ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

ஒலுவில் கடலில் காணாமல் போனவரின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

ஒலுவில் கடலில் காணாமல் போனவரின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

ஒலுவில் கடலில் குளிக்கும் போது கடந்த சனிக்கிழமை கடல் அலையில் அள்ளுண்டு கடந்த மூன்று தினங்களாக தேடப்பட்டு வந்தவரது சடலம் நேற்று (03) கண்டெடுக்கப்பட்டது.

ஒலுவில் பிரதேச கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் குழுவிலிருந்து ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டும், உயிருக்காகப் போராடிய இரு இளைஞர்கள் பிரதேச மீனவர்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம், கடந்த சனிக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் ஒலுவில் பிரதேச கடற்கரையில் இடம்பெற்றது. நண்பர்கள் ஏழு பேர் கடலில் நீராடச் சென்ற வேளையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏனைய நண்பர்கள் நீராடுவதற்காக ஆடைகளை மாற்றும் வரையில் மூன்று பேர் கடலில் குதித்து ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்கென போடப்பட்ட கற்களில் ஏறிப் பார்ப்பதற்காக நீந்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் நீந்திச் செல்கின்ற வேளை வேகமாக நீரோட்டம் இருந்ததனால் இந்த மூன்று இளைஞர்களையும் நீரடித்துச் சென்றுள்ளது.

இதனை தரையில் அவதானித்துக் கொண்டிருந்த நண்பர்கள் கூக்குரலிட்டு காப்பாற்ற முற்பட்ட வேளை அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் ஒரு இளைஞர் வேகமான அலையில் அள்ளுண்டு சென்றதனால் மீனவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

மத்திய கிழக்கு நாட்டிற்கு தொழில் வாய்ப்பிற்காகச் சென்று அண்மையில் நாட்டிற்கு வந்த மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸ்தபா றிகாஸ் (24) என்ற இளைஞரே நீராடும் போது காணாமல் போய் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. இவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் ஒலுவில் பிரதேசத்தில் திருமணம் செய்துள்ளார்.

காணாமல் போன முஸ்தபா றிகாஸ் என்பவரை ஒலுவில் பிரதேசத்திலுள்ள கரையோர பாதுகாப்புப் பிரிவினரும், கடற்படையினரும், சுழியோடிகளும், பிரதேச மக்களும் கடந்த மூன்று தினங்களாக கடற்பிரதேசத்தில் தேடி வந்தனர். இருப்பினும் முயற்சி பயனளிக்காமையால் தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் சடலம் மிதந்து வந்ததனைக் கண்டெடுத்து சடலத்தினை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அதனை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சுபைதீன் றிபாத் (18) மற்றும் எச். றோசன் அக்தர் (17) என்னும் இளைஞர்களே காப்பாற்றப்பட்டவர்களாவர். இவர்கள் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் காப்பாற்றப்பட்டு உடனடியாக ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லாமையால் அண்மையில் உள்ள பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு இவர்கள் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்ததனால் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.

இக்கடற் பிரதேசத்தில் நீராடுவதற்காகச் செல்பவர்களில் குறிப்பிட்ட தொகையினர் அண்மைக் காலங்களில் காணாமல் போனதோடு, உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.

நீரில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்டு தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுபைதீன் றபாக் தனது அனுபவத்தினை விபரிக்கையில், சக நண்பர்கள் நீராடுவதற்காக ஆடைகளை மாற்றுவதற்கிடையில் கடற்பிரதேசத்தில் உள்ள கற்களில் ஏறிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற நோக்கத்துடன் நாம் நீந்திச் சென்றோம்.

ஆனால் நீரில் நீந்திக் கொண்டிருந்த போது வேகமாக நீர் என்னை இழுத்துச் செல்வதை உணர்ந்தேன். என்னால் நீரை எதிர்த்து நீந்த முடியவில்லை. எனது உடம்பில் சக்தி குறைந்தது. அப்போது நீரில் நான் அள்ளுண்டு செல்வதை உணர்ந்தேன். இப்போது என் உயிர் கோப் போகின்றதென்ற உணர்வு எனக்குத் தோன்றியது. அப்போது எனது கால் மணலில் படுவது போல தெரிந்தது.

அப்போது எனது பலத்தினை முழுமையாகப் பிரயோகித்து நிலத்தில் காலைப் பதித்து ஊன்றியவாறு சில நிமிடங்கள் நீந்தினேன். பின்னர் நான் உணர்வினை இழந்த நிலையில் கரையில் கிடந்தேன் என்று குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி