.

2010-11-19

  கொழும்புத்துறையிலுள்ள 4 கிராம மக்கள் மீள்குடியேற நடவடிக்கை

கொழும்புத்துறையிலுள்ள 4 கிராம மக்கள் மீள்குடியேற நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி

யாழ். கொழும்புத்துறையில் உள்ள 04 கிராமங்களில் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து மக்கள் பிரதிநிதிகளும் கிராம சேவையாளர்களும் பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் அந்தப் பகுதியில் மிதிவெடி அபாயம் இருக்கின்றதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னரே மக்கள் குடியேற அனுமதிக்க முடியும் எனவும் மிதிவெடி செயற்பாட்டு பிரதிநிதிகள் தெரிவித்த அதேவேளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் அம்மக்கள் மீள்குடியேற முடியுமென்றும் அந்தற்கேற்ற விதத்தில் தமது பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அமைச்சரின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மக்கள் தாம் தற்போது எதிர்நோக்கி வருகின்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரிடம் தெரியப்படுத்தினர்.

கொழும்புத்துறையில் உள்ள எழிலூர், உதயபுரம், புனிதபுரம், மகேந்திரபுரம் மற்றும் பாசையூர் கடற்கரைப் பகுதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மேற்படி மக்கள் 1995ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து இற்றை வரை உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அமைச்சருடன் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, நகர பிரதேச செயலாளர் சுலோஜினி, யாழ். மாநகர சபை உறுப்பினர் துரைராஜா இளங்கோ aகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


“கல்வியின் மூலம் சிறந்த நற்பிரஜைளை உருவாக்கும் நிலை உருவாக வேண்டும்”

“கல்வியானது படித்தவரை மட்டும் உருவாகுதல், மாறாக சமூகப் பொருத்தப்பாடுடைய சிறந்த நற்பிரஜையை உருவாக்கும்.

இவ்விலக்கை நோக்கியே எமது தாபனம் செயற்பட்டு வருகிறது”

இவ்வாறு மனித அபிவிருத்தித் தாபன ஸ்தாபகரும் தலைவருமான பி. பி. சிவப்பிராகாசம் சம்மாந்துறையில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

சம்மாந்துறை வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல்பெற்ற 504 மாணவர்ளைப் பாராட்டும் வைபவம் சம்மாந்துறை தாருஸலாம் மகாவித்தியாலயத்தில் வியாழனன்று கோலாகலமாக நடைபெற்றது.

அங்கு தலைவர் பி. பி. சிவப்பிரகாசம் மேலும் கூறுகையில்:-

“கல்வியால் படித்தவர்கள் மாத்திரம் உருவாகினால் ஏனையோரின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

படித்தவர்கள் என்று சொல்லப்படுவோரில் ஒரு சிலரே படித்தவற்றை மக்களின் சேவைக்காக, பொதுச் சேவைக்காகப் பயன்படுத்துகின்றனர்.

எனவே கல்வியானது படித்தவர்களை மாத்திரம் உருவாக்குவதில்லை.

மாறாக சமூகப் பொருத்தப்பாடுடைய சிறந்த நற்பிரஜையை உருவாக்கும் பணியினையும் செய்து வருகிறது.

எமது மனித அபிவிருத்தித்தாபனமும் மாணவனின் திறமைகளைப் பாராட்டி சிறந்த மனித வளத்தை, சிறந்த பிரஜையை உருவாக்கவே செயற்படுகிறது.

எனவேதான் வெட்டுப்புள்ளியை மாத்திரம் பொருட்படுத்தாமல் 100க்கும் மேல் புள்ளிகளைப்பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி வருகிறது.

இதுவரை 10 ஆயிரம் மலையக மாணவர்களை 23 வருடங்களில் பாராட்டினோம்.

ஒரு பரீட்சையை மையமாக வைத்து மட்டும் பாராட்டாமல் பிறதிறமைகளையும் இனங்கண்டு பாராட்ட வேண்டும்.

அப்போது எமையறியாமலே கல்வி அபிவிருத்தி காணும்” என்றார் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.