.

2010-11-19

  அபிவிருத்தி இலக்குகளின் இரண்டாவது மைல்கல்!

அபிவிருத்தி இலக்குகளின் இரண்டாவது மைல்கல்!

அனைத்து இன, மத மக்களும் அமைதியுடனும் கெளரவத்துடனும் வாழ்வதற்கான நாட்டை உருவாக்குவதில் அர்ப்பணிப்பு டனும் தீர்க்க தரிசனத்துடனும் செயற்பட்டு வருபவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நாட்டின் எதிர்காலம் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு துணிச்சலான பல தீர்மானங்களை எடுத்ததனால் வெற்றிகளை, சாதனைகளை சம்பாதித்துக் கொண்டவர்.

‘மஹிந்த சிந்தனை’ மூலம் தமது இலக்கின் முதற்கட்டத்தை எட்டியதோடு ‘மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம்’ மூலம் இலங்கையை ஆசியாவின் உன்னத மிக்க நாடாக அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டுடன் வெற்றிப் பாதையில் முன்செல் பவர். மக்கள் மனதில் அசையாத நம்பிக்கைக்குரியவராகத் திகழ்பவர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றை 2004ம் ஆண்டிற்கு முன் 2004ம் ஆண்டிற்குப் பின் என வகுத்துப் பார்க்க முடியும். சுதந்திரமடைந்த நாடாக விளங்கிய போதும் சுதந்திரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய நன்மைகளைத் தவறவிட்ட யுகம் என முன்னயை யுகத்தையும் துணிச்சலான தீர்மானங்கள் மூலம் நாட்டுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொண்ட யுகமாக பிற்பகுதியையும் பார்க்க முடிகிறது.

இன்றைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘நன்தொர’ செயற்திட்டம் நாட்டின் தேசிய உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிக்கவும் தேசிய மட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கவுமென ஆரம்பிக்கப்பட்டதாகும்.

நவீன இலங்கையைக் கட்டியெழு ப்பும் பத்து வருட திட்டமாக 2006-2016 மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நுரைச்சோலை அனல் மின் நிலையம், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையம், கொழும்பு, அம்பாந்தோட்டை, ஒலுவில் உப்பட ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள், அம்பாந்தோட்டையில் சர்வதேச விமான நிலையம், பெருந்தெருக்கள் அபிவிருத்தி, புதிய பாலங்கள், மேம்பாலங்கள் நிர்மாணிப்பு என பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேற்படி திட்டங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன. அம்பாந்தோட்டைத் துறைமுகப் பணிகள் நிறைவடைந்து துறைமுகத்துக்கு முதலாவது கப்பல் பிரவேசமும் இவ்வாரம் இடம்பெறுகின்றது.

இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பாரிய முதலீட்டு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையானது நாட்டின் பொருளாதாரத்தில் ஏழு வீத வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், எரிபொருள் விலையேற்றம், உலக உணவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடு முழுவதிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மேல் மாகாணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல கிராமப்புறங்களிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட் டதன் பயனாக கிராமிய பொருளாதாரத்தின் பயனை அடிமட்ட மக்களும் அனுபவிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

விவசாயிகள் தமது தொழிலைச் செய்ய முடியாது கடனாளிகளாக நஞ்சருந்தி மரணித்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காணிகளற்றோருக்கு காணிகள், காணி உறுதிப்பத்திரங்களை வழங்கல், விவசாய ஊக்குவிப்பு உதவிகள், உரமானியம் போன்றவற்றினால் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது உள்ளூர் உற்பத்தியாளர் களை அவை பாதிக்கின்றனவா? என்பதைக் கவனத்திற்கொண்டு செயற்பட்ட அரசாங்கம் என இன்றைய அரசாங்கத்தைக் கூறமுடியும். அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற பிரதான உற்பத்திப் பொருட்கள் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்ட இந்நடவடிக்கையின் பயனாக கடந்த காலங்களைப் போன்று விவசாயிகள் கடன்பட்டு விவசாயம் செய்து நட்டப்பட்ட நிலை தவிர்க்கப்பட்டது.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின்னர் நாட்டின் நெல் உற்பத்தியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. யுத்தம் காரணமாக நெற்செய்கை பண்ண முடியாமலிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் மீள பயிரிடப்பட்டன. அதற்கான ஊக்குவிப்புகள், உரமானியம் வழங்கப்பட்டதுடன் சந்தைப்படுத் தலுக்கான சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமையும் இதில் சிறப்பாகக் குறிப்பி டக்கூடியது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் கடந்த 30 வருட காலங்களாக அபிவிருத்தியில் பின்னடைவு கண்டிருந்தன. மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கும் அரசாங்கம் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கு கிழக்கு மக்களும் அபிவிருத்தியின் பயனை அனுபவிக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தது. அந்த வாக்குறுதிகள் இன்று செயலுருவம் பெற்று வருகின்றன. பயம், சந்தேகம், அச்சத்துடன் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் வர்த்தகம் என தமது தொழில்களை முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையிலிருந்த வடக்கு கிழக்கு மக்கள் தற்போது தமது தொழில்களை மீள ஆரம்பித்துள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் முன்னேற்றமடைந்து வருவதைக் காணமுடிகின்றது.

யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அவர்களைத் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றுள்ளன.

ஏனைய நாடுகளில் யுத்தம் உட்பட பல்வேறு அனர்த்தங்களி னால் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியவர்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் பல வருட காலமாக இழுபறிப் பட்ட நிலையில் மந்தகதியில் நடைபெற்று வருகின்ற போதும் இலங்கையில் எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகக் குறுகிய காலத்தில் இடம்பெற்று வருகின்றமையானது உலக நாடுகளை வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சகல பிரதேசங்களிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கில் 90 வீதத்திற்கும் மேல் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. ஒரு சில பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இன்னும் முடிவுறாததாலேயே அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் தாமதமாகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் மீள் குடியேற்றத்திற்கென தனியான ஒரு அமைச்சை உருவாக்கி சிரேஷ்ட அமைச்சரான மில்ரோய் பெர்னாண்டோவை அதற்குப் பொறுப்பாக நியமித்துள்ளதுடன் பிரதியமைச்சராக வடக்கு கிழக்கு மாகாண சூழல்களை நன்கறிந்த, மக்களுக்குப் பரிச்சயமானவொருவரான விநாயகமூர்த்தி முரளிதரனை நியமித்துள்ளது. இவர்களின் அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டினால் நூற்றுக்கு 90 வீதத்துக்கு மேல் மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஒரிரு மாதங்களுக்குள் எஞ்சியுள்ள மக்களை மீள்ககுடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 30 வருட காலம் நிம்மதியற்ற வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். உயர்கள் உடமைகள் சுதந்திரத்தையும் இழந்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வாழ்ந்தனர். அரசாங்கத்தின் செயற்பாடானது அவர்கள் மத்தியில் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கின் உதயத்தை போன்றே ‘வடக்கின் வசந்தம்’ எனும் அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கின் அபிவிருத்திக்கென விசேட ஜனாதிபதி செயலணியொன்று ஏற்படுத்தப்பட்டு சகல செயற்திட்டங்களும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தத்தினால் நலிவுற்ற மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகையதொரு சூழலிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு இடம்பெறுகிறது.

நாட்டை இருளிலிருந்து மீட்டு சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் மக்கள் தலைவனாக அவரைப் பார்க்க முடிகிறது. இப்பதவியேற்பு நிகழ்வையொட்டி நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதேவேளை; அரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவுள்ளது நவம்பர் 17 முதல் 20ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி பி.ப. 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.