.

2010-11-19

  வரலாற்று வெற்றிதரும் பாரிய அபிவிருத்தி

வரலாற்று வெற்றிதரும் பாரிய அபிவிருத்தி

அம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்

அபிவிருத்தி திட்டங்களினால் இலங்கையின் புவியியல் தரைதோற்ற மாதிரியை மாற்றிய முதல் சந்தர்ப்பமாக தற்போதைய அரசாங்கத்தால் நாடுபூராவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களைக் குறிப்பிடலாம்.

வரலாற்றின் ஆரம்பம் தொட்டே அம்பாந்தோட்டையில் துறைமுகம் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. இக்காலத்தில் கடல் மார்க்க வியாபாரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பிரதான படகுப் பாதைக்கு சுமார் பத்து கடல் மைல் தொலைவில் அம்பாந்தோட்டை அமைந்திருப்பதானது இதன் கேந்திர முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது. புராதன காலம் தொட்டே உருகுணை தொடவாய துறைமுகம் கடல் மார்க்க வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த தெற்கின் பிரதான துறைமுகமாகத் திகழ்வதோடு, இது அம்பலாந்தோட்டை மற்றும் அம்பாந்தோட்டை நகர்களுக்கு இடைப்பட்ட இடமாகவும் காணப்படுகின்றது.

எம்பிலிபிட்டிய நகருக்கு அண்மையில் சந்திரிக்கா வாவி அமையப் பெற்றுள்ள இடத்தில் இரும்புருக்கு தொழிற்சாலையிலிருந்து ரோமானியா சிப்பாய்களுக்காக பாதுகாப்பு கலசங்கள், வாள்கள் என்பன தயாரிக்கப்பட்டு கொடவாய துறைமுகத்தினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. போத்துக்கேய, ஒல்லாந்த மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இத் துறைமுகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது மாத்திரமின்றி அவர்களுடைய கவனம் திருகோணமலை, கொழும்பு துறைமுகங்களிலேயே செலுத்தப்பட்டிருந்தது.

மாகம்புர துறைமுகத்தின் முக்கியத்துவத்தினை அப்போது ஆங்கிலேயர் காலத்தில் அம்பாந்தோட்டை அரசாங்க அதிபராக கடமையாற்றிய சேர் லொனால்ட் வுல்ப் (ழிலீonalனீ தீoolஜீ) அவர்கள் தனது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தினையும், அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மாகம்புர துறைமுக நிர்மாணத்திற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகளை அப்போதைய அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தை அமரர் டி. ஏ. ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதற்கு சாதகமாக அக்காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததோடு, தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் இத்திட்டத்தினை புறக்கணித்து வந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியில் தொழில் அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் மாகம்புர துறைமுக நிர்மாணத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தமும் உள்நாட்டில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களும் இந்தப் பணியை மேலும் தாமதமாக்கின. இருந்தாலும் இந்தக் கனவை நனவாக்க உறுதிபூண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் இதன் பணிகளை வெற்றிகரமாக ஆரம்பித்தார்.

இதன் விளைவாக இந்த நாட்டினதும், மக்களினதும் 40 வருட கால கனவு நனவாகி, உலகில் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதல் துறைமுகமாக மாகம்புர துறைமுகம் காட்சியளித்து நிற்கின்றது.

முதல் கட்டட நிர்மாணப்பணிகளின் போது மூன்று கப்பல்களை நிறுத்தக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு இரணடாம் கட்ட முடிவில் பத்து கப்பல்கள் நிறுத்தக்கூடிய வசதிகளும் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகளின் இறுதிக் கட்ட முடிவில் 44 கப்பல்களை நிறுத்தக் கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதனால் இது எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள மிகவும் பிரமாண்டமான துறைமுகமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு இதன் நிர்மாண வேலைகளையும் இந்த மாதம் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதோடு நிர்வாக கட்டிடத் தொகுதியின் நிர்மாண வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் எதிர்காலத்தில் மாகம்புர துறைமுகத்தினூடாக 250000 இற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் ஏற்படவுள்ளதோடு, இதற்குத் தேவையான பயிற்சி பெற்ற ஊழியர்களைப் பெறும் பொருட்டு தொழில் பயிற்சி நிலையங்களில் இத் துறைசார்ந்த தொழில் பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறைந்த காலப்பிரிவில் சுமார் மூன்று வருடங்களுக்குப் பாரியதொரு செயற்கை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு ஏதுவான காரணியாக தேவையான 2000 ஏக்கர் நிலம் இப் பிரதேசத்தில் காணப்பட்டமை விசேட அம்சமாகும்.

வளர்ச்சி அடைந்த, மத்திய கிழக்கு நாடுகள் கடல்களை நிரப்பி வான் உயர கட்டிடங்களையும், தீவுகளையும் அமைத்து வருகின்ற போது இலங்கை அதன் துறைமுகத்தை உள்நாட்டிலுள்ள நிலத்தில் நிர்மாணித்திருப்பது உலக மக்கள் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்நாட்டு தேசிய வருமானத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய முக்கிய அபிவிருத்தித் திட்டமாக மாகம்புர சர்வதேச துறைமுகம் திகழ்வதோடு, இதனால் பொறியியல், முகாமைத்துவம், வியாபார சேவை, சரக்குகளை கையாள்தல் போன்ற புதிய தொழில் துறைகளினூடாக அதிக தொழில் வாய்ப்புகள் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படவுள்ளன.

மாகம்புர துறைமுக அபிவிருத்தியுடன் இணைந்து இப்பிரதேசத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்தலை சர்வதேச விமான நிலையம், மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச மாநாட்டு மண்டபம், உலர்வலய தாவரவியற் பூங்கா, நிர்வாக கட்டடத் தொகுதி, மாத்தறை- கதிர்காம புகையிரதப் பாதை, நெடுஞ்சாலைகள் என்பனவே அவை.

இலங்கை வாழ் மக்களின் நீண்டகால கனவு வரலாற்று நாயகனின் பிறந்த தினத்தன்று நடைபெறுகின்றமையினால் இது ஒரு வரலாற்று நிகழ்வாக திகழ்வதோடு, முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்திற்கு ஆளாகியிருந்த வடக்கு மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்து ஜனாதிபதி திஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமது ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இந்த உலக ஆச்சரியத்தை நேரில் பார்வையிடவுள்ளனர்.