ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

சாய்னா நேவால், ஜுவாலா கட்டா ‘திடீர்’ மோதல்

சாய்னா நேவால், ஜுவாலா கட்டா ‘திடீர்’ மோதல்

இந்தியன் பெட்மின்டன் லீக் போட்டிக்காக வீரர், வீராங்கனைகள் ஏலம் விடப்பட்ட போது முன்னாள் உலக மற்றும் ஒலிம்பிக் சம்பியனும், சமீபத்தில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவருமான இந்தோனேஷியாவின் தவுபிக் ஹிதாயத்தை ரூ. 9 1/2 இலட்சத்துக்கு ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி வாங்கியது. சிறிய தொகை கிடைத்ததால் அதிருப்திக்குள்ளான ஹிதாயம் போட்டி அமைப்பாளர்கள் வெளிநாட்டு வீரர்களை சரியான முறையில் வழி நடத்தவில்லை. ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளனர். போட்டி அமைப்பாளர்கள் உலக தரவரிசையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இதுவே எனது முதலும் கடைசி இந்திய பெட்மின்டன் போட்டியாகும்” என்று கூறினார்.

இது பற்றி ஹைதராபாத் அணியின் தலைவர் சாய்னா நேவாலிடம் கேட்ட போது ‘உலகின் முதல் நிலை விரர் லீ சோங் வெய் அதிகபட்சமாக ரூ. 86 இலட்சத்திற்கு ஏலம் போனார். இதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் ஹிதாயத் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் அவர் அதிக தொகையைப் பெற முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது போன்று பேசுவது எதிர்மறையானது’ என்றார்.

இந்த நிலையில் இந்த விஷயத்தில் சாய்னாவை சக இந்திய வீராங்கனையும் டில்லி ஸ்தாஷர்ஸ் அணியின் நட்சரத்திர வீராங்கனையுமான ஜுவாலா கட்டா கடுமையாக விமர்சித்தள்ளார். ‘டுவிட்டர்’ இணையதளத்தில் ஜுவாலா கட்டா வெளியிட்டுள்ள கருத்தில், ‘உலகின் சிறந்த வீரர்களில் ஹிதாயத்தும் ஒருவர். ஓய்வுபெற்றுவிட்டார் என்பதற்காக அவரது கருத்தை நிராகரிக்கக் கூடாது. அவருக்கு உரிய மரியாதை அளிக்காமல் இப்படி யாராவது பேசுவார்களா என்பது தெரியவில்லை. உண்மையிலேயே இது வருத்தம் அளிக்கிறது.

விளையாட்டில் நீங்கள் எப்படி உயர்ந்த இடத்திற்கு வந்தீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. சக வீரர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு பெற்றுவிட்டார் என்பதற்காக அவரது சாதனைகளைப் புறந்தள்ளிவிட முடியுமா? அவர் எப்போதுமே உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்தான். நான் இங்கு பணத்தைப் பற்றிப் பேசவில்லை. மதிப்புக்கொடுப்பது குறித்துத்தான் சொல்கிறேன்’ என்று ஜுவாலா சாடியுள்ளார்.

சாய்னாவின் பெயரை ஜுவாலா கட்டா நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், அவரைத்தான் மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். இதன் மூலம் அவர்களுக்குள் பிளவு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி