புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
ஊடக உறவுப் பாலம் - பெங்களூர் பயண அனுபவப்பகிர்வு

ஊடக உறவுப் பாலம் - பெங்களூர் பயண அனுபவப்பகிர்வு

எங்கு சென்றாலும் எந்த விடயமானாலும் துருவித்தேடி ஆழமாய் அறிந்துகொள் என்கிறது ஊடகத்துறை அறிவு. ஊடகத்துறையில் ஈடுபடுவதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி எத்தனையோ பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட ரீதியிலும் உத்தியோகபூர்வமாகவும் அமைந்த எல்லாப் பயணங்களும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவமானவைதான். மறக்க முடியாத வைதான். ஆனால், பெங்களூர் பயணம் சற்றே வித்தியாசமான உணர்வினைத் தந்திருக்கிறது. பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஃது முழுக்க முழுக்க ஊடகத் துறையோடு சம்பந்தப்பட்டது. தேடல் நிறைந்தது. ஏன்? வாருங்கள் சொல்கிறேன்!

இலங்கையில் பல்வேறு ஊடக அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு முக்கியமான அமைப்பாக இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தை குறிப்பிடலாம். 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இன்றும் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

இந்த அமைப்பானது இந்தியாவில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்துடன் ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கினறது. இந்தியாவில் புதுடில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் 1950 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 திகதி ஒரு தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பரந்து செயற்படும் ஓர் அமைப்பாகும். இந்த இரண்டு அமைப்புகளும் ஒவ்வொரு வருடமும் இந்திய இலங்கை ஊடகவியலாளர்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி திட்டம் ஒன்றைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் வருடாந்த மகாநாடு ஒக்டோபர் மாதம் நடைபெறுகின்றபோது இந்தியாவில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்ைகயிலான ஊடகவியலாளர்கள் இலங்கை வருவதும், அதேபோல இந்தியாவின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மார்ச் மாதம் நடைபெறுகின்ற மகாநாட்டின்போது இலங்கை குழுவினர் இந்தியா சென்று வருவதும் ஒரு வழக்கமான செயற்பாடாக இருந்து வருகின்றது.

இதன் மூலம் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தவும் ஊடகவியலாளர்கள் இடையே கருத்து பரிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருடம் மார்ச் மாதம் 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை பெங்களுரில் நடைபெற்ற இந்தியாவின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் 30ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்தகாக இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தில் 25 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு இதில் கலந்து கொண்டனர். இந்தக் குழுவில் தமிழ் பிரதிநிதியாக எனக்கும் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது.

இதன் மூலம் பல்வேறு அனுபவங்களைப் பெறவும் இந்தியாவில் முக்கிய பல இடங்களைப் பார்வையிடவும் பல புதிய ஊடக நண்பர்களைச் சந்திக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை எனக்கு கொடுத்த இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முதித்த காரியகரவன, செயலாளர் உபுல் ஜனக ஜயசிங்க, வெளியுறவு செயலாளர் குருளு கூஞ்சன காரியகரவன, உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் சென்ற விமானம் அதிகாலை 2.15 மணி அளவில் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது. அங்கே எம்மை இந்தியாவின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் மதன் கவுடா, நிர்வாக சபை உறுப்பினர் சத்திய நாராயனா, மைசூர் பல்கலைகழகத்தில் ஊடக பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ரசிகா கோகுலா, ரஞ்சிதா , ஜஹன் அவி ஆகியோர் எம்மை இன்முகத்தோடு மாலை அணிவித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து எமக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட பேருந்தில் அசான் நோக்கி எமது பயணத்தை ஆரம்பித்தோம்

காலையில் 08.30 மணி அளவில் அசானில் அமைந்துள்ள எமக்கென ஒதுக்கப்பட்ட தங்குமிடத்தை வந்தடைந்தோம் புதிய இடம், புதிய பயணம். புதுப்புது மனிதர்கள். என்றாலும் ஊடகம் என்ற குடும்பத்துள் எல்லோரும் ஒரே உறவுகள் என்ற உன்னத உணர்வு எங்களைப் பிரித்துப் பார்க்கவோ, பேதமாய்ச் சிந்திக்கவோ இடம்கொடுக்கவில்லை. அன்றைய காலைப் பொழுதை அவர்களுடன் இனிதாகவும் புதிதாகவும் ஆரம்பித்தோம்.

(அடுத்த வாரம் தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.