வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

விக்கிரமபாகு வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையர் விசேட அனுமதி

விக்கிரமபாகு வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையர் விசேட அனுமதி

நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சென்றபோது அவரை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் தேர்தல் ஆணையாளரின் விசேட அனுமதியை பெற்றே அவர் தனது வாக்கை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொழும்பு கொம்பனித்தெருவில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்றுக் காலை வாக்களிக்கச் சென்றார். மாகாண சபை உறுப்பினருக்கான அவரது அடையாள அட்டையை தன்னுடன் கொண்டு சென்றிருந்தார். எனினும் அவரது மாகாண சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒருவரை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கலாநிதி விக்கிரமபாகு அவரது தேசிய அடையாள அட்டையை சில நாட்களுக்கு முன்னர் கவனக் குறைவாக எங்கோ வைத்துவிட்டார். அவரது கடவுச் சீட்டையும் வீட்டில் வைத்துச் சென்றுவிட்டார். மாகாண சபை உறுப்பினருக்கான அடையாள அட்டை இருந்தால் போதுமானது என்று அவர் நினைத்திருந்தார். எனினும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே அவர், தேர்தல் ஆணையாளருடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதையடுத்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையாளர் அவருக்கு விசேட அனுமதி வழங்கினார். இதனையடுத்தே கலாநிதி விக்கிரமபாகு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார். (ரு-ஜ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •