ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
ஜே.வி.பி விவகாரங்களில் அரசு தலையிடாது

ஜே.வி.பி விவகாரங்களில் அரசு தலையிடாது

மீண்டும் ஆயுத கலாசாரத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்

ஜே.வி.பியின் உட்கட்சி விவகாரங்களில் அரசு ஒருபோதும் தலையிடாது. அவர்களே அதனை தீர்த்துக் கொள்ள வேண் டும். எனினும் துப்பாக்கி கலாசாரமொன்று இலங்கையில் மீண்டும் தலை தூக்குவதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.ஜே.வி.பியினரின் பிளவு மற்றும் உட்பூசல்கள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்துள்ள புபுது ஜயகொட பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையொன்றில் "இந்த நாட்டில் ஆயுத துப்பாக்கி கலாசாரத்துக்கு இடமில்லை என்று கூறியிருந்தார். இதில் மறைமுகமாக அடுத்த தரப்பினர் அதற்கு ஆயத்தமாவதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

எது எப்படியிருப்பினும் இந்த நாட்டில் மீண்டும் ஒரு துப்பாக்கி கலாசாரத்துக்கு இடமில்லை. மக்கள் அனுமதிக்கப் போவதும் இல்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

கடந்த காலங்களில் காடுகளில் புகுந்து இவ்வாறான ஆயுதக் கலாசாரத்தால் சுமார் 60,000 இளைஞர்கள் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீண்டும் காடுகளுக்குள் நுழைய இடமளிக்கவும் முடியாது. இவ்வாறு செல்ல முற்படுபவர்களை தடுத்து நல்வழிக்கு கொண்டு வருவதும் எமது பொறுப்புகளில் ஒன்று.

ஜே.வி.பியினுள் பிளவுபட்டுள்ள எந்தப் பிரிவினரை அரசு ஆதரிக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது,

யாரை ஆதரிக்கிறோம் என்பது அரசின் பொறுப்பல்ல. அது அரசின் வேலையும் அல்ல. தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

ஜே.வி.பியின் பிளவுக்கு வெளிநாட்டு சக்திகள் பின்னணியில் இருப்பதாக கூறுகின்றார்களே? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

இவ்வாறு தெரிவித்துள்ளவர்களிடமே இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு சக்திகள் என்பது வெரும் கட்டுக்கதையே தவிர வெறொன்றும் இல்லை. ஜே.வி.பி.யின் பிளவுக்கு அரசும் பின்னணியில் செயற்படுவதாக கூறுகிறார்களே? எனக் கேட்கப்பட்டபோது;

கூறுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் இவ்வாறு தெரிவிப்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.

இருப்பினும் எமது கட்சிக்குள் எவரும் வரலாம். எவரும் போகலாம். ஜனநாயக உரிமையின் உச்சத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கிறது.

ஜனநாயகத்தின் உச்சம் என்று சொல்லும் நீங்கள் கட்சி தாவுவதற்கு எதிரான சட்டத்தை நீக்குவதற்கு ஏன் பாராளுமன்றத்துக்கு கொண்டுவர மறுக்கிaர்கள் என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவில்லை என கட்சி மாறுவதற்கு எந்த தடையும் இப்போது இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. கட்சி மாறிய நான் இதற்கு உதரணம். எனக்கு எதுவும் நடக்கவில்லையே என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (ள)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி