.

2010-11-19

  ஜனாதிபதியின் தீர்க்கதரிசனம் மிக்க வெளிநாட்டு உறவுகள்

ஜனாதிபதியின் தீர்க்கதரிசனம் மிக்க வெளிநாட்டு உறவுகள்

ஜனாதிபதியாக இரண்டாம் தடவையும் பதவியேற்கும் மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் மாத்திரமன்றி வெளிநாடுகளில் நல்லுறவுகளைப் பேணி வெளிநாடுகளின் அபிமானத்தையும் வென்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.

அணிசேராக் கொள்கையைக்கடைப்பிடிக்கும் இவர், சீனா, இந்தியா, ஜப்பான், ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உட்பட பெரும்பாலான உலக நாடுகளுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணி வருகின்றார். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை முன்னெடுத்த போர் நடவடிக்கைகளாகட்டும், சமாதான காலத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகளாகட்டும் அனைத்து செயற்பாடுகளுக்கும் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக உதவி வருகின்றன என்றால் அது ஜனாதிபதி வெளிநாடுகளுடன் கொண்டிருக்கும் நட்புறவைப் பறைசாற்றுகிறது.

பயங்கரவாதத்தை நாட்டைவிட்டு முற்றாக ஒழிக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் ஸ்திரமான திட்டத்துக்கு ஒரு சில சர்வதேச நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்தாலும், எந்தவொரு நாட்டுடனும் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் பெரும்பான்மை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி அதில் வெற்றியும் கண்டார். அதற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கும் பெரும்பாலான நாடுகள் தமது உதவிகளைத் தொடர்கின்றன.

இலங்கையின் வடபகுதியில் கடும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பில் சார்க் உச்சிமாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தலைமையில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அப்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வறுமையொழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் போன்றவற்றுக்கு சார்க் அங்கத்துவ நாடுகள் தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்கின.

மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்ட சூழ்நிலையில் ஈரான் தலைநகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் ஜீ-15 மாநாட்டில் தலைமைப்பொறுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருப்பதானது சர்வதேச நாடுகள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 2012ம் ஆண்டு ஜீ-15 மாநாட்டை இலங் கையில் நடத்தும் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

வெளிநாடுகளுடன் ஜனாதிபதி கொண்டிருக்கும் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைக் கொண்டு நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் தருணத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கத் தயாரென்று உறுதிமொழியும் வழங்கியுள்ளார்கள்.

இலங்கைக்கு எப்பொழுதும் உதவி வழங்க முன்நிற்கும் நாடாக அயல் நாடான இந்தியா அமைந்துள்ளது. இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் தொப்புள்கொடி உறவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்தியா இலங்கையுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருகிறது.

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையிலுள்ள சகல இன மக்களும் இறைமையுடன், ஒற்றுமையாக வாழ முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமானதாக அமையும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்தியிருந்தார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்திலும், போருக்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பணிகளிலும், தமிழர்களின் மீள்குடியேற்றங்களிலும் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருவதானது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இதேபோல, இலங்கையுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட மற்றுமொரு நாடு சீனா. கடந்த காலத் தலைவர்களைவிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதுடன், நட்புறவுக்கு அடையாளமாக சீனாவும் பல்வேறு வழிகளிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கப் பின்னிற்கவில்லை.

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது நாட்டு மக்களுக்காக அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உள்ளார் என்பதைக் காட்டுகிறது” எனச் சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ வாழ்த்தியிருந்தார்.

ஜனாதிபதியைப் பாராட்டியதோடு நின்றுவிடாது இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சீனா இலங்கைக்கு வழங்குகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலமானது வரலாற்று முக்கியத்துவமானதாக அமைவதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு மிகவும் முக்கியமானது என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளுடன் மாத்திரமன்றி அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேணி வருகிறார்.

இலங்கைக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த சில நாடுகள் முயற்சித்த தருணத்தில் கூட, ரஷ்யப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமாதானத்துக்கான கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தின் மீது எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என்பதற்கு இதனைவிட வேறு என்ன சான்று தேவை. இலங்கையின் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா உதவி வழங்க ஒருபோதும் பின்னடித்ததில்லை.

இதேபோல, அரபு நாடான ஈரானுடனும் ஜனாதிபதி சிறந்த உறவையே பேணி வருகின்றார். இரண்டாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதானது இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கும், சமாதானத்துக்கும் மேலும் வலுச்சேர்க்கும்” என ஈரான் ஜனாதிபதி மொகமூத் அகமது நெஜாத், ஜனாதிபதியை வாழ்த்தியிருந்தமையானது அவர் மீது ஈரான் வைத்திருந்த நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஈரான் அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென்றும் ஈரான் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருந்ததுடன், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பாற்றியிருந்த ஈரான், இலங்கையின் அபிவிருத்தியிலும் தற்பொழுது கணிசமான பங்களிப்பையாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, அந்த அமைப்புடனும் சிறந்த உறவைப் பேணிவருகிறது. ஒரு சில விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையு டன் கருத்து வேறு பாடுகள் காணப்பட்டாலும் இலங்கையின் அபிவிருத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பும் முக்கியமானது.

ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக இருந்தாலும் சரி, அபிவிருத்தி இலக்காக இருந்தாலும் சரி அவருக்கு உதவிய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன், சீனா, இந்தியா, ஈரான் உட்பட பல நாடுகளின் பங்களிப்பானது அளப்பெரியது. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுகளைப் பேணி நாட்டை மேலும் அபிவிருத்தி செய்யும் இலக்குடன் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகிறது.