.

2010-11-19

  வலிகாமம் தென் மேற்கு பிரதேசத்தில் மரம் நடுகை

வலிகாமம் தென் மேற்கு பிரதேசத்தில் மரம் நடுகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாவதையொட்டி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘பதினொரு இலட்சம் மரம் நடுகை’த் திட்டத்தின் கீழ் யாழ். வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்திலும் பல இடங்களில் மரம் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலயப் பகுதியில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மரத்தை நாட்டி வைத்தார். அதைத் தொடர்ந்து மானிப்பாய் வர்த்தகர் சங்கச் செயலாளர் உட்படப் பலர் மரங்களை நாட்டி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆனைக்கோட்டையில் உள்ள உப அலுவலகத் திலும் நவாலி வடக்கு வளர்மதி சனசமூக நிலைய முன்றலிலும் மரங்கள் நாட்டப்பட்டன.


இலங்கை தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு

250 யாழ். உயர் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு பட்டம்

இலங்கை தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழாவில் அதிக எண்ணிக்கையான யாழ். உயர் தொழில் நுட்பவியல் நிறுவன மாணவர்கள் டிப்ளோமா சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் 250 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 250 மாணவர்கள் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களாவர். இவர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இடம்பெற்றது.

சான்றிதழ்கள் உயர்கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க வழங்கியிருந்தார். இம்முறைதான் யாழ்ப் பாண மாணவர்கள் சாதனை நிலைநாட்டி யுள்ளனர்.


கிழக்கு பல்கலைக்கழக

நுண்கலை பிரிவின் ஏற்பாட்டில் உளநல விருத்தி நிகழ்ச்சிகள்

யுத்தம் மற்றும் சுனாமி தாக்கம் காரணமாக உளநலப் பாதிப்புக் குள்ளானோரிடையே மனநல விருத்தியை உண்டு பண்ணும் நடவடிக்கைகளை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின ருடன் இணைந்து, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உளநலப் பிரிவு ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 14 பிரதேச செலயகப் பிரிவுகளிலும் மக்கள் கூடும் இடங்களில் வீதி நாடகங்களூடாக விழிப்பூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி நாடக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எஸ். கோகுல்நாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, செங்கலடி, சித்தாண்டி, வந்தாறுமூலை, கிரான், ஏறாவூர், வாகரை, வாழைச்சேனை உட்பட பல இடங்களில் விழிப்புணர்வூட்டும் வீதி நாடகங்களை கிழக்குப் பல்கலை கழக நுண்கலைத் துறையினர் நடத்தி வருகின்றனர். (ரு - ஞ)


கிழக்கு பாடசாலைகளுக்கு 193 பட்டதாரிகள் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்ற 193 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் கடந்த செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பட்டதாரி ஆசிரியர்களுக்கே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் திருகோணமலை முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களே இந்நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர்.

(ரு- ஞ)