ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
கிளிநொச்சி மக்களுக்கு சிறந்த நீதிச் சேவையை வழங்க வாய்ப்பு

கிளிநொச்சி மக்களுக்கு சிறந்த நீதிச் சேவையை வழங்க வாய்ப்பு

பூநகரியில் சுற்றுலா நீதிமன்றம் அமைக்க திட்டம்

முப்பது வருட காலம் நீதி மறுக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு நீதிச் சேவையை காலடிக்குக் கொண்டு வந்து வழங்கும் வாய்ப்பு அரசாங்கத்தினால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.

வடக்கில் புலிகளின் வசமிருந்த நீதிமன்றங்களை மீண்டும் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதெனவும் நீதிச் சேவையை விரிவுபடுத்தி மக்களுக்கு அதன் மூலமான நன்மைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா நீதிமன்றத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்காக பூநகரியில் சுற்றுலா நீதிமன்றமொன்றை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரில் நேற்று மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களைப் புதிதாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி நீதிமன்றங்களை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர்.

நீதியமைச்சின் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நீதிமன்றக் கட்டடங்களை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தமதுரையில்,

வழக்குகள் தாமதமாவதால் நீதித்து றை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேர்கிறது. நீதிச் சேவையை விரிவு படுத்தி வழக்குகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகிறது.

அத்துடன் சிறந்த நீதிச் சேவையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் தேசிய, சர்வதேச ரீதியில் நீதிபதிகளுக்கு பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் நீதித்துறை தொடர்பான அறிவினை மேலும் அதிகரிக்கும் வகையில் அரிய நூல்களடங்கிய நூலகங்களும் எதிர்காலத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி