, செப்டெம்பர் மாதம் தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடிந்ததனால் அது நாட்டில் வாழும் பல இனத்தவர் களிடையேயும் நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கான திருப்புமுனையாக அமைந்தது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தூரநோக்குள்ள தலைமைத்துவத்தின் கீழ் இந்த எட்டு வருட காலத்தினுள் சக்தி வள உருவாக்கம், நீர் வழங்கல், நீர்ப்பாசனம், கப்பற் துறை, விமானப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து வீடமைப்பு போன்ற பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அடிப்படையாகக் கொண்ட பாரிய அளவிலான சில கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதனை சிறப்பான விடயமாகக் குறிப்பிடலாம்.

நுரைச்சோலை மற்றும் மேல் கொத்மலை மின்சார திட்டம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு - தெற்கு துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம், அதிவேகப் பாதைகள் இந்தக் கருத்திட்டங்களுள் அடங்குகின்றன. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை ஓர் உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டுவரும் நோக்கில் பொருளாதாரத்தின் புதிய துறைகளாகக் கருதப்படும் கடல், ஆகாயம், கல்வி, வர்த்தகம் மற்றும் சக்தி வளம் போன்ற ‘புதிய ஐம்பெரும் சக்திகள்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

உல்லாசப் பயணிகள் அதிகளவில் இந்த நாட்டுக்கு வருகை தரத் தொடங்கியதுடன், அத்துறையில் முன்னெப்பொழுதுமில்லாதவாறு முன்னேற்றத்தினைக் காணக்கூடியதாக இருப்பதுடன் அதனால் ஹோட்டல் தங்குமிட வசதிகளும் அதிகரித்துள்ளன. நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நிர்மாணத் துறையில் ஒரு மறுமலர்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

பிரதான நகரம் மற்றும் சிறிய நகரங்கள் அழகுபடுத்தப்படுவதானது தேசிய மற்றும் சர்வதேச உல்லாசப் பயணிகளின் மனதை கவர்ந்தெடுப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அரிசி உற்பத்தியில் இந்த நாடு தன்னிறைவு கண்டுள்ளது. நாட்டினுள் வறுமை மற்றும் தொழிலின்மை 5% தினைவிட கீழ் மட்டத்தில் காணப் படுகின்றது. தற்போது, இலங்கை மத்தியதர வருமானம் பெறும் ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டாகும் போது தனிநபர் வருமானத்தை 4000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துக் கொள்வதே எமது நம்பிக்கைமிக்க எதிர்பார்ப்பாகும்.

2013, நவம்பர் மாதம் இங்கு நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்காக எமது நாடு வழங்கிய சிறப்பான அனுசரணை காரணமாக பல்வேறு துறைகளில் நாம் பெற்றுக் கொண்டுள்ள சிறப்பான முன்னேற்றத்தினை சர்வதேசத்திற்கு எடுத்தியம்புவதற்கு எம்மால் முடியுமாகியது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஒரு சிறிய காலத்திற்குள் பல்வேறு துறைகளில் நாடு என்ற வகையில் நாம் பெற்றுக்கொண்டுள்ள பாரிய முன்னேற்றமானது இங்கு வருகை தந்த அரச தலைவர்களின் ஆச்சரியத்திற்குக் காரணமாக அமைந்தது.

மேலும், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு அதன் தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டமையானது நாம் பெற்றுக்கொண்ட பெரு வெற்றியாகும்.

பொருளாதார சமூக மற்றும் கலாசாரத் துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி ஒரு சிறிய காலத்திற்குள் ‘ஆசியாவின் ஆச்சரியமாக’ மாறுவதற்கு துணைபுரியும் இன்னும் பல்வேறு கருத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இத் தேசத்தை நேசிக்கும் மக்கள் என்ற வகையில் அதற்கான பங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் அர்ப்பணிப்பினையும் இந்த அரசாங்கத் திற்குப் பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி