.

2010-11-19

  உலகில் சிறந்த ஆரோக்கிய சமூகமாக இலங்கையர் திகழும் காலம்

உலகில் சிறந்த ஆரோக்கிய சமூகமாக இலங்கையர் திகழும் காலம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலம் பொன் எழுத்துக்களால் பதியப்படும். இதற்கு அன்னாரது தூரநோக்கு கொண்ட சிந்தனையும், நடைமுறைச் சாத்தியமான செயல் திறன் மிக்க செயற்பாடுகளும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக விளங்குகின்றன.

இந்த நாடு சுதந்திரமடைந்து இற்றைக்கு 62 வருடங்கள் கடந்து விட்டன. இருந்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு செயல் திறன்மிக்க, தூரநோக்கு கொண்ட, தாய்நாட்டின் மீது பற்றுடைய ஒரு தேசிய தலைவரை இந்நாடு பெற்றுக் கொள்ளவில்லை. இது மறைக்க முடியாத உண்மையாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயல் திறன், தூரநோக்கு கொண்ட சிந்தனை, தாய்நாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் பற்று என்பன காரணமாக கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு நாட்டின் சகல துறைகளிலும் மறுமலர்ச்சியும், சுபீட்சமும், மேம்பாடும் ஏற்பட்டிருக்கின்றன. இதனைப் பரவலாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் நாட்டின் அரசாங்க சுகாதாரத் துறை அடைந்திருக்கும் வளர்ச்சி, மேம்பாடு குறித்து கவனம் செலுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அந்நாட்டில் வாழுகின்ற மக்களின் உடல், உள ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது முதல் அரசாங்க சுகாதார சேவையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த அடிப்படையில் அரசாங்க சுகாதாரத் துறையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பதில் ஜனாதிபதி அதிக அக்கறையுடன் செயற்படுகின்றார். அத்தோடு அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சகல வசதிகளை ஏற்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதியின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வகையில் அரசாங்க சுகாதாரத் துறைக்கென வருடா வருடம் பெருந்தொகை நிதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்றது. இது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் சுமார் மூன்று சதவீதமாகும். அரசாங்க சுகாதாரத் துறைக்கு முன்னொரு போதுமே இவ்வாறு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நாட்டில் சுகாதார சேவை நீண்ட காலமாக இலவசமாகவே வழங்கப்படுகின்றது என்றாலும் இச்சேவை மூலம் நாட்டு மக்கள் உச்ச பயனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தவகையில் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் மருத்துவர்கள், தாதியர் உட்பட சகல மட்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு எல்லா விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இத் திட்டத்தின் கீழ் அரசாங்க சுகாதாரத் துறைக்கு வருடாந்தம் மருத்துவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள். மஹிந்த சிந்தனையில் ஏற்கனவே அறிவித்தபடி 15 ஆயிரம் பேரை தாதியர் சேவைக்கு சேர்த்துக் கொள்ளவும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்ட தாதியருக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டு அரசாங்க தாதியர் சேவையினுள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தாதியர் பதவிக்குரிய தகுதியைப் பெற்றவர்கள் மிகவும் குறைவாக இருந்தனர். இதனைக் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வடக்கு, கிழக்கில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கலைப் பிரிவில் சித்தியடைந்தவர்களும் தாதியர் பதவிக்கு விண்ணப்பிக்கக் கூடிய தகுதியுடையவர்கள் என்ற விசேட ஏற்பாட்டை அறிவித்தது. இதன் மூலம் பலர் நன்மை அடைந்துள்ளனர்.

இதேவேளை பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதிப்படைந்துள்ள முழு சுகாதாரக் கட்டமைப்பையும் குறிப்பாக சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளையும் துரிதமாக மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கென மில்லியன் கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது.

மேலும் மலையக பெருந்தோட்ட ஆஸ்பத்திரிகளைக் கட்டம், கட்டமாக பொறுப்பெடுத்து அவற்றை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாடெங்கிலுமுள்ள பிரதான அரசாங்க ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளை (ஒ.பி.டி) வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்வதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக தினமும் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் அரசாங்க ஆஸ்பத்திரிகளின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக அரசாங்க சுகாதாரத்துறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, ஆஸ்பத்திரிகளின் வளங்களை மேம்படுத்தி நாட்டு மக்கள் சகலருக்கும் தரமான சிறப்பு மிக்க சுகாதார சேவையைப் பெற்றுக் கொடுக்கவே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரும்புகின்றது.

இதேநேரம் தொற்றும் நோய்களையும், தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்துவதிலும், அவற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுவதற்கும் தேவையான வழிகாட்டல்களையும் அரசாங்கம், சுகாதார அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வருகின்றது. இதன் பயனாக போலியோ, ஜேர்மன் சின்னமுத்து போன்ற பல தொற்று நோய்கள் ஏற்கனவே இங்கு கட்டுப்பாட்டு நிலையில் இருக்கின்றன. இதேபோல் மலேரியா, டெங்கு, விசர் நாய்க்கடி, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற பல நோய்களை அடுத்து வரும் ஐந்து வருடங்களில் முழுமையாகக் கட்டுப்படுத்தி விடவும் அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.

இந்நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக டெங்கு நோய் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இது நுளம்புகளால் பரப்பப்படும் ஒரு நோய் என்றாலும் வருடா வருடம் நூற்றுக்கணக்கானோரின் உயிர்களைக் காவு கொள்ளும் நோயாக இந்த டெங்கு விளங்கி வந்தது.

அதனால் இலங்கையருக்குப் பெரும் தலையிடியாக இருந்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது. சுகாதார அமைச்சு மாத்திரமல்லாமல், சுற்றாடல் கல்வி, உள்ளூராட்சி, மாகாண சபைகள், போக்குவரத்து, நிதி, நீர்வழங்கல் போன்ற பல அமைச்சுக்களும், இச்செயலணியினுள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இச்செயலணி தேசிய டெங்கு ஒழிப்பு வாரங்களையும், தினங்களையும் அவ்வப்போது அறிவித்தது, அவை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டன. அத்தோடு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அவ்வப்போது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் பொது மக்களின் ஒத்துழைப்போடு சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த சிரமதானப் பணிகளில் பாதுகாப்பு படையினரும் கூட ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேவேளை டெங்கு நோயை இரத்தப் பரிசோதனை மூலம் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு தேவையான நவீன மருத்துவ உபகரண வசதிகளும் நாட்டிலுள்ள சகல பிரதான ஆஸ்பத்திரிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

என்றாலும் டெங்கு நோய்க்கு உள்ளாகி உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பவர்களை அந்த ஆபத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார். இதன் பயனாக இம்மருந்துப் பொருள் நாட்டிலுள்ள பிரதான ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இத்தோடு நில்லாமல் நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியையும் பயன்படுத்துமாறும், ஜனாதிபதி சுகாதாரத் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். இதற்கேற்ப பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியில் ஒரு தொகுதி கியூபா நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதேநேரம் பி.ரி.ஐ.பக்aரியா நுண்ணங்கியை உள்ளூர் விஞ்ஞானிகளும் உற்பத்தி செய்துள்ளனர். நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பக்aரியா நுண்ணங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு விரிவான அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக இப்போது டெங்கு நோய் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்திருக்கின்றது.

இதேபோல் தொற்றா நோய்களின் பாதிப்புக்களிலிருந்து நாட்டு மக்களை குறிப்பாக இளம் பராயத்தினரைப் பாதுகாக்கவும், அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தவுமென ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மதுவுக்கு முற்றுப்புள்ளி, போதைப் பொருள் ஒழிப்பு, புகைபிடித்தல் தவிர்ப்பு நடவடிக்கைகள், பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் உடன் உணவு வகைகள், இனிப்புப் பானங்களின் விற்பனை தடை என்பன குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்களாகும்.

இருதய நோய்கள், நரம்புத் தொகுதி நோய்கள், நீரிழிவு, மன நோய்கள், புற்று நோய், உடல் பருமன் போன்ற தொற்றா உடலாரோக்கியப் பாதிப்புக்களிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கத் தொடங்கும் போது நாட்டில் தொற்றா நோய்களின் பாதிப்புக்கள் பெரிதும் குறைவடைந்து விடும்.

ஆக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் அரசாங்க சுகாதாரத் துறையை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளுகின்ற சகல வேலைத்திட்டங்களும் நாட்டு மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. இவ்வேலைத்திட்டங்களின் பலாபலன்களை நாட்டு மக்கள் அனுபவிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இதன் பயனாக உலகில் சிறந்த ஆரோக்கியம் மிக்க சமூகத்தினராக இலங்கையர் திகழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றால் மிகையாகாது.