.

2010-11-19

  வடமாகாண அபிவிருத்தியும் வளமான எதிர்காலமும்

வடமாகாண அபிவிருத்தியும் வளமான எதிர்காலமும்

யுத்தம் என்ற சொல்லை மாத்திரம் கேட்டும், சொல்லியும் வந்த இந்த நாட்டு மக்கள் தற்பொழுது சமாதானம், பாரிய அபிவிருத்தி என்ற சொற்களை உச்சரிக்க கேட்கும் சூழல் ஏற்பட்டுள்து.

யுத்தத்திற்கு மாறாக சமாதானமும், அழிவுக்கு மாற்றமாக அபிவிருத்தி பணிகளும் இடம்பெறுவதை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கின்றன.

மூன்று தசாப்தங்களாக எமது நாட்டில் இடம்பெற்று வந்த அந்த கொடூர யுத்தத்தை முற்றாக இல்லாதொழித்து சமாதானமாகவும், அழிவுகளை அபிவிருத்திகளாகவும் மாற்றிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சாரும்.

நாற்பது வருட அரசியல் வாழ்க்கை யூடாகக் கிடைக்கப் பெற்ற அரசியல் அனுபவங்கள், சாதுரியம், இராஜதந்திரம், எடுத்ததை முடிக்கும் தன்மை, துணிச்சல் போன்ற சிறந்த செயற்பாடுகள் மூலம் குறுகிய காலத்திற்குள் இந்த நாட்டில் பாரிய மாற்றங்களை, அபிவிருத்திகளை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவி காலத்தை ஆரம்பிக்கின்றார்.

2005 ஆம் ஆண்டு இந்த நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு முன்னர் ஆட்சி பீடம் ஏறிய பல்வேறு அரசாங்களினால் முடியாது என விட்டுச் செல்லப்பட்ட பயங்கரவாதம் என்ற பாரிய சுமையை ஒரு பெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு அதனை முற்றாக இல்லாதொழித்ததுடன், இந்த நாட்டு மக்கள் மத்தியில் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்குடன் துரித அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை தனது முதலாவது பதவி காலத்தில் அவற்றில் பெரும் பகுதியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். யுத்தத்திற்கு பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகள் பல வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக வட மாகாணமும், கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணமும் அபிவிருத்தியை கண்டு வருகின்றன. தற்பொழுது இப்பகுதி மக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு உட்பட சகல அபிவிருத்தி வசதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.

விஷேடமாக ஜனாதிபதியின் முழுமையான ஆலோசனைக் கமைய வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியின் மேற்பார்வையின் கீழ் வடக்கில் நாளுக்கு நாள் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பல கோடி ரூபாக்கள் செலவிடப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர்ப்பானம், வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய ஐந்து நிர்வாக மாவட்டங்களைக் கொண்ட வட மாகாணம் 33 பிரதேச செயலாளர் பிரிவுகள், 912 கிராமசேவகர் பிரிவுகள், 28 பிரதேச சபைகள், 5 நகர சபைகள் மற்றும் ஒரு மாநகர சபையையும் உள்ளடக்கியது.

காங்கேசன்துறை, பருத்தித்துறை, தலைமன்னார் ஆகிய மூன்று துறைமுகங்களையும் பலாலி மற்றும் வவுனியா பகுதிகளில் இரண்டு விமான நிலையங்களை யும் கொண்ட வட மாகாணத்தின் முக்கிய பொருளாதார துறைகளாக விவசாயம், மீன்பிடி, கால்நடை உற்பத்தி, கைத்தொழில் மற்றும் வர்த்தகம் ஆகியன விளங்குகின்றன.

நாட்டின் பொருளாதார துறை மேம்பாட்டுக்கு பக்கபலமாக விளங்கிய இந்த வட மாகாணத்தை மீண்டும் அதே நிலைமைக்கு கொண்டு வருவதும், அபிவிருத்தி செய்வதுமே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான குறிக்கோள் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு வட மாகாணம் தனது உற்பத்திகளை, பங்களிப்புக்களை நாட்டுக்காக மீண்டும் வழங்க தயாராகவுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பாரிய தடையாக இருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் வாழும் சகல இன மக்களும் சுதந்திரமாகவும், சுபிட்சமாகவும் வாழவேண்டும் என்ற நோக்கில் தனது ‘மஹிந்த சிந்தனை’ ஊடாக பல்வேறு திட்டங்களையும் தீர்மானங்களையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

இதன் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மூன்று இலட்சத்து 43 ஆயிரத்து 463 அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தனது அரசாங்கத்தின் ஊடாக சிறப்பாக வழங்கினார்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களில் 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்களை மிக குறுகிய காலத்திற்குள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கினார். இந்த மீள்குடியேற்றம் ஒரு மாபெரும் சாதனையாகவே உலகளாவிய ரீதியில் கருதப்பட்டதுடன் ஜனாதிபதிக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு வட மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்ட பின்னர் தென் பகுதியைப் போன்று வட பகுதியையும் அபிவிருத்தி செய்யும் பாரிய திட்டங்களை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

வட பகுதி மக்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் பொருட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு வாழும் மக்களின் நிலைமைகளை கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் செயது கொடுத்ததுடன் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகளையும் செய்தார்.

வட பகுதி மக்களுக்காக ஜனாதிபதி ஆற்றிய சேவைகள், மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள், அபிவிருத்தி பணிகள், விரைவில் சிவில் நிர்வாகத்திற்கான செயற்பாடுகள் போன்றன, உலக நாட்டின் தலைவர்களின் பாராட்டுக்களையும் பெற்றன.

8 ஆயிரத்து 847 சதுரகிலோ மீட்டர் நிலப்பரப்பையும், 480 மீட்டர் கரையோரப் பகுதியைக் கொண்ட வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,28,373 மில்லியன் ரூபாவாகும். இந்த மாகாணம் அபிவிருத்தி மூலம் மேலும் பல்வேறு வளர்ச்சிகளை காணவுள்ளது. ஒரு நாட்டின், ஊரின் அபிவிருத்திக்கு வீதித் தொடர்பு மிக மிக அவசியமானதாகும். ஒரு நாடு நாடாகக் கருதப்படுவதற்கு, அந்நாட்டின் சகல பிரதேசங்களும் தரைமார்க்கமாக இணைக்கப் பட்டிருக்க வேண்டும். பரவலான அடிப்படையில் அபிவிருத்தி அடைவதற்கு தரை மார்க்க பாதைகள் மிகவும் அவசியமாகும்.

இதனை உணர்ந்த ஜனாதிபதி வட மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு மைல் கல்லாக, தடைப்பட்டிருந்த கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை நோக்கிச் சென்ற ‘யாழ் தேவி’ புகையிரத சேவையின் பணிகளை மீள ஆரம்பித்து அதன் முதற்கட்டமாக தாண்டிக் குளம் வரை இயக்கச் செய்தார். இதன் அடுத்தக் கட்டமாக கொழும்பு - கண்டி- யாழ்ப்பாண வீதியான ஏ-9 பிரதான வீதியின் போக்கு வரத்து பணிகளை உடனடியாக மீள ஆரம்பித்துவைத்தார்.

அபிவிருத்தி செயற்பாடுகளும் எதிர்கால திட்டங்களும்

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 2708 வேலைத் திட்டங்களுக்கென 4 ஆயிரத்து 793 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு அவற்றில் 3 ஆயிரத்து 803 மில்லியன் ரூபா செலவில் 2631 வேலைத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று 2010 ஆண்டு 2944 வேலைத் திட்டங்களுக்கென 6 ஆயிரத்து 317 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு 1653 மில்லியன் ரூபா செலவில் 632 வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

விவசாயம்

வடக்கில் விவசாயத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விவசாயிகள் துரிதமாக மீளக்குடியமர்த்தப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான இலவச விதை நெல், விவசாய நிலங்களை தயார்படுத்துவதற்கான உதவிகள், மானியவிலையில் உரம் இலவச விவசாய உபகரணங்கள் போன்றன வழங்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனம்

ஒன்பது பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் ஊடாக 19, 888 ஹெக்டயார் நிலங்கள் விஸ்தீரணம் செய்யும் திட்டமும் 45 நடுத்தர நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக 8, 514 ஹெக்டயர் நிலங்களை விஸ்தீரணமும் செய்யும் திட்டமும், 2066 சிறிய நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக. 34, 142 ஹெக்டயார் நிலத்தை விஸ்தீரணம் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சகல பாரிய, நடுத்தர, சிறிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

கல்வி

கல்வித்துறை, மேம்பாட்டுக்கு பல மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1015 பாடசாலைகளில் 847 பாடசாலைகள் இயக்கப்பட்டுள் ளன. 2,43,405 மாணவர்களுக்கு 13, 634 ஆசிரியர்கள் தற்பொழுது கற்பித்து கொடுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 120 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவும் உள்ளன.

சுகாதாரம்

வைத்தியசாலைகள், சத்திர சிகிச்சை நிலையங்கள், நோயாளர் பகுதிகள், வைத்தியர், ஊழியர், தங்குமிட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வைத்தியசாலைகளுக்கு தேவையான சகல உபகரணங்களும் அவ்வப்போது பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதுதவிர, பல கோடி ரூபா செலவில் வீதி புனரமைப்பு பணிகள், மின்சார வசதி நீர்ப்பாசன, உள்ளூராட்சி, கூட்டுறவுத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.

ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் சுமார் இரண்டாண்டு காலத்திற்குள் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வட மாகாணத்தை ஒரு முன்னணி மாகாணமாக கட்டியெழுப்பிய ஜனாதிபதி மீண்டும் ஆரம்பிக்கும் இந்த இரண்டாவது பதவி காலத்தில் மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பாரிய திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.