ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

கொள்ளையடிக்க சென்ற போது என்னைப் பாதுகாக்கவே குத்திக் கொலை செய்தேன்

ஊடகவியலாளர் மெல் கொலை விசாரணை:

கொள்ளையடிக்க சென்ற போது என்னைப் பாதுகாக்கவே குத்திக் கொலை செய்தேன்

சந்தேக நபர் வாக்குமூலம்

கொள்ளையடிக்கச் சென்றவரே தன்னை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்ததாக கொலையாளி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எதிர்பாராது இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக செய்வதறியாது, தான் கத்தியால் குத்திக் கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கொலையாளி ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மெல்ஷியா குணசேகரவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய செம்சன் ஜோசப் அன்தனி மிரிஹான பொலிஸாரி னால் சட்ட மருத்துவ அதிகாரி யிடம் நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன் பின்னர் மிரிஹான யிலுள்ள மேல் மாகாண தென் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ. ஏ. சுமித் எதிரிசிங்கவின் தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. சந்தேக நபரை கைதுசெய்த மிரிஹான குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஹால் கருணாரட்ன உட்பட அதிகாரிகள் கலந்துகொண்ட இதில் பொலிஸ் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :

ஏ. எப். பி. செய்தி சேவையின் ஊடகவியலாளரின் படுகொலை சம்பவமானது பெரும் பரபரப்பானதாகவும் மர்மமானதாகவும் இருந்தது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் விசாரணைகள் பல்வேறு கோணங்களில் முடுக் கிவிடப்பட்டன.

குற்றச் செயல்கள் நடைபெற்ற இடத்தில் உள்ள தடயங்கள் தொடர்பாக ஆராயும் (ஷிலிவிலி) விரல் அடையாள பிரிவு மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவிகள் பெறப்பட்டதன் மூலமும், எதிர்வீட்டின் சி. சி. ரி. வி. காட்சிகளின் உதவியுடனும் சம்பவம் நடைபெற்ற 12 மணித்தியாலத்திற்குள் குற்றவாளியை தடயங்களுடன் மடக்கி பிடிக்க பொலிஸாருக்கு முடிந்துள்ளது.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியதுடன் மேலும் பல்வேறு கதைகள் கூறப்பட்டது. அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது. இவ்வாறான கூற்றுக்களை முற்றாக மறுக்கின்றேன். ஏனெனில் சந்தேக நபர் உரிய நேரத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் உண்மை நிலை தெரிய வந்துள்ளது.

கொலையாளி பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இந்தக் கொலைச் சம்பவம் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளரின் வீட்டிற்கு கடந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் நிறப் பூச்சு வேலையில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் அந்த வீட்டின் நிலைகளை அவதானித்துள்ளதுடன் பிரதி ஞாயிறு தோறும் வீட்டில் உள்ள நான்கு பேரும் காலை 6.30 முதல் 11.30 வரை ஆராதனைக்காக தேவாலயத்திற்கு சென்று வருவதை தெரிந்து கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை எவரும் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட பத்தரமுல்லை சுபூதிபுரத்திலுள்ள மெல் குணசேகரவின் வீட்டின் பின்புறமாக திருகாணியை பயன்படுத்தி நுழைந்துள்ளார். வீட்டின் உள்ளே நுழைந்த அவர் அங்கு எதிர்பாராத நிலையில் மெல் குணசேகர இருந்துள்ளதை அவதானித்துள்ளார்.

மெல் குணசேகரவும் சந்தேக நபர் தமது வீட்டிற்கு பெய்ண்ட் வேலைக்கு வந்தவர் என்பதை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். இதனையடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு செய்வதறியாது சமையலறையில் மேசைக்கு மேல் இருந்த இரண்டு கத்திகளில் ஒன்றை எடுத்து மெல் குணசேகரவின் கழுத்து மற்றும் வாய் பகுதியில் ஆறு இடங்களில் வெட்டியும் குத்தியும் உள்ளார்.

தான் எதிர்பாராத விதத்தில் செய்த சம்பவத்தில் மெல் குணசேகர உயிரிழந்ததால் பதற்றமடைந்த சந்தேக நபர் தான் அணிந்திருந்த மஞ்சள் நிற ரீ-சேட் மற்றும் டெனிம் காட்சட்டையில் இரத்தம் படிந்ததை அடுத்து மெல் குணசேகரவின் சகோதரனின் கருப்பு நிற காற்சட்டையையும் நீல நிற சேர்ட்டையும் அணிந்துவிட்டு, மெல் குணசேகரவின் ‘பிளக்பெரி’ மொபைலையும் 1200 ரூபா பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கையடக்க தொலைபேசியை நிறுத்த தெரியாத அவர் அதன் பட்டறியை கழற்றி எறிந்து எடுத்துச் சென்றுள்ளார்.

இது இவ்வாறு இருக்க, விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட பொலிஸ் மோப்ப நாய் மெல் குணசேகரவின் வீட்டின் கதவிலிருந்து சிறிது தூரம் சென்று நடு எதிர் வீட்டிற்குள் அருகிலும் இருந்துள்ளது. அப்போது அந்த இடத்தில் சந்தேக நபர் சாப்பிட்ட வெற்றிலையின் ஒரு துண்டு இருந்துள்ளது. அதேநேரம் இந்த சம்பவம் எதிர் வீட்டின் சி. சி. ரி. வி. கமராவில் பதிந்துள்ளது. அதன் பிரதியை எடுத்து மெல் குணசேகரவின் பெற்றோரிடம் காண்பித்த போது இவர் வீட்டிற்கு நிறம் பூச வந்தவர் என்பதை உறுதி &:vஜி{மியிw.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸ் பரிசோதகர் நிஹால் கருணாரட்ன உடனடியாக தொம்பே பகுதிக்கு விரைந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கொலையாளியிடமிருந்து கையடக்க தொலைபேசியை மீட்டெடுத்துள்ளதுடன் சந்தேக நபர் அணிந்திருந்த உள் பனியனில் முழுமையாக இரத்தம் படிந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை. இதுவே முதல் சம்பவம். சந்தேக நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் இதுவரை எந்தவித முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.எனினும் பொலிஸில் பதிவுகள் இல்லாத போதிலும் சந்தேக நபர் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு நீதிமன்ற அனுமதியின் பேரில் 48 மணித்தியாலம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி