வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

மலையகத்திலிருந்து வடக்கில் குடியேறிய தமிழ் மக்களின் உள்ளக்குமுறல்

மலையகத்திலிருந்து வடக்கில் குடியேறிய தமிழ் மக்களின் உள்ளக்குமுறல்

வடக்கு பிரதேசவாதத்தால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் வன்னி மலையக சமூகம்

தென் பகுதியில் 1958, 1977, 1983 காலப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மலையகப் பகுதிகளில் பெருமளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்கள் தங்களுக்கு நம்பிக்ைகயான மறுவாழ்வு தேடி வடக்கிற்குச் சென்றனர். விசேடமாகப் பெருமளவானோர் கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளுக்குச் சென்று குடியேறினர். அங்குக் காலாகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களும் இவர்களுக்கு அபயக்கரம் நீட்டி ஆதரித்தனர். ஆனால், யுத்தம் முடிவுற்றதன் பின்னர் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

முள்ளிவாய்க்கால் சென்று அல்லல்பட்டுச் சொந்த இடம் திரும்பியவர்களுக்குக் காத்திருந்ததோ ஏமாற்றம். இதற்கு அரசியல்வாதிகளின் சுயநலமிக்க செயற்பாடுகளும் முக்கிய காரணம் என்றால் மிகையில்லை. அங்குத் தற்போதைய நிலவரத்தை ஆராய்வதாக அமைகிறது இந்தக் கட்டுரை.

ம லையகத்திலும் தென்பகுதியிலும் இருந்து கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் மலையகப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், இதுவரைகாலம் தாமும் வடக்கின் நிரந்தரக் குடிகள் என்ற நிரந்தர எண்ணத்துடனேயே வாழ்ந்து வந்தனர். ஆனால், அண்மைக்கால செயற்பாடுகள் அவர்களை அங்குள்ளவர்கள் இணைத்துக்ெகாள்ளாமல் அந்நியப்படுத்தி வைத்திருந்ததை அல்லது வைத்திருப்பதை தற்போது உணர முடிகிறது.

தென்பகுதியில் தமிழ்மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் நன்கு தெரியும், இந்த வன்முறை காரணமாக பலர் காணாமல் போயினர், காணாமல் ஆக்கப்பட்டனர். பலரின் சொத்துக்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களின் விசாரணைகள் அனைத்தும் பூஜ்யமாகவே நிறைவுற்றிருந்ததன.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற இன வன்முறை காரணமாக தமது உறவுகள் என நம்பி இடம்பெயர்ந்து குடியேறிய மலையக தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், இடருக்கும் உள்ளானார்கள் என்றால் மிகையாகாது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வந்த தமிழர்களை தர்மபுரம், ஜெயபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், விநாயகபுரம் ஊற்றுபுலம், கோணாவில், தொண்டமான் நகர், பாரதிபுரம் என்னும் கிளிநொச்சி புறநகர் பகுதியில் குடியேறினார்கள். இந்த மக்களை திட்டமிட்டு மேட்டு நில காணிகளில் அப்போதைய அரச அதிகாரிகள் குடியேற்றினர். முல்லைத்தீவு மாவட்டத்தில் றெட்பானா, வள்ளுவர்புரம், பாரதிபுரம், குரவயல், வள்ளிபுனம், திம்பில போன்ற இடங்களிலும் குடியேறினார்கள்.

குறித்த மேட்டுநில காணிகளில் குடியமர்த்தப்பட்ட இந்த மக்களுக்கு அரசு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. மாத காலத்திற்கு மாத்திரம் உணவு பங்கீட்டு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு குடியேறிய இந்த மக்களின் பெரும்பாலானோருக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்திருக்கவில்லை. இவர்கள் நாடற்றவர்களாகவே கணிக்கப்பட்டனர். ‘கள்ளத்தோனி’ என்ற புனைபெயர் இவர்களுக்கு சூட்டப்பட்டிருந்தது. வடமாகாணத்தில் வசித்த தம்மை பூர்வீக குடிகள் என அழைத்துக் கொள்ளும் வடமாகாண தமிழர்கள் இந்த மக்களை அடிமைகளாகவே நடத்தினர். வடமாகாணத் தமிழர்கள் இரணைமடுக்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வயல் காணிகளை பெற்று குடியமர்ந்திருந்தனர். இவர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி அனுமதிபத்திரம் வழங்கப்பட்டிருந்தது. மத்திய தர வகுப்பு திட்டம், படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம் என இவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த குடியேற்ற காணிகளில் கூலிகளாகவும், காடுகளை வெட்டி துப்பரவு செய்து கொடுக்கும் கூலித்தொழிலாளர்களாகவும் மலையகத் தமிழர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்க மறுத்து கள்ளத் தோனிகள் என குறிப்பிட்டு இவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே நடந்தேறியிருந்தன. இந்த சம்பவங்களுக்கு அப்போதைய ஊர்விதானையார் (கிராமசேவையாளர்) காவல்துறை அதிகாரிகளும் துணைபோயினர்.

இத்தகைய துயர்களுக்கும், இடர்களுக்கும் மத்தியில் சுயமுயற்சியின் காரணமாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு காணிகளை வெட்டி துப்பரவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொண்டபோதும் இவர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையிலோ அல்லது காணி அனுமதிப்பத்திரமோ வழங்கப்படவில்லை. இந்த மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட படித்த வாலிபர் திட்டம், நீர்பாசனத் திட்டம், மத்திய தரவகுப்பு திட்டங்களிலும் இந்த மக்கள் உள்வாங்கப்படவில்லை. அப்போதைய அரச அதிகாரிகளாலும் அரசியல் வாதிகளாலும் திட்டமிட்டு புறக்கணித்தனர்.

நாடற்றவர்கள் என காரணம் கூறி இந்த மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். இலங்கை வதிவிட சான்றிதழ்களை வைத்திருந்த குடும்பங்களும் புறக்கணிக்கப்பட்டனர். 1958ஆம் ஆண்டில் குடியேற்றப்பட்ட தர்மபுரம் கிராமவாசிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியிருந்த போதும் இந்த மக்களில் 72 குடும்பங்களுக்கு வயல் காணி வழங்கப்பட்டது. இந்த கிராமத்தை ஊடறுத்து கண்டாவளை எனும் பூர்வீக குடிகள் வசிக்கும் கிராமத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டாலும், மலையகத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வயல் காணிகளுக்கு சட்டரீதியாக நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மக்கள் தமது சுயமுயற்சியின் ஊடாகவே வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருந்தனர்.

கிளி/ முல்லை மாவட்டங்களில் நிலவிய போர்ச் சூழலின்போது மலையகத் தமிழர்களின் பிள்ளைகள் வறுமை காரணமாக போராட்டத்தில் இணைக்கப்பட்டனர். பலர் பலவந்தமாகவும் இணைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் போரில் சாவடைந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தற்போது சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர்.

போர்ச் சூழலிலும் சரி, இயல்பு வாழ்வு திரும்பியதன் பின்பும் சரி வடமாகாண அரசியல் தலைமைகள் பிரதேச வாதத்தை மறைமுகமாக முன்னெடுப்பதே இந்த மக்களின் அவலநிலைக்கு பிரதான காரணமாகும். கிளிநொச்சி முல்லை மாவட்டத்தில் மலையக தமிழர்கள் பல கிராமங்களில் செறிவாக வாழ்கின்றனர். இந்த மக்கள் போர்ச்சூழலில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் திறந்தவெளி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து இந்த மக்களை அரசு தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தியது.

இந்த மக்கள் தமது சொந்த வதிவிடங்களில் மீள் குடியமர்ந்தவேளையில், UNHCR நிறுவனம் இருபத்தைந்தாயிரம் (25000/=) ரூபா பணமும், விவசாய உபகரணங்கள் (கத்தி, அலவாங்கு, மண்வெட்டி) வீட்டு உபகரணங்களுடன், கூரைத்தகடுகள் வழங்கியிருந்தது.

சிலருக்கு தற்காலிக வீடுகளும் மலசலகூடங்களும் வழங்கப்பட்டன. சிலருக்கு சீமெந்து மற்றும் தற்காலிக வீடமைத்துக் கொள்வதற்கு இரும்பு கம்பிகளும் வழங்கப்பட்டிருந்தன. தனிநபர்கள் பலருக்கு தற்காலிக வீடுகள் கூட அமைத்து கொடுக்கப்படவில்லை. இவர்கள் தமக்கு காணி இருந்தும் வீடு, மலசல கூட வசதியின்றி தமது உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் மீள் குடியேறியவர்களுக்கு UNHCR நிறுவனம் ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்பட்டிருந்தபோது கிளிநொச்சி, முல்லை மாவட்டத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபா மட்டுமே கிடைத்திருந்தது. ஆனால் இந்த மக்களிடமிருந்து ஐம்பத்தினாயிரம் பணம் பெற்றுகொண்டமைக்கான பற்றுசீட்டில் கையெழுத்து பெறப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்டத்திலுள்ள மலையகத் தமிழர்களின் நிலையும் இதே நிலைதான், இம்மாவட்டத்தில் மலையகத் தமிழர்கள் செறிவாக வாழ்கின்றனர். இவர்கள் தமது சுயமுயற்சியின் மூலமாக காடுவெட்டி துப்பரவு செய்து வேளாண்மை செய்தும், குடியிருந்தும் வந்தனர். இவர்களில் பலர் போர்ச்சூழலின் போது இடம்பெயர்ந்து தமிழகத்திற்கு சென்று மீளவும் தமது சொந்த வதிவிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் தமது சொந்தக் காணியில் தற்போது குடியிருந்தபோதும் பூர்வீகக்குடிகள் என அழைத்துக் கொள்ளும் வடமாகாண தமிழர்கள் குறித்த காணிகள் தாம் நீண்ட கால குத்தகைக்கு உள்ளதாக கூறி உரிமை கோருகின்றனர். இவ்விடயத்தில் அரச அதிகாரிகளும் வடமாகண தமிழர்களுக்கு பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் வவுனியா, ஓமந்தை வேப்பங்குளத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் இருட்டுமடு கிராமத்திலும் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தமக்கு நியாயம்கோரி ஜனாதிபதி மற்றும் காணி அமைச்சர், பிரதமருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

இது தவிர அண்மையில் நல்லிணக்க அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 10 வருடங்களுக்கு முன்பு தாம் வசித்த காணியை மீளப்பெற முடியும் என்ற காணி சீர்த்திருத்தச் சட்டத்தின் விளைவாக கிளிநொச்சி முல்லை, வவுனியா மாவட்டத்தில் முப்பது நாற்பது வருடங்களுக்கு மேலாக காடுவெட்டி துப்பரவு செய்தும் வேளாண்மைசெய்தும், குடியிருக்கும் காணியை விட்டு வெளியேறி, நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது மலையகத் தமிழருக்கு இழைக்கப்படும் பாரிய துரோகமாகும். இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிகளும் அரசும் கரிசனை காட்ட வேண்டியது கட்டாயமானதாகும்.

இந்த காணி சீர்திருத்த சட்டத்தின் விளைவாக மலையக தமிழர்கள் நிலவுடமையற்றவர்களாக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அரசினரால் வழங்கப்படும் நிரந்தர வீடு, மலசல கூடம் மற்றும் விவசாய மானியங்கள் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வடமாகாண அரசியல் தலைமைகளுக்கு தெரிந்திருந்தும் கண்டும், காணாதவர் போலவே உள்ளனர்.

மலையகத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் நிலவுடமையற்றவர்களாக வதிவது போல வடகிழக்கு மாகாணத்தில் வாழும் மலையக தமிழர்களும் நிலவுடமையற்றவர்களாக வாழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

வடகிழக்கில் வாழும் மலையகத் தமிழர்கள் தமது சுயமுயற்சியின் காரணமாக காடுவெட்டி துப்பரவு செய்து வேளாண்மை செய்து குடியிருந்த போதும் இறுதியில் குறித்த காணிகளுக்கு வடமாகாண பூர்வீக தமிழர்கள் உரிமை கோரி காணி அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்கின்றனர். இத்தகைய செயற்பாடானது இன்று, நேற்றல்ல காலகாலமாக நடந்து வருவதுவாகும்.

வடமாகாணத்தில் மலையகத் தமிழர்கள் செறிவாக வாழும் கிராமங்களின் அபிவிருத்தி, கல்வி, சமூகமேம்பாடு கலை, கலாசாரம் என்பன திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது இந்த சமூகத்தின் இளைஞர், யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புகளும் கிடைப்பதும் அரிதாகவே காணப்படுகின்றது. இவர்களது வாழ்வாதாரம் மேம்பாடு என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

இந்த சமூகம் செறிவாக வாழும் அனைத்து கிராமங்களும் மேட்டுநில காணி .... வேலாண்மைக்கு மட்டுமன்றி குடிநீருக்கே அவஸ்தையும், அல்லலும் படுகின்றனர். குறித்த சமூகத்தை சார்ந்த இளைஞர், யுவதிகள் பெரும்பாலானேர் மேசன், தையல், சிறு வாணிபம், வர்த்தக நிலையங்களில் பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அரச, ஊழியர்களாகவும், நிலவுடமையாளர்களையும் உள்ளனர். சிறுபிரிவினர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும் பொலிஸ் மற்றும் இராணுவத்திலும் இணைந்துள்ளனர். உயர் கல்வியை கற்றிருந்தாலும் கூட இவர்களுக்கு அரச வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

கடந்த முப்பது வருட காலமாக நிலவிய போர் சூழல் காரணமாக. தமிழகத்திற்கு தப்பிச்சென்று ஏதிலிகளாக வாழ்ந்து தற்போது UNCHR உதவியுடன் நாடு திரும்பிய போதும் அவர்களின் காணிகளை ஐ. நா. பிரதிநிதிகளிடமும் இந்த சமூகத்தில் வடகிழக்கில் முகம் கொடுக்கும் அரசியல், கல்வி, நிலவுடமைக்கான அங்கீகாரம் கலை, கலாசாரம் மேம்பாடு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உட்பட இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்து இந்த சமூகத்தின் பிரதிநிதிகள் எடுத்தியம்பியிருந்தனர்.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்பு இந்த சமூகத்தினர் தமது சமூக விடுதலை தொடர்பில் அகிம்சை வழியாக முன்னெடுத்திருந்தனர். ஆனாலும் வலியை தவிர வேறு எதனையும் சந்தித்திருக்கவில்லை. போர்ச் சூழலின்போது விரும்பியோ, விரும்பாமலோ தனது பங்களிப்பை செய்திருந்தனர். போரின் இந்த சமூகத்தினரின் பலர் சாவை தழுவிக் கொண்டனர். இதற்கு பலர் தமது விருப்புக்கேற்றவாறு வெவ்வேறு காரணங்களை கற்பித்தாலும் இவர்களின் சாவு என்பது மறக்கமுடியாத மன பதிவாகிவிட்டது. ஆனாலும் இத்தகைய அழிவுகளுக்கு பின்பும் முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்பும், உயிர்தப்பி பிழைத்த இந்த சமூகத்தினர் இயல்பு வாழ்க்கை ஒளிகீற்றாக அமையும் என எதிர்பார்த்திருந்த போதும் அதுவும் காணல் நீராகவே மாறிவிட்டது. தமது அவயத்தின் ஒருபகுதியை இழந்த மாற்றுத்திறனாளிகள், உளநலம் பாதிப்புற்றோர். கணவனை இழந்த பெண்கள், வீடற்ற தனிநபர்கள், பராமரிக்க எவருமற்ற முதியோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதி என பல்வேறு பிரிவினர் இந்த சமூகத்தின் அங்கமாகவுள்ளனர்.

இதுவரை காலமும் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் பாசாங்கு செய்த வடக்கு கிழக்கு அரசியல் தலைமைகள் இனியாவது ஏறெடுத்து பார்ப்பார்களா என்ற ஏக்கம் இந்த சமூகத்தினரிடையே இல்லாமலில்லை. எதிர்காலத்திலாவது இந்த சமூகத்தின், தேவைகளையும், பிரச்சினைகளையும் அணுகி தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தவறின் இந்த சமூம் தமது தலைமையை தாமே தீர்மானிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.