.

2010-11-19

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் தமிழ் மொழி அரசகரும மொழியானது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் தமிழ் மொழி அரசகரும மொழியானது

அமைச்சர் டியூ குணசேகர

டி. எஸ். சேனநாயக்கா முதல் சந்திரிகா பண்டாரநாயக்க வரை தமிழ் மொழியை அரச மொழியாக்குவதற்குப் பயந்து கொண்டிருந்தபோது 52 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் அரசியலமைப்பு அமைச்சராக இருந்தபோதுதான் தமிழ் மொழிக்கு அரச மொழி அந்தஸ்த்துக் கிடைத்தது. இவ்வாறு சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டியூ. குணசேகர மட்டக்களப்பில் தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ். சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ‘மீண்டும் ஒரு யுத்தம் எமக்குத் தேவையில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சகல இன மக்களும் மிகவும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழுகின்றனர்.

இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க போராளிகள் 5400 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவாக விடுதலை செய்யப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் தமிழ் மொழிமூல விழிப்புலனற்றோர் தொழிற்பயிற்சி நிலையம்

தமிழ் மொழி மூல விழிப்புலனற்றோர் தொழிற் பயிற்சி நிலையத்தினை மட்டக்களப்பில் விரைவாக அமைக்க முயற்சிப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட உறுதி மொழியினை மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாடசாலை அதிபர் ஆ. ஜீவராஜா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கருத்துக்களை தெரிவித்த பொன் செல்வராஜா சிங்கள மொழிமூலம் விழிப்புலனற்றோருக்கான தொழிற் பயிற்சி பாடசாலை சீதுவையில் அமைக்கப்பட்டுள்ளது. அது போல தமிழ் மொழியிலான பாடசாலை நிறுவப்படவில்லை. இருந்த போதும் 2000- 2001ம் வருட காலப் பகுதியில் நான் எம். பியாக இருந்த காலத்தில் இதற்கான முயற்சியை மேற்கொண்டேன்.

அப்போது மட்டக்களப்பில் அதற்கான காணி அடையாளம் காணப்பட்டது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அதற்கான முயற்சி கைகூடவில்லை.

இருந்த போதிலும் இந்த முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பேன். இதற்காக இந்திய உயர் ஸ்தானிகருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடி தமிழ் மொழியிலான அனைத்து வசதிகளுடனான பயிற்சி நிலையத்தினை அமைப்பேன் எனவும் தெரிவித்தார். (ரு- ஞ)