வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
சதுரங்கம் பாராளுமன்றத்தில் ஒலித்தவை.........

சதுரங்கம் பாராளுமன்றத்தில் ஒலித்தவை.........

இலங்கையின் அரசியல் அரங்கு எப்பொழுதும் சூடாகத்தான் இருக்கும். பரபரப்பாக பேசப்படுவதற்கு ஏதாவது ஒரு விடயம் இல்லாமலிருக்காது. 2017ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது பற்றி சூடான வாதப்பிரதிவாதங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் இடம்பெற்று வருகின்றன.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் விறுவிறுப்பு மற்றுமன்றி சுவாரஷ்யமும் இருக்கவே செய்யும். தமது எதிரணியை விமர்சிக்கவும் நையாண்டி செய்யவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

மஹிந்த ஆதரவு அணியினர் தொடர்ச்சியாக ஆளும் தரப்பை விமர்சித்து வரும் நிலையில் அவர்களை கேலி செய்வதற்காக அமைச்சர் கபீர் ஹாசிம் சபையில் கதையொன்றை அழகாக மெருகூட்டி சொல்லியிருந்தார். பௌத்த பிக்கு ஒருவர் தொலைதூரமொன்றுக்கு கால் நடையாக பயணம் செய்திருக்கிறார். நீண்ட தூரம் பயணித்த பின்னர் பாதை தவறிட்டது. வழிகேட்பதற்கு யாராவது இருக்கிறார்களா என அக்கம் பக்கம் தேடிப்பார்த்திருக்கிறார். ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த கிராமத்தவர் ஒருவர் பிக்குவின் கண்ணில் பட்டிருக்கிறார். அவரை தன்னருகே அழைத்தார். ஆனால் அவனுக்கே உடனடியாக நீரில் இருந்து வர விருப்பமில்லை. இருந்தும் பிக்குவின் அழைப்பை மறுக்காமல் பக்கத்தில் இருந்த வாளியால் தனது நிர்வாணத்தை மறைத்துக்கொண்டு பிக்குவிடம் வந்தான். பிக்கு அவனிடம் வழிகேட்கவே கிராமவாசிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வழி தெரிந்து கொண்டு வரத்தெரியாதா என கோபமாக கேட்டான்.

பிக்கு அமைதியாக, அது சரிதான்! ஆனால் சிலர் தாங்கள் தமது நிர்வாணத்தை மறைத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் வாளிக்கு அடிப்பகுதி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது என்றிருக்கிறார்.

அமைச்சரின் கதையைக் கேட்டு ஆளும் தரப்பு எம்.பி களுக்கு மட்டுமல்ல எதிரணி எம். பிக் களாலும் கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மஹிந்த அணியினர் தாம் அம்மணமாக இருந்துகொண்டு மற்றவர்களின் குறையை பேசுவதாக அமைச்சர் குட்டிக்கதை மூலம் விளக்கி எதிரணியின் வாயை அடைத்தார். இப்படித்தான் எதிர்க்கட்சியும் சில வேளை ஏதாவது கதை சொல்லி ஆளும் தரப்பை நக்கல் செய்வதுண்டு.

ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் சபையில் சொன்ன கதை ஐ. தே. க வை மட்டுமன்றி சு.க வையும் விமர்சிப்பதாக அமைந்தது.

ஒரு ஊரில் பிச்சைக்கார குருடன் ஒருவனும் பிச்சைக்கார முடவன் ஒருவரும் வாழ்ந்து வந்தார்கள். குருடனுக்கு கண் தெரியாததால் சென்று பிச்சையெடுக்க முடியவில்லை. ஒரே இடத்தில சேரும் முடவனின் நிலையும் அதுதான். எங்கும் நடந்து செல்ல முடியாததால் ஒரே இடத்தில் இருந்து தான் அவனாலும் பிச்சை எடுக்க நேரிட்டது. வருமானம் சொஞ்சம் தான் கிடைத்தது இந்த நிலையில் இரு பிச்சைக்காரர்களும் இணைந்து பிச்சைக்கார கம்பனியொன்றை ஆரம்பித்தார்கள் இதனால் இருவருக்கு வருமானம் அதிகரித்ததாம். ஐ. தே. க. – சு. க கூட்டணியும் இப்படித்தான் என அவர் சொன்னகதை ஆளும் தரப்பை அசடுவழியவைத்தது. ஆளும் தரப்பு எம்.பிக்கள் மனதால் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாகவே ஐ. ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பேசத் தொடங்கினால் ஆளும் தரப்பில் இருந்து இடையூறு வராமல் இருக்காது. எப்பொழுதும் அவரின் பேச்சை யாராவது குழப்பாமல் இருக்க மாட்டார்கள்.

அவரின் உரைக்கு ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஜெயமஹ தொடர்ந்து இடையூறு செய்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கம்மன்பில எம்.பி.

எனக்கு நாய்களையும் பூனைகளையும் கரிசனையுடன் கட்டுப்படுத்தும் மந்திரம் தெரியாது. அடுத்த தடவை இதற்கான மந்திரத்தை கற்று வருகின்றேன் என ஆளும் தரப்பு எம்பியை நாசுக்காக மிருகங்களுடன் ஒப்பிட்டு தனது கோபத்தை தீர்க்துக்கொண்டார்.

இந்த குழப்பத்திற்கிடையில் அமைச்சர் சரத்பொன்சேகா சபைக்குப் பிரசன்னமாகினார். அவரும் தன் பங்கிற்கு கம்மன்பிலவை நோக்கி ஏதோ சொன்னார். 68 வருடங்களின் பின்னர் அளவில் பெரிய பிரகாசமான நிலவை கடந்தவாரம் வெற்றுக்கண்களினால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கும் புதிய வரவு செலவுத்திட்டத்திற்கும் துளியாவது தொடர்பு இருக்க முடியுமா? ஆனால் இரண்டையும் முடிச்சு போட்டு புதிய வரவு செலவுத் திட்டத்தை ரோஹித அபேகுணவர்தன விமர்சித்த விதம் சபையெங்கும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.

இலங்கை மக்கள் அளவில் பெரிய பிரகாசமான நிலாவை எதிர்பார்த்தார்களாம். ஆனால் அவர்களுக்கு நட்சத்திரங்களையே காணக்கிடைத்ததால் இந்த வரவு செலவுத்திட்டமும் அப்படித்தானாம். அட..... இப்படியெல்லாம் இவர்களுக்கு எப்படித்தான் புதிது புதிதாக ஐடியா வருகிறதோ தெரியாது.

நீண்ட நாட்களின் பின்னர் கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அவருக்கு ஆளும் தரப்பில் இடையூறு எதுவும் இருக்கவில்லை. முன்கூட்டியே தயாரித்த உரையை தான் அவர் வாசித்தார். அதனால் ஆங்காங்கே தட்டுத்தடுமாறியே வாசிக்க நேரிட்டது.

அவருக்கு ஆளும் தரப்பு சார்பில் பிரதம கொறடா கயந்த கருணாதிலக மேலதிக நேரம் வழங்கியிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அவரின் உரையின் முடிவில் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஒழங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதியை சீண்டினார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘புரம்டர்’ வசதி வழங்க வேண்டும் அவர் கூறியபோது ஆளும் தரப்பில் சிரிப்பொலி பரவியது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் புரம்டரை பயன்படுத்தியே கூட்டங்களில் பேசுவார். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் பேசினால் பார்ப்பவர்களுக்கு அவர் எதனையும் பார்க்காமல் பேசுவதாகவே தோன்றும்.

அடுத்ததாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவின் உரை இடம்பெற்றது. இவரின் உரைக்கு மத்தியில் நாமல் ராஜபக்ச சபையில் பிரசன்னமானார்.

உங்கள் தந்தைக்கு பேச நாம் மேலதிக நேரம் வழங்கினோம். ஆனால் மகனோ சபைக்கு தாமதமாக வருகிறார் என நக்கலடித்தார். நாமல் ராஜபக்சவும் இதனை கேட்டு சும்மா அமர்ந்து விடாது அவரும் ஒரு விடயத்தை முன்வைத்து அமைச்சரின் வாயடைத்தார்.

2016 வரவு செலவுத் திட்டத்தினூடாக சகல பாடசாலை மாணவர்களினதும் வங்கிக் கணக்கில் 250 ரூபா இடுவதாக கூறிய உறுதிக்கு என்ன நடந்தது என்பது தான் அவரின் கேள்வி.

இது வரை அந்த யோசனை நிறைவேற்றப்படாதது எல்லோருக்கும் தெரியும். எனவே, அமைச்சர் பதில் வழங்குவதில் இருந்து நழுவிய அமைச்சர் கல்வி அமைச்சரிடம் கேட்டால் அதற்கு பதில் வழங்குவார் என தப்பிக்கொண்டார்.

பீல்ட் மார்சல் அமைச்சர் சரத் பொன்சேகா, எப்பொழுது பாராளுமன்றத்தில் பேசினாலும் சோற்றில் உப்பு சேர்ப்பது போல கட்டாயம் முன்னாள் ஜனாதிபதியை பற்றி ஏதாவது பேசத்தவறுவதில்லை.

மஹிந்த ஆட்சியில் வாயை மட்டும் திறந்து கொண்டிருந்தால் மஹிந்த சிந்தனையின் புண்ணியத்தில் வாயில் சாப்பாடு வந்து விழும். பின் மஹிந்த சிந்தனையின் பயனாக தானாக மலசலம் செல்லும் அதனை துடைக்கக்கூட தேவையில்லையாம். அது கூட சிந்தனையின் புண்ணியத்தில் துடைக்கப்பட்டு விடுமாம். அவரின் இந்த நக்கல் கதையை ஆளும் தரப்பு எம்.பிகள் ரசிக்காமல் இருக்கவில்லை.

மஹிந்த ஆதரவு அணி எம். பி. களுக்கும் ஆளும் தரப்பு ஐ. தே. க அமைச்சர்களுக்கும் இடையில் சபையில் அடிக்கடி சூடான மோதல்கள் இடம்பெறுவது வழமை.

கடந்த வாரம் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பிக்கும் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எம். பி. க்கும் இடையில் வெடித்த மோதல் முகம் சுளிக்க வைத்தது. மோதலை மஹிந்தானந்த எம். பி. தான் தூண்டிவிட்டார்.

கல்வி அமைச்சரின் உரையை தொடர்ந்து பேசிய மஹிந்தானந்த எம்.பி பத்திரிகையொன்றில் பிரசுரமான செய்தியொன்றை கூறி அமைச்சரை சீண்டினார்.

விடுதி இல்லாத பாடசாலை ஒன்றிக்கு கல்வி அமைச்சர் 5 சமையற்காரர்களை நியமித்திதுள்ளாராம். இப்படியான ஒருத்தர் தான் நாட்டின் கல்வி அமைச்சர் என்று ஒரு போடு போட்டார். ஆனால் அமைச்சர் இந்த செய்தியை நிராகரித்தாலும் மஹிந்தானந்த எம். பி. சபையில் இந்த விடயத்தை மெருகூட்டி சொன்ன விதம் முழு அவையையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.

அந்த பாடசாலையில் விடுதி உள்ளதாகவும் மாணவர்கள் இல்லாததால் விடுதி மூடப்பட்டிருப்பதாகவும் கூறிய அமைச்சர் இந்த விடயம் அமைச்சிற்கு அறிவிக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

ஆனால் மஹிந்தானந்த எம். பி. அமைச்சரை விடுவதாக இல்லை. இந்த நிலையில் அமைச்சர் அகில விராஜும் கதையொன்றை எடுத்து விட்டார்.

நான் குளியாபிடியவில் கல்வி கற்கையில் வர்த்தக பிரதிநிதி (சேல்ஸ் ரெப்) ஒருவர் எமது பகுதிக்கு வந்தார். அகதி மோட்டார் சைக்கிளில் எமது கடைக்குக் கூட அவர் வந்திருந்தார். ஆனால் இன்று அவர் பெரும் செல்வந்தராகி விட்டார். இது எப்படி சாத்தியம் என மஹிந்தானந்த எம்.பியின் ஆரம்ப காலத்தை அவரை சீண்டினார்.

மஹிந்தானந்த எம். பி. யின் வாயை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையை கூட இகழ்ந்து கீழ்த்தரமாக பேசுவது அவரின் ஸ்டைல். நாம் அங்கங்களைவிற்று பிழைப்பவனல்ல. நான் உண்மையான ஆண். ஆண் விபசாரியாக நடந்தது கிடையாது. என்றெல்லாம் என்னென்னவோ பேசி அமைச்சரின் வாயை அடைத்தார்.

ஒவ்வொரு தினமும் பாராளுமன்றத்தில் சூடான விவாதங்கள் நடைபெறுவதற்கிடையில் மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வு பாராளுமன்றத்தில் நடந்திருந்தது பாராளுமன்ற அமர்வின் முடிவில் சபையை அடக்கம் செய்வதும் திருத்தங்கள் செய்வதும் இடம்பெறும்.

இவ்வாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொறியியலாளர் ஒருவருக்கு சபாநாயகரின் ஆசனத்தில் அமர ஆசை வந்தது. யாரும் பார்க்க முன் அதில் அமர்ந்து விட்டார். அவரின் கெட்டகாலம் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனைக் கண்டிருக்கிறார். பாவம் இப்பொழுது பொறியியலாளருக்கு எதிராக விசாரணை நடைபெறுகிறது.

வரவு செலவுத் திட்டத்தினூடாக வரி அறவிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை சுவைபட விமர்சிப்பதில் ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சளைத்தவர்களல்ல. டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் கிண்டல் வயிறு வலிக்கும் வரை சிரிக்கவைத்தது.

விபத்துக்களை குறைக்க வீதி அபராத கட்டணம் கூட்டப்பட்டுள்ளதாம். ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதை குறைக்கத்தானாம் நீர்க்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகிறதாம்.

பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சுவாரஸ்யமான விடயங்கள் அரங்கேரத்தான் செய்கின்றன.

கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள துமிந்த சில்வாவை நீதிபதி ஒருவர் இரகசியமாக சென்று பார்த்துள்ளார். இவர் தனக்கு எதிரான தீர்ப்பிற்கு மேன்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகளை பார்வையிடும் நேரத்திற்கு பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக குற்றஞ் சாட்டப்பட்டாலும் சிறைச்சாலை திணைக்களம் இதனை நிராகரித்துள்ளது வேறு விடயம்.

நாட்டின் அநேக பாடசாலைகளில் தற்பொழுது பரீட்சை நடைபெறுகிறது. பிள்ளைகள் விழுந்து விழுந்து படித்து வருகின்றனர். ஆனால் வகுப்பில் எல்லோருக்கும் முதலிடங்களை பெற முடியாது.

இது தொடர்பில் கொழும்பு ஹமிட் அல் ஹுஸைன் கல்லூரி பரிசளிப்பு விழாவில் பிரதமர் சுவாரஸ்யமான வரலாற்று சம்பவமொன்றை கூறியிருந்தவர். இது இரசிப்பதற்கு மட்டுமன்றி சிந்திக்கவும் வைக்கும் வகையில் அமைந்தது.

திறமையான மாணவர்கள் அனைவரும் பரீட்சைகளில் சித்தியடைய தேவையில்லையாம். என்ன வகுப்பிற்கு சென்று பார்த்தால் மூன்று மாணவர்கள் தான் இருந்துள்ளனர். டி. எஸ். சேனாநாயக்க தான் வகுப்பில் கடைசி மாணவன் என்பதை மறைத்து புத்திசாதுர்யமாக மூன்றாவது மாணவன் என கூறியிருந்தார்.

ஆனால் அவரின் குடும்பத்தில் முதலாம் இரண்டாமிடம் பிடித்த மாணவர்களின்றி கடைசி வந்தவர் தான் நாட்டின் முதல் பிரதமராக தெரிவானார்.

பிரதமர் சொன்ன கதை வகுப்பில் கடைசி வரும் மாணவர்களை ஊக்குவிப்பதாக இருந்திருக்கும். முதலிடம் வரும் மாணவர்கள் இனி ஒழுங்காக படிக்க மாட்டார்களோ எது எப்படியோ தற்போதைய பிரதமர் வகுப்பில் எத்தனையாவது வந்திருப்பார் என யாரும் மண்டையை போட்டு பிய்த்துக்கொள்ள தேவையில்லை.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.