வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

அமைதியான தேர்தல்: சுறுசுறுப்பான வாக்களிப்பு

அமைதியான தேர்தல்: சுறுசுறுப்பான வாக்களிப்பு

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்றதுடன், நாடளாவிய ரீதியில் சுமார் 70 வீத வாக்களிப்பு இடம்பெற்றதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

நேற்றுக்காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன், வழமையான தேர்தலை விட மக்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் அணி அணியாகத் திரண்டு வாக்களித்ததைக் காண முடிந்ததாக நமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஆங்காங்கே சிறுசிறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன், குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லையென தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்புகளும், தேர்தல் செயலக விசேட தகவல் பிரிவும் தெரிவித்தன.

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் இம்முறை 60 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் 50 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் வன்னியில் 30 வீத வாக்களிப்பும், யாழ்ப்பாணத்தில் 20 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற்பகல் 4.00 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்குப் பெட்டிகள் ஏற்றியிறக்கும் பணிகளின்போது விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டி ருந்ததுடன், தேவையேற்படின் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இம்முறைத் தேர்தலில் பாதுகாப்புக் கடமைகளுக்கென 69,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். அத்துடன் 2500 பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தேர்தலில் நாடளாவிய ரீதியில் 14, 088, 500 பேர் வாக்களிக்கத் தகுதி வெற்றிருந்ததுடன், 11098 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது. 888 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகளில் இரண்டு இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று மாலை வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நள்ளிரவுக்குப் பின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

வழமையை விட இம்முறை வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் வாக்களிப்பதில் பெரும் ஆர்வம் காட்டியுள்ளதைக் காண முடிகிறது. காலையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்ததுமே, மக்கள் பெருமளவில் அணி அணியாகத் திரண்டு உற்சாகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காண முடிந்தது. குறிப்பாக பெண்கள் வாக்களிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டியதையும் குறிப்பிட முடியும்.

இந்த வகையில், இம்முறை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 70 வீத வாக்களிப்பும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 வீத வாக்களிப்பும், திருகோணமலை மாவட்டத்தில் 60 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளன.

வடக்கில் மன்னாரில் 35 வீத வாக்களிப்பும், வவுனியாவில் 33 வீத வாக்களிப்பும், முல்லைத்தீவில் 8.4 வீத வாக்களிப்பும், இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பில் 50 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக அம்மாவட்டங்களிலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இம்முறை வாக்களிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

இதற்கிணங்க, கண்டி மாவட்டத்தில் 72 வீத வாக்களிப்பும், கொழும்பு மாவட்டத்தில் 65 வீத வாக்களிப்பும், நுவரெலியா மாவட்டத்தில் 71 வீத வாக்களிப்பும், பதுளை மாவட்டத்தில் 70 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளன.

அநுராதபுர மாவட்டத்தில் 70 வீத வாக்களிப்பும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 71 வீத வாக்களிப்பும், குருநாகல் மாவட்டத்தில் 73 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நடவடிக்கைகள் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படுமெனவும் நான்கு கட்டங்களாக இம் முடிவுகள் அறிவிக்கப்படுமெனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

கடந்த 30 வருட காலம் நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழல் மாற்றமடைந்துள்ளதையடுத்து, இம்முறைத் தேர்தலில் நாடெங்கிலுமுள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ரு-ஜ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •