புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
நான் கண்ட யாழ்ப்பாணம்

நான் கண்ட யாழ்ப்பாணம்

(யாழ்ப்பாணம் வரவேற்கிறது)

30 வருட காலப் போராட்டத்தின் விளைவாகத் தோன்றிய புலப்பெயர்வினால் உருவான புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் தோல்வியின் பின்னான மீட்சியிலும், கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு நான் சொல்வதற்குக் காரணமிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தற்பொழுது சும்மா இருப்பவர்கள் என்கிற ஒரு புதிய வர்க்கப் பிரிவு உருவாகி இருக்கிறது. நாற்சந்திகளில் வீதிகளின் முடுக்குகளில், ஆலய வீதிகளில் வெட்டியாக நிற்கும் இளைய தலைமுறைக்கு உணவு போடும் வேலையைப் புலம்பெயர் சமூகம் செய்து வருகிறது. யாழ்ப்பாணத்தின் கல்லூரிகளுக்கு, காலையும் மாலையும் மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேரூந்துகளுக்கும் சிற்றூந்துகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் மோட்டார் சைக்கிள் படையணிகளாக தொழிற்படும் இளைஞர் அணிகளையும் ஆங்காங்கே காண நேர்கிற போது புலத்துப்பணம் எப்படிப்புழங்குகிறது என்பதனை உணர்கிறேன்.

யுத்தத்தின் பின்னரான சூழலில் யாழ்ப்பாணம் கடுமையான நெருக்குதல்களை எதிர்கொள்வதாகப் பலரும் சொல்வதனைக் கேட்டு இருக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் தம்மையும் காத்து, தாயகத்தில் வாழும் தம் உறவுகளையும் காப்பதற்காக பனியிலும், குளிரிலும், வேலை ஏதுவானாலும் தகுதி, தராதரம், அந்தஸ்து பாராமல் அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள். அவ்வாறு உழைத்து அவர்கள் அனுப்பும் பணம் சும்மா இருக்கும் சோம்பேறித் தனமான ஒரு பிரிவை உருவாக்கி இருப்பதனை இப்பொழுது கண்ணாற் காண்கிறேன்.

எனது நண்பர் ஒருவர் என்னை யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு பிரபலமான உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே காசாளருக்கும், உணவு பரிமாறுவதற்குமான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஆனால் அந்த வேலைகளைச் செய்யத் தயாரானவர்களைக் கண்டுகொள்ள முடியவில்லை என நிர்வாகத்தினர் கூறியதாக நண்பர் கூறினார். காசாளர் பதவிக்கு 30000.00 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனாலும் இந்தப் பதவியில் ஏற்கனவே இணைந்த பலரும் இடையிலேயே விலகிச் சென்று விட்டார்கள் எனவும் நிர்வாகத்தினர் கூறியதாக நண்பர் சொன்னார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இருந்த கைத்தொழிற் பேட்டை இந்திய அரசின் துணையுடன் மீண்டும் மீளமைக்கப்பட்டுள்ளது. 220 மில்லியன் ருபாய் உதவித் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த கைத்தொழிற் பேட்டையில் 4 தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ள போதிலும் கைத்தொழிற் பேட்டையை உருவாக்க செலவளித்த பணம் விழலுக்கு இறைத்த நீராகுமோ என இந்தியத் துணைத் தூதர் நடராஜன் யாழில் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் உரையாற்றியபோது கவலை வெளியிட்டிருந்தார்.

தளம் ஒன்று, தளம் இரண்டு எனக் கைத்தொழிற் பேட்டையானது இரண்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 25 ஏக்கர் காணியில் அமைந்துள்ள தளம் 1 இல் 22 புளொக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை எடுத்த சில முதலீட்டாளர்கள் இதுவரை எம்முதலீடுகளையும் செய்யவில்லை. முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் நான்கில் 110 பேர் பணி புரிகின்றனர். இவற்றில் அமோனா சீற் உற்பத்தித் தொழிற்சாலையின் உற்பத்தியில் இயந்திரங்களின் பங்கே அதிகம். தளம் இரண்டுக்கு 40 காணிவரை ஒதுக்கப்பட்டு உள்ளது. சூழலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்பே இதனைத் தொழிற்சாலைகளின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தலாம் என அறிவறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கைத்தொழிற் பேட்டையின் தோல்விக்கு காரணம் என்ன எனப் பலரிடம் வினவினேன். சிலர் கூறுகிறார்கள் உறுதியளித்த முதலீட்டாளர்கள் பின்வாங்கி விட்டனர். அதனால் தொழிற்சாலைகளைத் தொடங்க முடியாது உள்ளதென அத்துடன் 25 வருட வாடகைக்குக் கொடுக்கப்படும் காணிக்கு 3 வருடத்திற்கு உரிய முற்பணத்தை செலுத்த வேண்டும். இதனால் பலர் முதலிடத் தயங்குகிறார்கள் என ஒருவர் சொன்னார். தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய யாழ்ப்பாண சமூகத்தினர் விருப்பம் கொள்கிறார்கள் இல்லை என இன்னோரு சாரார் கூறுகின்றனர். இதே வேளை சிலவேலைகள் இருந்தும் அவற்றிற்கு ஏற்ற பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லை எனவும், மறுபுறம் இருக்கும் வேலையாட்களின் திறன்களுக்குரிய உரிய வேலைகளும் இல்லை எனவும் குறித்த தொழிற்பேட்டையுடன் சம்பந்தப்பட்ட இன்னொருவர் கூறினார்.

ஆடைத் தொழிற்சாலைகள், தோற்தொழிற்சாலைகள், காலணிகளை உருவாக்கும் சாலைகள் முதலானவற்றில் யாழ்ப்பாணத்தின் இருபாலாரும் வேலை செய்யத் தயாரில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கு யாழ் சமூகக் கட்டமைப்பே காரணம் எனவும், செய்யும் தொழிலே ஒருவரின் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதாகவும் தென்னிலங்கை நண்பர் ஒருவர் கூறினார்.

இதேவேளை வன்னியில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய அந்த மாவட்டங்களில் வாழும் இளைய நடுத்தர, வயது கூடிய தரப்பினர் என அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என கிளிநொச்சியில் நீண்டகாலமாக மக்களுடன் இருந்த அரசியல் நண்பர் ஒருவர் கூறினார். அவர்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களின் சூழல் உருவாக்கி உள்ளது. அங்கு இருக்கும் தொழிற் சாலைகளில், ஊழியச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு சுரண்டல்கள் குறித்தும் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவற்றையும் தாண்டி அவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். காரணம் உழைத்தால்தான் உணவு என்ற நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலானவர்கள் மத்தியில் உடல் உழைப்புக்கான மனநிலையோ, தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான தயார் நிலையோ இல்லை என்கின்றனர் அவதானிப்பவர்கள்.

'கோழி மேச்சாலும் கொர்ணமெந்துல மேய்க வேண்டும்' என்ற யாழ் சமூக அமைப்பின் சிந்தனையால், அரசாங்க உத்தியோகம், வங்கித் தொழில்கள் போன்றவற்றை விரும்புகிற பலர் தனியார் தொழில்களை உதறித் தள்ளுகின்றனர்.

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியிற் பயிற்சி பெறச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையிற் பாரிய வீழ்ச்சி காணப்படுவதாக தாதியர் பயிற்சிக் கல்லூரி சார்ந்த ஒருவர் என்னிடம் கவலைப்பட்டார். வருடம் ஒன்றிற்கு 100 பேர் தாதியர் பயிற்சிக்கு சேர்க்கப்படுவார்களாயின் 25 பேரே யாழிலிருந்து செல்வதாகவும், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையைச் சார்ந்த முஸ்லீம் மற்றும் தமிழ் மாணவர்கள் சிலரும் சேர்ந்தும் தொகை நூறை எட்டுவதில்லை என்கிறார்.

இனிவரும் காலத்தில் சிங்கள மாணவர்களையும் இணைக்க வேண்டி இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் ஓய்ந்து நாடு இலங்கையர்களுக்கு இனிமேற் புகலிடம் கிடைக்காது என்கிற சூழ்நிலைகள் தோன்றியுள்ள இன்றைய நிலையில் இன்னொரு பிரிவினர் லட்சங்களையும் உயிரையும் பணயம் வைத்து இன்னமும் வெளிநாடு செல்லும் கனவில் காலத்தை கரைக்கின்றனர். புலம்பெயர் தமிழர்கள் பலர் இப்பொழுது பல முதலீடுகளை யாழ்ப்பாணத்தில் செய்துவருகின்றனர் ஆனால் இத்தகைய சில முதலீடுகள் யாழ்ப்பாண மக்களின் வேலைவாய்ப்புக்குப் பொருத்தமானவையா என்ற கேள்வியும் என்மனதில் எழுந்தது.

யாழ்ப்பாணத்தில் இன்று இருக்கும் சனத்தொகையில் மாதம் ஒன்றிற்கு எத்தனை திருமணங்கள் இடம்பெறும், என்பது பற்றிய கணிப்பில்லாமல் கோடிகளைக் கொட்டிக் கட்டப்படும் கல்யாண மண்டபங்களைப் பரவலாகக் காண முடிகிறது. இந்த மண்டபங்களை அமைப்பதற்கு செலவிடும் பணத்தைப் பார்க்கையில் இதன் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்? என்ற கவலை ஏற்படுவதனைத் தவிர்க்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்தின் ஒரு முக்கிய நகரப் பகுதியில் 3 மாடிகள் கொண்ட ஒரு கடைத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது தளத்திலே சில கடைகளைத் தான் சிலர் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஏனைய 2 மாடிகளையும் ஏன் கட்டுகிறீர்கள் கீழ்த்தளத்தில் உள்ள கடைகளே இன்னும் முழுமையாக போகவில்லை ஏன் ஐயா மற்றைய தளங்களை அமைக்கிறீர்கள் என நண்பர் ஒருவர் கேட்டாராம். அதற்கு அந்தப் பெரியவர் சொன்ன பதில் 'அவன் வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பிறான், விடாமல் கட்டி முடிக்கச் சொல்கிறான் எனக்கென்ன அவன் அனுப்புறான் நான் கட்டுறன்'.

இவை மட்டும் அல்ல இருக்கின்ற ஆலயங்களை, ஊர்களின் ஒன்றியங்களும், திருவிழா உபயகாரர்களும், மீண்டும் மீண்டும் மெருகூட்டுவதும், வானத்தை தொடுகின்ற கோபுரங்களையும், மணி மண்டபங்களையும், தேர்களையும் மஞ்சங்களையும் கோடிகளைக் கொட்டி உருவாக்குகிறார்கள் மெருகூட்டுகிறார்கள். என்ன பயன்?

யுத்தத்தின் பின்னரான ஈழத்தை ஆரோக்கியமான பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், தாயகத்தில் இருக்கும் அவர்களின் உறவுகள் நண்பர்களும், சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்கிற முதலீடுகளை இனம் கண்டு முறையான திட்டமிடல்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.

நிலவுகின்ற சூழலின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயற்படுதல் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. வெளிநாடுகளில் வைத்திருக்கும் பணத்தை சொத்தாக மாற்றவேண்டும் என்பதற்காக இருக்கும் விவசாயக் காணிகளை போட்டி போட்டு வாங்கி, தரிசு நிலங்களாக வேலி அடைத்து விடுவதனாலோ, வருடத்தில் இரண்டோ ஒன்றோ, விடுமுறைக்கு வந்து செல்வதற்காக சொகுசு மாளிகைகளை அமைப்பதனாலோ, கட்டடங்களை கட்டப் பூட்டி வைப்பதனாலோ வடக்கை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது.

போருக்குப் பின்னரான சூழலை மாற்றி அமைப்பதில், வெற்றி கொள்வதில் ஒவ்வொருவரும் கரிசனை கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுக்கான போராட்டமும். கோரிக்கையும் அவற்றை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளும் தொடரவேண்டும். யுத்த அழிவுகள், மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தல், என்பவை எல்லாம் தொடரப்பட வேண்டும். அவை ஒருபுறமாகத் தொழிற்பட மறுமுனையில் சமூக விழிப்புணர்வும், தகர்ந்து கொண்டு போகும் விழுமியங்களையும், கலாசார சிதைவுகளையும் அழிவுகளையும் தடுத்து நிறுத்த முனைய வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.