.

2010-11-19

  2012ல் அனைவருக்கும் மின்;சாரம்!

2012ல் அனைவருக்கும் மின்சாரம்!

இந்த வருடத்தில் 600 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைவு

உலகம் நாகரீகமடைந்த பின் சமூகத்தில் சகல செயற்பாடுகளும் எரிசக்தியினூடாகவே செயற்படுகின்றன.

எரிபொருளும் மின்சாரமும் இல்லாவிட்டால் இந்த உலகத்தின் நிலைமை எப்படியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தளவு அவற்றின் தேவை இன்றியமையாததாகிவிட்டது.

நீரைத்தவிர மின்சார உற்பத்திக்கும் எரிபொருளே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் எரிபொருள் மூலம் மின் உற்பத்தி அதிகம் செலவிட நேரிடுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ உலகில் பல நாடுகள் இன்னும் இருளிலேயுள்ளன.

தென் ஆசிரியாவில் பல நாடுகளில் 50 வீதமானவர்களுக்கே மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நமது நாடும் இருட்டில் மூழ்கியிருந்தது மறக்க முடியுமா?

சில நாட்கள் 7 மணி நேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

இதனால் ஒளிமயமான எதிர்காலம் குறித்து எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

ஆனால் கடந்த 5 வருட காலத்தில் மக்கள் மத்தியில் எதிர்காலம் குறித்து மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

நாட்டில் சகல துறைகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. மின் வெட்டின்றி 24 மணி நேரமும் மக்களுக்கு மின்சார வசதி வழங்கப்படுகிறது. இலங்கையில் தற்பொழுது 85 வீதமானவர்கள் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். நாட்டிலுள்ள சகல வீடுகளும் வெளிச்சத்தில் மிளிர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். 2012ல் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலக்காகும்.

இதற்காக பல பாரிய மின்சார செயற்திட்டங்கள் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டன.

மக்கள் தொகை அதிகரிப்பினாலும் துரித அபிவிருத்தி காரணமாகவும் நாளாந்தம் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. எதிர்கால தேவைகளையும் நிவர்த்திக்கும் வகையிலும் இந்த மின்சார திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரதிருஷ்டியான செயற்பாடே காரணம் என்றால் அது மிகையல்ல.

போர்ச் சூழல் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பல நகரங்கள் வருடக் கணக்காக இருட்டிலே புதையுண்டிருந்தன. ஆனால் இன்று அந்த நகரங்கள் வெளிச்சத்தில் மிளிர்கின்றன. சுன்னாகம் மின் நிலையம் காரணமாக யாழ். குடா மக்கள் 24 மணி நேரமும் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

மீட்கப்பட்ட பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதோடு இதற்காக புதிதாக மின்மாற்றி கோபுரங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. மாங்குளத்தில் இருந்து ஏ 34 வீதியினூடாக ஒட்டு சுட்டான் ஊடாக முல்லைத்தீவு வரை 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார இணைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது. சுன்னாகத்தில் இருந்து வவுனியா வரை 132 கிலோ வோர்ட் புதிய மின்மாற்றித் தொகுதியொன்றும் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் 2012க்கு முன் நிறைவு செய்யப்படும்.

எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட திட்டங்கள் கூட இன்று நிறைவடையும் தறுவாயில் உள்ளன. இவற்றுக்கான தடைகளை அகற்றி அவற்றுக்கு மாற்று வழிகள் காணப்பட்டதால் இந்தக் திட்டங்கள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் 1985ல் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு இடையூறுகள் காரணமாக இந்தத் திட்டங்கள் இரு தசாப்தங்களாக இழுத்தடிக்கப்பட்டன.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து சகல தடைகளுக்கும் தீர்வு காணப்பட்டு மேல் கொத்மலை மின் திட்டம் 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதற்காக 13 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2007ல் ஆரம்பமானது. சுரங்கப் பாதை கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் நிறைவடைந்ததோடு ஏனைய நிர்மாணப் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இந்தத் திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்காக அந்த மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய 495 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதோடு உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மின் உற்பத்தி நிலையம் அடுத்த வருடம் முதற்பகுதியில் பூர்த்தி செய்யப்படும். அடுத்த வருடம் முதல் 150 மெகாவோர்ட் மின்சாரம் கிடைக்க இருக்கிறது.

இதே போன்றே பல்வேறு எதிர்ப்பு காரணமாக அனல் மின் நிலையமொன்றை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக காலந்தாழ்த்தப்பட்டது. இதற்காக பல்வேறு இடங்கள் பிரேரிக்கப்பட்ட போதும் எங்கும் அனல் மின் நிலையம் அமைக்க முடியவில்லை.

ஆனால் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நுரைச்சோலை அனல் மின்நிலையம் கடந்த 2007 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது இதன் முதற்கட்டத்திற்கு 455 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்பட்டுள்ளது. அரசாங்கம் 5300 மில்லியன் ரூபா முதலீடு செய்துள்ளது.

இந்தத் திட்டம் 2012ல் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்ட போதும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ளது.

இதற்குத் தேவையான நிலக்கரிக்கப்பல் இந்த வாரம் இலங்கை வந்தடைய உள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினூடாக 150 மெகாவோர்ட் மின்சாரம் கிடைக்க இருக்கிறது.

கெரவலப்பிட்டிய மின்சாரத் திட்டம் இந்த வருட முதற்பகுதியில் நிறைவடைந்தது. இதனூடாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோர்ட் மின்சாரம் இணைக்கப்பட்டது. கெரவலப்பிடிய மின்சாரத் திட்டத்தினூடாக நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 20 வீதம் பூர்த்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வருடாந்தம் 1,800 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தியாகிறது.

இதன்படி மொத்தமாக 600 மெகாவோர்ட் மின்சாரம் இந்த வருடத்தில் தேசிய மின் கட்டமைப்பிற்கு இணைய இருக்கிறது.

35 மெகாவோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புரோட்லண்ட் நீர் மின்திட்டம் 2011ல் ஆரம்பிக்கப்பட்டு 2014ல் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த திட்டங்களுக்கு மேலதிகமாக சிறிய கிராமிய நீர் மின்சாரத் திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு சூழலுக்குப் பாதிப்பில்லாத சூரிய வெளிச்சம், காற்று, விறகு, கடலலை போன்ற வற்றினூடாக மின்சாரம் உற்பத்தி செய்யவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றினூடாகவும் கணிசமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. பல நாடுகள் அணுசக்தியினூடாக குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. இலங்கையிலும் அணு மின் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தில் மின்சாரத்தில் தன்னிறைவடைவது இன்றியமையாததாகும். இந்தக் கனவு நனவாகும் நாள் வெகு தூரமில்லை.