ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

5000 முஸ்லிம்கள் காணாமல் போனதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

5000 முஸ்லிம்கள் காணாமல் போனதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

1990 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவானவையென ஆணைக்குழு தகவல்

சுமார் 5 ஆயிரம் முஸ்லிம்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இவற்றில் அநேகமானவை 1990 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில் புலிகளால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பானவை எனவும் அறிய வருகிறது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அடங்கலான காத்தான்குடி சிவில் அமைப்பு நேற்று காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம அடங்கலான குழுவினரை சந்தித்தது.

இதன் போதே மேற்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மட்டக்களப்பு, குருக்கள் மடத்தில் வைத்து 1990 ஆம் ஆண்டு 68 முஸ்லிம்கள் ஒரே தடவையில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்படி அமைப்பினால் ஆணைக் குழுவுக்கு முறையிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் மேலும் விபரங்கள் சேகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி முறைப்பாடு அடங்கலாக கிழக்கில் இருந்து காணாமல் போன முஸ்லிம்கள் குறித்த முறைப்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக அடுத்த மாத முதல் வாரத்தில் மட்டக்களப்பிற்கு செல்ல இருப்பதாக மெக்ஸ்வல் பரணகம குறிப்பிட்டார். இதற்காக இறந்தவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளதோடு தேவைப்பட்டால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை தோண்டி எடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக் குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், கடந்த வருடம் ஆணைக் குழுவை சந்தித்து கிழக்கில் காணாமல் போன 112 பேர் குறித்து முறைப்பாடு செய்தோம்.

தேவையான விபரங்களையும் வழங்கினோம். கொன்று புதைக்கப்பட்டவர்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் வடக்கு, கிழக்கில் காணாமல் போன முஸ்லிங்கள் குறித்து சட்டபூர்வ ஆவணம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக் குழுவை கோரியுள்ளோம். சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணைக் குழு உறுதியளித்தது.

நாம் இங்கு காணாமல் போன முஸ்லிம்கள் குறித்து முறையிட்டபின் அநேகர் முறைப்பாடுகளை செய்து வருவதாக ஆணைக் குழு தலைவர் கூறினார். 1990 மற்றும் 2010 ற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பிலே அதிக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. காணாமல் போன முஸ்லிம்கள் குறித்து முறையிடுமாறு நாம் வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் உள்ள பள்ளிகள், மத்ரஸாக்கள் ஊடாக அறிவூட்டி வருகிறோம் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி