ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
கிழக்கு மக்களின் மாற்று பொருளாதாரத்துக்கு அமைச்சர் ஆறுமுகன் நடவடிக்கை

கிழக்கு மக்களின் மாற்று பொருளாதாரத்துக்கு அமைச்சர் ஆறுமுகன் நடவடிக்கை

இலங்கை வாழ் அனைத்து மக்களின் மாற்று பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய கால்நடை உற்பத்தித் துறையை ஊக்குவிக்க தேவையான சகல முயற்சிகளையும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 30 வருட கொடிய பயங்கரவாதத்தை அழித்தொழித்து நாட்டின் அமைதியான சூழல் நிலவுகின்ற வேளையில் வடக்கு, கிழக்கு மக்களின் மாற்று பொருளாதாரத்திற்கு வழி செய்யும் நோக்கிலும் அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து கால்நடை, உற்பத்தித்துறையை நன்கு பார்வையிட்டதுடன் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கணவன்மார்களை இழந்த விதவைப் பெண்களுக்கும் உதவும் பொருட்டு, கிழக்கு மாகாண விவசாய கால்நடை மீன்பிடித்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் நவரட்ணராஜாவுடன் இணைந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வகையில் 16 பால் கறக்கு பசுக்களையும், 20 எருமை மாடுகளையம், 30 சினைப்படுத்துவதற்கான காளை மாடுகளையும் வழங்கி வைத்துள்ளார். இதனடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு தலா 10 கால்நடைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக விதவைப் பெண்களுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பசுக்களை வழங்கவும், அதாவது இனவிருத்தி பண்ணையாளர்களுக்கு காளை மாடுகளையும் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்ற எக்ஸ்போ (ரிகீஜிலி) 2011 கண்காட்சியின்போது கால்நடைகள் வழங்கி வைக்கப்பட்டது. எஞ்சியவற்றை பிறிதொரு நிகழ்வில் வழங்கிவைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சர் நவரட்ணராஜா எமது ஊடக பிரிவுக்கு தெரிவித்ததார்.

இதேவேளை பல கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த கால்நடைகளை வழங்கிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நன்றியுடன் கூடிய பாராட்டுதல்களையும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் நவரட்ணராஜா அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி