புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
பாரிஸை தொடர்ந்து பிரஸெல்ஸ் பீதியில் ஐரோப்பா

பாரிஸை தொடர்ந்து பிரஸெல்ஸ் பீதியில் ஐரோப்பா

பெல்ஜியம் என்றால் அங்கு தயாரிக்கும் பீர் ஞாபகத்திற்கு வரும். சொக்கலேட்டுக்கும் பிரபலம். அழகான நகரம் என்ற வகையிலும் தெரியும். என்றாலும் ஏனைய நாடுகள் போன்று சுவாரஸ்யம் இல்லாததால் அதனை சலிப்பூட்டும் தேசம் என்று திட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவுக்கு வொஷிங்டன் எப்படியோ ஐரோப்பாவுக்கு பெல்ஜிய தலைநகர் பிரஸெல்ஸ் அத்தனை முக்கியமானது. ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம், நேட்டோ தலைமையம் எல்லாம் அந்த குட்டி நகரத்தில் தான் கடை விரித்திருக்கின்றன.

ஆனால் ஐரோப்பாவின் இஸ்லாமிய ஜிஹாதிக்களின் தலைமையகமும் பிரஸெல்ஸ் நகரில் இருப்பது கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் வரை அங்கு வசிக்கும் புழுப்பூச்சுக்குக் கூட தெரியாது. ஆனால் கடந்த நவம்பரில் பாரிஸ் நகரில் ஜிஹாதிக் குழுவொன்று ஆட்டகாசமான தாக்குதல் நடத்தி 137 பேரைக் கொன்ற விவகாரத்தை தோண்டத் தோண்டத் தான் பிரஸெல்ஸ் மான்மியம் தெரிந்தது.

பாரிஸ் தாக்குதலுக்கு வந்த அனைவரும் போல் பிரஸெல்ஸில் பிறந்து வளர்ந்த சுத்தமான பிரஸெல்ஸ்காரர்கள். அப்போதே அந்த நகரம் விழித்துக் கொண்டு தெருக்களில் அவரச அவசரமாக பாதுகாப்பை பலப்படுத்தப் பார்த்தது. அப்படியான சோதனை ஒன்றில் பிடிபட்டவர்தான் சலாஹ் அப்தஸ்லாம்.

பாரிஸ் தாக்குதலுடன் தேடப்பட்ட முக்கியமான சந்தேக நபரான இவர் நான்கு மாதங்களாக ஓடி ஒளிந்து கொண்டிருந்த நிலையில் கடந்த மார்ச் 18 ஆம் திகதி பெல்ஜியம் பொலிஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். சரியாக இவர் பிடிபட மூன்று நாளைக்கு முன்னர் தான் மற்றொரு சந்தேக நபரான முஹமது பலகைத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த பரபரப்புக்கு இடையிலேயே அப்தஸ்லாம் பிடிபட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் பிரஸெல்ஸில் குண்டுகளாக வெடித்தது. பிரஸெல்ஸ் சவென்டம் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததோடு ஒரு மணி நேரம் கழித்து ஐரோப்பிய ஒன்றிய தலைமையத்திற்கு பக்கமாக இருக்கும் மெல்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு குண்டு வெடித்தது. மொத்தமாக 31 பேர் கொல்லப்பட்டதோடு 260 பேர் காயமடைந்தார்கள்.

சிரியாவில் அன்றாடம் போகும் உயிர்களை விடவும் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்றபோதும் ஐரோப்பா என்பதால் ஊடகங்களின் பரபரப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது வேறு கதை.

குறிப்பிடத்தக்க விடயம் இந்த குண்டு தாக்குதல் அனைத்துமே தற்கொலை தாக்குதல்கள். தாக்குதல் நடத்தியவர்களில் காலித் மற்றும் பிராஹிம் அல் பக்ராவி என்ற சகோரர்கள் இருப்பது ஆரம்பக்கட்ட புலன் விசாரணையில் தெரியவந்தது. இந்த இருவருமே குண்டோடு வெடித்துவிட்டார்கள்.

விமானநிலைய சி.சி.டி.வி. கெமராவில் மூன்று உருவங்கள் தெரிந்தன. ஒருவர் பிராஹிமி. மற்றைவர் நஜிம் லாச்ரோய். இந்த நபர் பற்றி ஏற்கனவே தெரியும். ஏனென்றால் பாரிஸ் தாக்குதலில் மூளையாக இருந்தவர்களில் ஒருவர் என்று ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்த இருவரும் ஒரு கையில் மாத்திரம் கறுப்பு கையுறை போட்டிருந்தார்கள். பார்ப்பவர்கள் புதிய ‘ஸ்டைல்’ என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்கப் போயிருப்பார்கள். ஆனால் தற்கொலை குண்டை இயக்கத்தான் இந்த ஏற்பாடு என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

இதிலே சற்று ஓரமாக கறுப்புத் தொப்பியோடு ஒருவர் தள்ளு வண்டியோடு இருந்தார். இவரைத் தேடித்தான் இப்போது பெல்ஜியம் பொலிஸார் சல்லடை போட்டிருக்கின்றனர். பிராஹிமியின் சகோதரர் காலித் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டை வைத்து சமாதியாகி விட்டார்.

பிரஸெல்ஸ் குண்டு தாக்குதல் என்பது பாரிஸ் தாக்குதலின் இரண்டாம் பாகம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெளிவாகத் தெரிகிறது. அதிலும் அவசரத்தில் நடத்திய தாக்குதல் என்பதும் தெரிகிறது.

தாக்குதல் நடத்தியவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த டாக்ஸி ஓட்டுநரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது. செவ்வாய் காலையில் இருவர் தனது டாக்சி வண்டியில் பெரிய பைகளுடன் ஏறியதாக அந்த ஓட்டுநர் குறிப்பிட்டார். ஆனால் வண்டியில் ஏற்ற முடியாத அளவுக்கு பெரிய பை ஒன்றை ஏற்ற முயன்ற போது அதனை தான் மறுத்ததாக அவர் அந்த ஓட்டுநர் மறைக்காமல் பொலிஸாரிடம் உண்மையைச் சொன்னார்.

டாக்ஸி ஓட்டுநரை கேட்டு இந்த நபர்கள் இருந்த முகவரியை கண்டு பிடித்த பொலிஸார் அங்கு போய் பார்த்தபோது குண்டு உபகரணங்களுடன் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் கொடி ஒன்றும் இருந்தது.

அத்தோடு பிராஹிம் அல் பக்ராவி எழுதிய குறிப்பொன்று அருகில் குப்பைத் தொட்டியில் கிடந்தது, “நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை” இந்த குறிப்பின்படி பார்த்தால் பி​ெரஸல்ஸ் தாக்குதல் ஏதோ ஒன்றை மறைக்க செய்த தாக்குதலாகக் கூட இருக்கலாம்.

இங்கே ‘அவர்’ என்று பிராஹிம் குறிப்பிட்டிருப்பது, பாரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகி இருக்கும் அப்தஸ்லாமை குறிப்பதாக நம்பப்படுகிறது.

எப்படியோ வழமைபோலே சிரியாவை தளமாக கொண்டு இயங்கும் ஐ.எஸ். குழு பிரஸெல்ஸ் தாக்குதலுக்கு பெருமையோடு உரிமை கோரி இருக்கிறது.

ஐ.எஸ்ஸின் பொதுவான பண்பு எங்கெல்லாம் லேசாக ஊடுருவ முடியுமோ அங்கெல்லாம் புகுந்து விடும். ஐரோப்பாவில் அப்படி ஊடுருவ கச்சிதமான இடம் பிரஸெல்ஸ் ஆகத் தான் இருக்க முடியும். ஏனைய ஐரோப்பிய நகரங்கள் அளவுக்கு பெரிதாக பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை. அத்தனைக்கும் கடவுச்சீட்டு இல்லாமலேயே வேண்டிய ஐரோப்பிய நாடுகளுக்கு போகக் கூடிய ஷெங்கன் வலயம் கொண்ட நாடு.

இத்தனை குறைபாடுகள் இருந்தும் ஐரோப்பாவின் முக்கிய தளங்கள் அங்கே இருக்கின்றன.

அங்கு சட்டவிரோத ஆயுத வர்த்தகமும் அமோகமாக நடக்கிறது. கடந்த ஆண்டு பராஸின் சார்லி ஹெப்டோ நையாண்டி பத்திரிகை மீது 12 பேரை பலிகொண்ட தாக்குதலுக்கும் இங்கிருந்தே ஆயுதங்கள் வந்திருக்கின்றன.

இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு பெல்ஜியத்தின் அரசியல் முறை மீதும் குற்றம் சாட்ட வேண்டி இருக்கும். அங்கு வெவ்வேறு மொழிகளுக்கு தனித்தனி நிர்வாகம் இருக்கிறது. அதாவது ஜெர்மன் மொழி பேசுபவர்களுக்கு தனியே பாராளுமன்றமே இருக்கும் அளவுக்கு சிக்கல் கொண்டது.

இதனால் பொலிஸ், நீதித் துறை மற்றும் உளவுப் பிரிவுகள் கூட தனித்தனியே பிரிந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு பிரஸெல்ஸை எடுத்துக் கொண்டால் கூட வெவ்வேறாக 19 பொலிஸ் வலயங்கள், 19 தனித்தனி மேயர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையில் ஒரு தகவலை பரிமாறிக் கொள்வதென்றால் ஆயிரத்தெட்டு செயல் முறைகள் இருக்கின்றன.

எனவே பிரஸெல்ஸ் நகர் ஜிஹாதிக்களின் சொர்க்கபுரியாக இருப்பதை சொல்லவே தேவையில்லை. அதிலும் பிரஸெல்ஸின் தென்மேற்கு புறநகர் பகுதியான முலம்பீக் ஐ.எஸ்ஸின் குட்டிக் கோட்டை என்றே குறிப்பிடலாம். இங்கு பெரும்பான்மையாக மொரோக்கோ நாட்டு பூர்வீகம் கொண்டவர்கள் வாழ்வதோடு வறுமைக்கு பஞ்சமில்லை. 25 வீத இளைஞர்களுக்கு வேலை இல்லை, விரக்தியே அதிகம்.

பாரிஸ் தாக்குதலை நடத்திய புன்னிவான்கள் பலர் இங்குதான் குடித்தனம் நடத்தி இருக்கிறார்கள். பிடிபட்ட அப்தஸ்லாம் கூட பாரிஸ் தாக்குதலுக்கு பின்னர் இந்த பகுதியில் மாதக் கணக்கில் ஒளிந்து வாழ முடிந்திருக்கும் அளவுக்கு ஜிஹாதிக்களுக்கு பாதுகாப்பான இடம்.

1970களில் சவூதி அரேபியா பிரஸெல்ஸ் நகரில் பிரமாண்ட பள்ளிவாசல் ஒன்றை கட்டியது. அப்போது கடும்போக்கு சலபி சிந்தனை கொண்ட இமாம்கள், பிரசாரகர்களை பொதுமாக ஏற்றுமதி செய்தது. இவர்களின் பாசறையில் வளர்ந்தவர்கள் கொஞ்சம் தீவிரப்போக்குடையவர்களாகத் தான் இருப்பார்கள். ஐ.எஸ். குழுவினரே இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதனாலேயே ஐ.எஸ்ஸின் குருட்டுப் பிரசாரத்தில் ஏமாந்து போன ஐரோப்பியர்களில் பெல்ஜியம் பெருமக்கள் அதிகமாக இருந்தார்கள். கிட்டத்தட்ட 520 பெல்ஜியம் நாட்டவர்கள் ஐ.எஸ்ஸுடன் சண்டையில் பங்கேற்்றிருக்கின்றார்கள். சராசரிப்படி ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட இது அதிகம்.

ஆனால் இத்தனை நடந்திருந்த போதும் பெல்ஜியம் நிர்வாகம் பிரிட்டன், பிரான்ஸ் அளவுக்கு பயப்பட்டதாக தெரியவில்லை. பிரஸெல்ஸ் தாக்குதலை நடத்திய காலித், பிராஹிமி சகோதரர்களை எடுத்துக் கொள்வோம்.

இருவரும் பொதுவாக குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று பெல்ஜியம் நிர்வாகத்திற்கு ஏற்கவே தெரியும். பிராஹிமி துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதற்கு ஒன்பது ஆண்டு சிறை தண்டனைக்கு முகம்கொடுத்ததோடு அவரது சகோதரர் வாகன கடத்தல் ஒன்றுக்கு சம்பத்தப்பட்டு ஐந்து ஆண்டு சிறைக்குப் போனவர்.

ஆனால் பிராஹிம் 2015 ஜுலையில் சிரிய எல்லையில் வைத்து துருக்கி பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டவர். அப்போதே இந்த ஆள் ‘ஒரு தீவிரவாத போராளி’ என்று துருக்கி நிர்வாகம் பெல்ஜியத்தை எச்சரித்தாலும் பெல்ஜியத்திற்கு வேறு வேலை இருந்ததோ என்னவோ அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

பெல்ஜியம் இத்தனை ஓட்டைகளை வைத்துக்கொண்டு ஐ.எஸ்ஸுக்கு எதிராக அமெரிக்காவுடனும் கூட்டுச் சேர்ந்து வீரத்தை காட்டும் வேலையிலும் ஈடுபடுகிறது.

ஆனால் பாரிஸ் தாக்குதல் மற்றும் பிரஸெல்ஸ் தாக்குதல்களின் முடிச்சு இன்னும் முழுமையாக அவிழ்க்கப்படவில்லை. பெரிய எண்ணிக்கையிலான தாக்குதல்தாரிகள் இன்னும் சிக்கிக்கொள்ளாம் ஓடி ஒளிந்தும், ஒன்றும் தெரியாதது போல தனது வேலையை பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர். எனவே, ஐரோப்பாவெங்கும் பீதி தொடர்கிறது. அது எங்கே போய் முடியும் என்பதுவே மிக ஆபத்தான கேள்வி.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.