ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
முஸ்லிம்களை பிளவுபடுத்தி வாக்குகளை அபகரிக்க ஐ.தே.க சதி

முஸ்லிம்களை பிளவுபடுத்தி வாக்குகளை அபகரிக்க ஐ.தே.க சதி

முஸ்லிம்களைப் பிளவுபடுத்தி அவர்களது வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்கான சதி, சூழ்ச்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஈடுபட்டி ருப்பதாக சுற்றாடல் பிரதி யமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் நேற்றுத் தெரிவித்தார்.

ஐ.தே.க.வினர் சூழ்ச்சிகரமான முறையில் மேற்கொள்ளும் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிடாது சகலரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் எனவும் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் கேட்டுக்கொண்டார்.

குர்பான் வழங்குவதற்கோ, ஐவேளை தொழுகையில் ஈடுபடுவதற்கோ, அதான் கூறுவதற்கோ இந்த நாட்டில் எந்தவித இடையூறுமே கிடையாது. எந்தப் பள்ளி வாசலுக்குமே இங்கு பாதிப்பு கிடையாது. ஆயினும் ஐ.தே.க.வினர் பொய்யையும், புரட்டையும் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபை தேர்தலின் நிமித்தம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களது வாக்குகளை சிதறடிப்பதற்கும் அவற்றை அபகரித்துக் கொள்வதற்கும் தேவையான சதி சூழ்ச்சிகளில் ஐ.தே.க.வினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது வார்த்தைகளை கேட்டு முஸ்லிம்கள் ஏமாந்து விடக் கூடாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன, மத, பிரதேச பேதம் பாராத ஒரு தேசியத் தலைவர். அவர் எல்லா இன, மத, மொழி மக்களுடனும் அன்பாகவும் நெருக்கமாகவும் பழகக் கூடியவராக இருக்கின்றார். அவர் இளைஞர் போன்று காட்சியளிக்கின்றார். நான் ஸ்ரீல.சு.கட்சியில் இணைந்து ஒரு வருடம் கூட இல்லை. ஆனால் மிகவும் பழைய ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் போன்று ஜனாதிபதி எனக்கு உதவி, ஒத்துழைப்புகளை வழங்குகின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மனிதாபிமான பண்புகளுக்கு முன்பாக ஈடுகொடுக்க முடியாத பொறாமையால்தான் ஐ.தே.க.வினர் வெவ்வேறு விதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்ச்சிகள் ஒரு போதுமே மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. ஆட்டோ, முச்சக்கர வண்டியில் பயணம் செய்து மக்களை ஏமாற்ற முடியாது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் தங்களது சமய கடமைகளை சுதந்திரமாக நிறைவேற்றுகிறார்கள். கலாசார செயற்பாடுகளில் எவ்வித இடையூறுமின்றி ஈடுபடுகின்றார்கள். முஸ்லிம்கள் ஐ.தே.க.வினரின் பொய்களை நம்பிவிடக்கூடாது. எமது ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வருபவராவார். அவர் முஸ்லிம் நாடுகளின் சினேகபூர்வ நண்பராக இருக்கின்றார். அதனால் முஸ்லிம்களும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் அமோக வெற்றியில் பங்காளர்களாகிவிட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி