.

2010-11-19

  பட்டறிவுப் பாடங்களும் நல்லிணக்கமும்

நிரந்தர அமைதியை நோக்கிய...

பட்டறிவுப் பாடங்களும் நல்லிணக்கமும்

முரண்பாடுகள் நிறைந்த மூன்று தசாப்த காலம் பட்டறிவுப் பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டு நகர்ந்துவிட்டிருக்கிறது. இலங்கை வாழ் இனங்களை நெருடிய இந்த மூன்று தசாப்த காலத்தில் தமிழர்களைப் பொறுத்தவரை 2002 பெப்ரவரி 22ஆம் திகதி முதல் 2009 மே மாதம் 18 ஆம் திகதி வரையிலான காலம் கூடுதல் இன்பத்தையும் கூடுதல் துன்பத்தையும் விளைவித்துக்கொண்ட காலப் பகுதி எனலாம்.

இன்று அந்தப் பட்டறிவுப் பாடங்கள் மூலம் கற்றுக்கொண்டதை வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. முரண்பாட்டுக்கான மூலாதாரத்தைக் கண்டறிந்து பரிகாரம் தேடுவது இதன் இலக்கு. இலங்கை மண்ணிலிருந்து யுத்தம் இறுதியாகத் துடைத்தெறியப்பட்டதன் பின்னரான நோக்கு! அதற்கான பணிகளையே கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னெடுக்கின்றது.

யுத்தத்திற்கு முடிவுகட்டிய ஒரே நாடு என்ற பெருமையில் மக்கள் நெகிழ்ந்துகொண்டிருக்கையில் சர்வதேசம் இலங்கை மீது அகலக் கண்விழிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனிடையே முரண்பாட்டுக்கான மூலத்தை அறிந்து முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறுப்பு இந்த ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல்வாதிகளிடையே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இனப்பிரச்சினை விடயம் இன்று மக்கள் மத்தியில் சென்றடைந்திருக்கிறது. முரண்பாட்டின் சாதக பாதகங்களைத் தெரிந்துகொண்டு அபிப்பிராயம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு நாட்டின் அனைத்து மட்ட பிரிவினருக்கும் கிடைத்திருக்கிறது.

இதன் காரணமாக ஆறு மாதங்களுக்கென வரையறுக்கப்பட்டிருந்த விசாரணைகள் நீடிக்கப்பட்டுள்ளன. இப்போதுதான் முரண்பாட்டின் தாற்பரியம் சாதாரண மக்களால் புரியப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தில் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்களும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். சமவுரிமைக்கும் சமத்துவ வாழ்வுக்கும் அவர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். பொதுவாக பக்கச் சார்பற்ற சாட்சியங்களைப் பெற்றுக் கொடுக்கின்றனர். சிலர் வன்முறைகள் தோன்றுவதற்கான காரணிகளை எடுத்துரைப்பதுடன், அரசியல் தலைவர்கள் இழைத்த தவறுகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆணைக் குழுவின் தலைவர் முன்னாள் சட்ட மா அதிபர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான உறுப்பினர்கள் அமைதியாக சாட்சியங்களை செவிமடுத்துத் தெளிவுபடுத்திக் கொள்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த இந்தக் குழு, சாட்சியமளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டு கருத்துகளையும், பரிந்துரைகளையும் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றது. இதில் கத்தோலிக்க திருச் சபையினர் அண்மையில் கொழும்பில் அளித்த சாட்சியம் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகியது. அதேபோன்று அடிப்படைவாத சிந்தனையுள்ள சிலரும் தமது கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர். சிவிலியன் ஒருவர் சாட்சியம் அளித்த போது இந்தப் பிரச்சினை 30 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது அல்ல, மாறாக 2002 – 2009 காலப் பகுதியை மட்டும் ஆராய்வது உசிதமானது அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி பொதுமக்கள் சார்பில் தமது கருத்துகளைப் சொன்னார்.

இந்த நல்லிணக்க ஆணைக் குழு முன்பாக மக்களின் துணிச்சலான கருத்துகள் பிரவாகமாய் வெளிவருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

கொழும்பு ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடந்த விசாரணைகளைவிடவும், வன்னியில் நடந்த பகிரங்க அமர்வின் போது மக்கள் மனந்திறந்து சாட்சியமளித்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின்போது தப்பி வந்த மக்கள் தமது அனுபவங்களைக் கொட்டித் தீர்த்ததுமல்லாமல், ‘காணாமற்போன உறவுகளைத் தேடித் தாருங்கள்’ என்ற கோரிக்கையினை வலுவாக முன்வைத்திருக்கிறார்கள். இறுதியுத்தம் பற்றியும், மீள்குடியேற்றம் குறித்தும் கொழும்பிலிருந்து கருத்துகளைச் சொல்வதை விடவும் மக்கள் தாமாகவே தமது நேரடி அனுபவங்களையும் குறை நிறைகளையும் கூறுகின்றனர். வாழ்வாதார பிரச்சினைகள், வாழ்விடச் சிக்கல்கள், சவால்களை மக்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிரதேச செயலகங்களில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளையில் மக்களின் மீள் குடியேற்றப் பகுதிகளுக்கும் சென்று ஆணைக் குழுவின் தலைவர் சில்வா நிலைமைகளை ஆராய்ந்து வருகிறார்.

இதன் மூலம் மக்களின் நிலவரங்களைச் சாட்சியங்கள் மூலமாகவன்றி நேரிலும் அறிந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஆணைக் குழுவுக்கு கிடைத்திருக்கிறது- அரச அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் சில பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் முடிந்திருக்கிறது. எங்கட சொந்தக் காணிக்குப் போக விடாம தடுக்கினம். கால் வைச்சா எலும்ப முறிப்பம் எண்டு சொல்லுகினம். ஒரு காட்டுத் தொங்கலிலை கொண்டுபோய் விட்டிருக்கினம்.

இப்படி பல முறைப்பாடுகள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களிடம் உடனுக்குடன் கலந்துரையாடி தீர்வையும் பெற்றுக் கொடுக்கிறார் ஆணைக் குழுவின் தலைவர்.

காணாமற் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கான தீர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார் சில்வா. தடுப்புக் காவல் முகாமுக்குச் சென்று இளைஞர்களுடன் கலந்துரையாடியது மட்டுமல்லாது, பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்புக் கைதிகள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பித்திருக்கிறார். தற்போது அவர்களின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகக் கூறுகிறார் ஆணைக் குழுவின் தலைவர்.

இவ்வாறு நல்லிணக்க ஆணைக் குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. இந்தக் குழுவின், மூலம், இந்நாட்டு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்று முன்வைக்கப்பட்டு அமுலாக்கப்படுமா? என்பதுதான் அடுத்த கேள்வி. இதற்கு முன்பு யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது முன்னாள் நீதியரசர் சன்சோனி தலைமையில் ஓர் ஆணைக் குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால், அந்தக் குழு நியாயத்தைப் பெற்றுக்கொடுத்ததா என்பதைப் பற்றி தமிழர் தரப்பில் இன்னமும் கேள்வி எழுப்பப்படுகிறது. அது பிரச்சினை தொடர்ந்து வந்த காலகட்டம். இது மூலாதாரப் பிரச்சினையால் ஏற்பட்ட விபரீத விளைவுகளுக்கு முடிவுகட்டப் பட்டுள்ள காலகட்டம்.

சந்தேகங்களைக் களைந்து பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் நிரந்தரமான அமைதியை நிலைபெறச் செய்யலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கும் காலகட்டம்.

இந்த நிலையில்தான் நல்லிணக்க ஆணைக் குழு ஓர் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. அதில் முக்கியமாக தமிழ் மொழியை அமுல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும், மக்கள் தமது சொந்த மொழியில் கருமங்களை ஆற்றிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடுதலை செய்வதற்கான உரிய பொறி முறையொன்றைக் கண்டறிய வேண்டுமென்றும் ஜனாதிபதிக்கு ஆணைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை அமுல்படுத்த ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாக இருந்தாலும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கவே செய்கின்றது. மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும் போர்க் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் மூலமான குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்கின்ற சூழ்நிலையில், நடுநிலை போக்கில் விடயங்களைக் கையாள வேண்டிய கடப்பாடு ஆணைக் குழுவுக்கு இருக்கின்றது. அதேநேரம் மக்கள் தமது அனுபவங்களின் மூலம் முன்வைக்கும் தகவல்களையும், கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் இந்தக் குழுவுக்கு இருக்கிறது.

எனவே கற்றறிற்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரை அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்பட வேண்டும். மூன்று தசாப்த கால முரண்பாட்டுக்கான மூலாதாரப் பிரச்சினைகளைத் தான் பெற்ற சாட்சியங்களின் ஊடாக இனங்காண்பதுடன், அவை மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்தக் குழுவின் பரிந்துரை இன்றியமையாதது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையினை விடவும் இந்த ஆணைக் குழுவின் பரிந்துரை அறிக்கைதான் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கப் போகிறது என்றால் மிகையில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைக் கண்பதற்கு இந்தக் குழுவின் பரிந்துரைதான் பக்கபலமாக அமையப் போகிறது. அரசியற் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைகளுக்கு அப்பால் நாட்டின் அனைத்துச் சமூகத்தையும் சார்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கொண்ட ஓர் அரசியல் நல்லிணக்கமே நிரந்தர அமைதியை நிலைபெறச் செய்யும்.

மக்கள் தாம் இழந்த உயிர்களைத் தவிர வேறு அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக தமது முதலாவது பதவிக் காலத்தில் ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வது தமது இரண்டாவது பதவிக் காலத்தின் இலக்கு என்கிறார் ஜனாதிபதி. எனவே நிரந்தர அமைதி, நிம்மதியான வாழ்வு என்பவற்றை நிலைபெறச் செய்யும் இரண்டாவது பதவிக் காலம் நம்பிக்கை தரும் நற்காலமாய் அமையட்டும்.