.

2010-11-19

  வரலாற்றுத் துயர் துடைத்த நாயகன்

வரலாற்றுத் துயர் துடைத்த நாயகன்

இலங்கை - அந்நிய நாடுகளின் பொருளாதாரத்தில் தங்கியிராது தங்களின் பொருளாதாரத்தை தாங்களே கட்டியெழுப்பக் கூடியவாறு வளங்கள் நிறைந்த ஒரு நாடு. வேறு நாடுகளைப் போலல்லாது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று மிகக் குறைந்த இனங்களே இங்கு பூர்வீகக் குடிகளாகும். சிங்களம், தமிழ் என்ற இரு மொழிகள் மாத்திரமே இங்கு உபயோகத்திலும் உள்ளது.

எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்த பொழுதும் இந் நாட்டை நிர்வகித்து வந்த அரசியல் தலைமைகளும் கட்சியினரும் தாய் நாட்டின் மீது அன்பும் அக்கறையும் செலுத்தாது தங்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக மாத்திரம் காலத்திற்குக் காலம் முடிவுகளை எடுத்து வந்திருந்தனர். எழுகின்ற பிரச்சினைகளுக்கு முறையான முடிவுகளை எடுக்காமல் சந்தர்ப்பவாதமான தீர்மானங்களையே மேற்கொண்டிருந்தனர்.

இதனால் இந்நாடும் இங்கு வாழும் மக்களும் தொடர்ச்சியாக வரலாற்றுத் துயரங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. நாட்டில் வாழுகின்ற பல்லின மக்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக கொள்ளப்படாமல் இன முறுகல்களும் துவேஷங்களும் இங்கு விதைக்கப்பட்டிருந்தன.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முளைவிடத் தொடங்கிய வேளை முதல் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்களுக்கு தனியுரிமை - தனியாட்சி தொடர்பாக வாதாட ஆரம்பித்தனர். இவ்வாதாட்டத்தினைக் கருத்திற்கொண்டு அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த நம் நாட்டின் ஆட்சியாளர்கள் எல்லா இனங்களையும் ஒன்றுபோல் நடத்துவதற்கான சந்தர்ப்பங்களும் அவ்வாறான மனநிலைக்கு நாட்டு மக்களை கொண்டு வருவதற்குமான அவகாசங்களும் நிறையவே இருந்தன.

இருப்பினும் அவர்கள் நாட்டின் வெற்றியைவிடவும் தங்களுடைய வெற்றியை மாத்திரமே கருத்திற்கொண்டதனால் மக்களிடையே இனத் துவேசங்களை விதைத்தும் குலவர்க்க பேதங்களுக்குத் தீனி போட்டும் தாம் ஆட்சிக்கு வருவதற்காக இலகு வழிப்பாதைகளை அமைத்துக் கொண்டனர். இதனால் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இடம்பெற வேண்டிய நமது நாடு வளர்ச்சியில் பல்லாண்டு காலம் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. சுமார் 30 வருட காலம் தொடர்ச்சியான இரத்த ஆற்றைக் காண வேண்டியும் ஏற்பட்டது.

இக்காலப் பகுதியில் ஆட்சிக்கு வந்த தலைமைகளும் தங்களுடைய பதவிக் காலத்தைக் கடத்திச் செல்வதற்காக மாத்திரமே உபாயங்களை வகுத்தும் கொண்டிருந்தனர். எந்த விடயத்திற்கும் நிரந்தரமான தீர்வுகளையும் அவர்களால் எடுக்க முடியாது போனது. ஆட்சிகளில் ஸ்திரத் தன்மையும் இருந்திருக்கவில்லை. சுதந்திர நாடு என்ற பெயரைத் தவிர நாட்டின் எப்பாகத்திலும் யாருக்கும் சுதந்திரம் இருந்திருக்கவில்லை. விவசாயிகள், - மீனவர்கள் - தொழிலாளிகளின் நடமாட்டம் முடக்கப்பட்டது.

ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைகளில் இருந்து வீடு திரும்புவது நிச்சயமற்றதொன்றாக இருந்தது. அரச ஊழியர்கள் அமைச்சுக்களில் இருக்கின்ற உயரதிகாரிகள் காரியாலயங்களுக்கு போவதில் அச்சமிருந்தது. மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள் கூட இருக்கின்ற இடம் சொல்லாது வாழவேண்டி ஏற்பட்டது. ஜனாதிபதிகளை மக்கள் ஊடகங்களில் மாத்திரம் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டது.

இன்னும் - தலதா மாளிகை உட்பட பெளத்த விகாரைகள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், இந்துக்களின் கோயில்கள் பல குண்டுகளினால் இடிந்து வீழ்ந்தன. இறைவனை - கடவுளை – புத்த பிரானை - இயேசு நாதரை மக்கள் வணங்குவதற்குக் கூட வழிதெரியாத நிலையில் திண்டாடிக்கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயங்கள் பெற்றுக்கொள்ளப்படாமல் வடக்கோடு கிழக்கு இணைக்கப்பட்டு கிழக்கு மாகாணத்து மக்களின் சுதந்திரம்

மறுக்கப்பட்டிருந்தது. இனச் சுத்திகரிப்புக்காக வடக்கு முஸ்லிம்கள் வெறுங்கையோடு பயங்கரவாதிகளினால் அங்கிருந்து துரத்தப்பட்டிருந்தனர். கிழக்கிலும் கிராமங்கள் தோறும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் என்றும் பாராமல் தொழுகையிலும் ஷகீதாக்கப்பட்டனர்.

இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீலாத் விழா மாத்தறை - அக்குரஸ்ஸவில் நிகழ்ந்த பொழுது பயங்கரவாதிகளினால் குண்டுவீசப்பட்ட கோரச் சம்பவத்தினாலும் மக்கள் ஆறாத் துயரம் கொண்டனர்.

தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதங்களுக்கப்பால் புத்தி ஜீவிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பாவி மீனவர்களும் விவசாயிகளும் தங்களது வேலைத் தளங்களிலே உயிர் மாய்க்கப்பட்டனர். இத்துன்பியல்புகளிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடும் காலம் வராதா என்று நாடு முழுவதும் மக்கள் ஏங்கித் தவித்தனர்.

இந்நிலையில் நம் நாட்டிற்கு நாட்டுப் பற்றும் மக்களில் அன்பு செலுத்துகின்றதுமான தலைமை ஒன்று உருவாக்கப்படுவதன் மூலமே இம்மக்களின் இவ் ஏக்கத்திற்கு தீர்வுகாண முடியும் என்று தேசிய காங்கிரஸ் உறுதி பூண்டிருந்தது. தீர்மானங்களை சந்தர்ப்பவாதமாக எடுக்காமல் நாட்டின் நலனுக்காகவே எடுத்து அமுல்படுத்தக்கூடிய தலைமையாகவும் அது இருக்க வேண்டுமென தேசிய காங்கிரஸ் அவா கொண்டிருந்தது.

இந்நிலையில் 2005 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான் இக்காலகட்டத்தில் இந்நாட்டை வழிநடத்தக்கூடிய பொருத்தமான தலைமை என என்னுடைய தலைமையில் கூடிய தேசிய காங்கிரசும் உறுதிபூண்டது.

எதிரணியில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஐக்கிய தேசியக் கட்சியோடு முஸ்லிம், தமிழ் சமூகத்திலிருந்து பல சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து ரணிலின் வெற்றிக்காக பகீரதப் பிரசயத்தனங்களை எடுத்திருந்தன. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களோடு இணைந்திருந்த கூட்டணியினரின் கடின உழைப்பினால் சுமார் 150,000 வாக்குகளினால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்.

இவ்வெற்றியானது நீண்ட காலத் துன்பியல்களுக்குள் மாட்டியிருந்த இந்நாட்டு மக்களை விடுவிப்பதற்கு இறைவன் கொடுத்த கொடையாக நான் பார்க்கிறேன். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து அவரோடு பணியாற்றக் கிடைத்தது எனது வரலாற்றில் ஒரு வரமாகும் எனவும் கருதுகின்றேன்.

அவருடைய தலைமையிலான அரசாங்கம் நாட்டிற்கும் வாழும் மக்களுக்கும் சுதந்திரத்தினையும் பாதுகாப்பினையும் மீளப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியது.

உள்ளொன்றும் புறமொன்றுமான அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது. ஏனைய அரச தலைவர்களைப் போலல்லாது பிரிவினை கோரிய புலிகளோடும் உண்மைப் பேச்சுவார்த்தைக்கு முனைந்தது. பேச்சு வார்த்தைகள் மூலம் சாந்தி சமாதானத்தையும் நாட்டு மக்களுக்கான நிம்மதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு நம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதய சுத்தியோடு தொழிற்பட்டார்.

ஆனாலும் புலிப் பயங்கரவாதிகள் நமது நாட்டின் முன்னைய தலைவர்களிடத்தில் நடந்து கொண்டதை போன்றே செயற்பட்டதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய நல்லெண்ணத்தையும் உதாசீனப்படுத்தினர். புலிகள் வினாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை போரொன்றிற்கு வலிந்தும் இழுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, புலிகள் சார்பான வெளிநாடுகளின் அழுத்தம் தவிரவும் முப்படைகளிலிருந்த வளக் குறைவுகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நிலைகுலையச் செய்திருக்கவில்லை. நாட்டின் தலைமை என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டிற்காக தீர்க்கமான முடிவினை இறுக்கமாக எடுத்து பயங்கரவாதிகளோடு யுத்தம் புரிவதற்கு காலடி எடுத்து வைத்தார்.

தன்னை சிறையிலடைத்தாலும் பயங்கரவாதத்தை ஒழித்து இந்நாட்டின் எல்லா மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுப்பேன் என்ற அவருடைய பிரகடனம் அவரின் எண்ணத்திலிருந்த தூய்மையையும் நாட்டு மக்களிடையே அவர் கொண்டிருந்த அன்பையும் வெளிக்காட்டி நின்றது.

அவருடைய தொடர் நடவடிக்கைகளினால் கிழக்கு மாகாணத்தின் நிருவாகம் தனியாக்கப்பட்டது. இதன் மூலமே அங்கு வாழும் மூவின மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்ற தேசிய காங்கிரசின் பிரகடனமும் பலிதமானது.

கிழக்கிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் மீட்டுக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வட மாகாணத்திலிருந்தும் புலித் தலைமை பிரபாகரன் உட்பட பயங்கரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது உலகெங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை உயர்த்த வைத்தது. அவரின் தீர்க்கமான முடிவுகள் முப்படைத் தளபதியாக இருந்து யுத்தத்தினை வெற்றி கண்ட முறைமைகளை உலகம் முழுவதும் ஆச்சரியாகப் பார்த்தது. ஏத்தனையோ வல்லரசு நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாமலிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் பெரும் பயங்கரவாதிகளாக உலகத்தினரால் நம்பப்பட்ட விடுதலைப் புலிகளின் அழிவானது அரசியல் வரலாற்றில் தடம்பதித்த பெரும் நிகழ்வானது சதிகாரர்களுக்கு மேல் சதிகாரன் ஆண்டவன் என்பதுவும் இங்கு நிருபணமானது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் மூச்சு விட்டு நிம்மதியாக ஆறுகின்ற நிலை உருவாகியது. ஒவ்வொரு குடிமகனும் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து, இயற்கையான காற்று தங்கள் மேனியிலே படத் தூங்குவதற்கான சூழல் உருவாகியது.

வயல்களெங்கும் விவசாயிகள் சுதந்திரமாக உழுகின்றார்கள். நிறைந்த விளைச்சல்களையும் பெறுகின்றார்கள். கடலிலே மீன் பிடிக்கும் வள்ளங்கள் இராப் பகலாக நிறைந்து காட்சியளிக்கின்றன. இந்து ஆலயங்கள் திறக்கப்பட்டு மணியோசைகள் கேட்டவண்ணம் இருக்கின்றன. பள்ளிவாசல்களில் இரத்தக் கறைகள் கழுவப்பட்டு ஐவேளையும் மக்கள் தொழுதுகொண்டிருக்கின்றார்கள்.

பெளத்த ஆலயங்களும் அவ்வாறுதான். வடக்கு கிழக்கு பிரதேசத்தின் வழக்கொழிப்பினையும் வனப்பினையும் கண்டுகளிப்பதற்காக நாட்டின் ஏனைய பிரதேசத்தின் மக்கள் முண்டியடித்து உலா வருகின்றனர்.

வெளிநாட்டின் உல்லாச பயணிகளாலும் நாடு நிறைந்த வண்ணமிருக்கின்றது. இப்பொழுதெல்லாம் பாதைகளில் பாதுகாப்புத் தடைகளில்லை. வேட்டுச் சத்தங்கள் எமது காதுகளில் விழுவதில்லை. கப்பம் என்ற சொல்லும் தொலைந்துவிட்டது. அகதிகளும் குறையத் தொடங்கினார்கள். ஒரு நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உண்மையான சுதந்திரமும் நம் நாட்டிற்கு கிடைத்திருக்கின்றது.

இதனால்தான் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் சுமார் 20 இலட்சம் மேலதிக வாக்குகளை அளித்து மீண்டும் ஒரு முறை மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசிற்குக் கிடைத்தது.

முன்னைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்களின் அரசினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு, அவரின் தேர்தல் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எந்த அரசும் பெறமுடியாதிருந்தது. ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இக்கருத்தினை முறியடித்திருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் யுத்தம் நடந்ததற்காக நாட்டைப் பட்டினியில் போட்டிருக்கவில்லை. அபிவிருத்திகள் தூரமாக்கப்பட்டிருக்கவுமில்லை. மாறாக ‘கம நெகும வேலைத்திட்டம்’ ‘மக நெகும வேலைத்திட்டம்’ ‘நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற திட்டங்களினூடாக கிராமங்கள் எழுச்சி பெற்றிருக்கின்றது. விவசாயம் புரட்சி கண்டு நாடு தன்னிறைவுக்கு நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

மேலும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்பன நாட்டின் எல்லாப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதிலுமுள்ள பெருந்தெருக்கள் துரித அபிவிருத்தி கண்டிருக்கின்றது. மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு துரிதமாக மறு வாழ்வு அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தினால் சிதைவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீளக் கட்டுவதற்காக ‘கிழக்கின் உதயம்’ ‘வடக்கின் வசந்தம்’ எனும் வேலைத் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவைகளினால் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் உள்ள பல்லின சமூகங்களாலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2010 நவம்பர் மாதம் 19ஆம் திகதி தன்னுடைய இரண்டாவது முறையான ஜனாதிபதி பதவிக்கு மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கிறார். கடந்த காலங்களைப் போன்றில்லாமலும் முன்னைய தலைமைகள் சத்தியப் பிரமாணம் செய்ததைப் போன்றில்லாமலும் முற்றுமுழுதாக சுதந்திரம் கிடைக்கப் பெற்ற இலங்கை நாட்டிலிருந்து அவர் சத்தியப் பிரமாணம் செய்யவிருக்கிறார்.

எந்த சக்திகளுக்கும் அஞ்சி, பாதுகாப்பினை அதிகம் பலப்படுத்தி அலட்டிக் கொள்கின்ற நிலைமைக்கு மாறாக சுதந்திரமாக நின்று சத்தியப் பிரமாணம் எடுக்கவிருக்கும் இந்த மஹிந்த ராஜபக்ஷ நமது நாட்டின் வரலாற்று நாயகனே. ஆசியாவின் அதிசயம்மிக்க தலைவனும்தான்.

பயங்கரவாதம் அழிக்கப்பட்டதுபோன்று நம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இனவாதங்களும் தொலைக்கப்பட்டு இனங்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்துகின்ற சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது. முறையான பேச்சுக்களின் மூலமாக ஒவ்வொரு இனங்களுக்கும் உரித்தான உரிமைகளைப் பெற்று மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான காலமும் கனிந்துவிட்டது.

எனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி நீண்டு நிலைத்து இந்நாடும் நம்மவரும் வளம்பெற என்னுடைய வாழ்த்துக்கள்.