ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

அருள் மறையின் சிறப்புகள்

அருள் மறையின் சிறப்புகள்

நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை. அவனிடமே பொறுப்புக் கொடுக்கிறேன். இன்னும் அவன் பாலே மீளுகின்றேன். (11 : 88)

குர்ஆன் ஓதுவதில் சில ஒழுக்கங்கள்

திருக்குர்ஆனை ஓதவிரும்புகிறவர் மிஸ்வாக் செய்து உளுச் செய்தபின் தனிமையாக ஓரிடத்தில் மிகக் கண்ணியத்துடனும் பணிவுடனும் கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து மன ஓர்மையும் பயபக்தியும் உடையவராக அந்த நேரத்திற்குப் பொருத்தமான ரசனையை மனதில் கொண்டவராக அல்லாஹ்வுடைய திருவேதத்தை அவனிடத்திலே ஓதி காண்பிப்பது போன்ற நிலையில் ஓத வேண்டும்.

அவர் பொருள் விளங்கியவராக இருந்தால் ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் ஓதவேண்டும். நற்செய்தி கூறுதல், அருள் வழங்குதல் போன்ற கருத்துக்களுடைய ஆயத்தக்கள் வரும் போது பாவமன்னிப்பிற்கும் அருள்வேண்டியும் துவாச் செய்து கொள்ள வேண்டும். தண்டனை எச்சரிக்கை பற்றிய ஆயத்துக்கள் வரும்போது அல்லாஹ்தாலாவிடத்தில் அவனை தவிர வேறு எந்தக் கதியும் இல்லை என்ற எண்ணத்தில் பாதுகாப்பு தேடவேண்டும். அல்லாஹ்தாலாவுடைய பரிசுத்தத் தன்மைகள் கூறப்படுமிடங்களில் ‘சுப்ஹானல்லாஹ்’ என்று சொல்லிக்கொள்ள வேண்டும். தனிமையிலிருந்து ஓதும்போது அழவேண்டும். அழுகை வரவில்லையானால் சிரமப்பட்டாவது அழ முயற்சிக்க வேண்டும்.

பேரின்பக் காதலின் மிக இன்பமான நிலையாகிறது. கண்களிலிருந்து கண்ணீர் பொழிவதன் மூலம் தன்னுடைய நேசனிடத்தில் தன் மனோ எண்ணங்களை முறையிடுவதுதான் என்று ஓர் அரபிக் கவிதை கூறுகிறது.

திருக்குர்ஆன் ஓதும்போது மனனம் செய்யும் நோக்கமில்லாவிடில் அவசரமாக ஓதக்கூடாது. திருக்குர்ஆனை தலையணை அல்லது ஏதேனும் ஓர் உயரமான பொருளின் மீது வைத்து ஓதவேண்டும். ஓதும்போது இடையில் யாருடனும் பேசக்கூடாது. பேசவேண்டிய அவசியமேற்பட்டால் குர்ஆனை மூடி வைத்துவிட்டுப் பேச வேண்டும். பிறகு அஊதுபில்லாஹி ஓதி மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும். ஒரு சபையில் ஓதும்போது மனிதர்கள் தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தால், மெதுவாக ஓத வேண்டும். அவ்வாறில்லையானால் சப்தமிட்டு ஓதுவதே சிறந்தது. திருக்குர்ஆன் ஓதுவதற்கு வெளிப்படையான ஆறு ஒழுக்கங்களும் இருப்பதாக பெரியார்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வெளிப்படை ஒழுக்கங்கள்

1. மிக்க மரியாதையாக உளுவுடன் கிப்லாவை முன்னோக்கி உட்காருதல்.

2. அவசரப்படாமல் ஓதும் முறை பேணி தஜ்வீதுடைய சட்டங்களை கடைப்பிடித்து ஓதுவது.

3. சிரமப்பட்டாவது அழ முயற்சித்தல்

4. முன்னால் கூறப்பட்டதுபோல் நற்செய்தியின் ஆயத்துக்கள், எச்சரிக்கையின் ஆயத்துக்கள் வருமிடத்தில் சப்தமிட்டு ஓதுதல்.

5. முகஸ்துதிரி, பிறருக்கு இடையூறு ஏற்படும் என்ற சந்தேகம் வந்தால் மெதுவாக ஓதல், இல்லையெனில் சப்தமிட்டு ஓதுதல்.

6. இனிமையான குரலில் ஓதுதல். (இனிமையான குரலில் ஓதவேண்டுமென பல ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தரங்க ஒழுக்கங்கள்

1. பரிசுத்த திருக்குர்ஆனைப் பற்றி எவ்வளவு உயர்வான வேதமாக இருக்கிறது! என்ற மகத்துவம் மனதில் இடம்பெற வேண்டும்.

2. இவ்வேதத்தை வழங்கிய அல்லாஹ்த ஆலாவுடைய தூய்மை, உயர்வு, பெருமை ஆகியவற்றை மனதிற்கொள்ள வேண்டும்.

3. ஊசாட்டங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றை விட்டு மனதைப் பரிசுத்தமாக வைக்க வேண்டும்.

4. கருத்துக்களை உணர்ந்து ரசித்து இன்பத்துடன் ஓதவேண்டும்.

ரஸ¤லுல்லாஹி (ஸல்) அவர்கள் ஓர் இரவு முழுவதும்

‘(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத் தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்’ (என்றும் கூறுவார்.) (5 : 118) என்ற ஆயத்தை திரும்ப ஓதிக்கொண்டே இருந்தார்கள்.

ஹஜ்ரத் ஸயீதிப்னு ஜுபைர் (ரலி) ஓரிரவு அன்றியும்: ‘குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்’ (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்.) (36 : 59) என்ற ஆயத்தையே விடியும் வரை ஓதிக்கொண்டிருந்தார்கள்.

5. ஓதக்கூடிய ஆயத்தின் கருத்துக்குத் தகக்கவாறு தன் மனதை ஆக்கிக்கொள்ள வேண்டும். அதாவது அருள்கூறும் ஆயத்துக்களை ஓதும்போது மனம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தண்டனை கூறும் ஆயத்துக்களை கூறும்போது மனம் நடுங்க வேண்டும்.

6. அல்லாஹ்தாலாவே பேசிக்கொண்டிருக்கிறான். நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற முறையில் நன்கு செவிசாய்த்து அதில் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்தஆலா தன் கருணையினால் -r>(8கி ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து ஓதக்கூடிய வாய்ப்பினை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!

சில சட்டங்கள்

தொழுகை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவு குர்ஆனில் சில ஆயத்துக்களை மனனம் செய்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாகும். குர்ஆனை முழுமையாக மனனம் செய்வது பர்ளுகிபாயா என்பதாகும். ஒருவர் கூட குர்ஆனை மனனம் செய்யவில்லையானால் முஸ்லிம்கள் அனைவரும் குற்றவாளிகள். (அல்லா காப்பாற்ற வேண்டும்) நமது முறையீடும் உதவி தேடலும் அல்லாவிடமே!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி