புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
தென்னிலங்கை ஊடகவியலாளர்களது 03 நாள் பயணம் நேற்று ஆரம்பம்

பனை ஓலையும் எழுத்தாணியும் இணையும் நல்லிணக்க முயற்சி

தென்னிலங்கை ஊடகவியலாளர்களது 03 நாள் பயணம் நேற்று ஆரம்பம்

ஊடக அமைச்சர்களும் பங்கேற்பு வழிநெடுகிலும் அமோக வரவேற்பு

'பனை ஓலையும் எழுத்தாணியும் ஒன்றாக இணையும் நல்லிணக்க பயணம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும், வடபகுதி ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைக்கும் ஊடகக் குழுவினரின் மூன்று நாள் நல்லிணக்க வெற்றிப்பயணம் நேற்றுச் சனிக்கிழமை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து விசேட புகையிரதம் மூலமாகத் தமது வடக்கு நோக்கிய பயணத்தை  ஆரம்பித்த சுமார் 90 பேர் கொண்ட மும்மொழிகளையும் சேர்ந்த ஊடகவியலாளர் குழுவிற்கு குருணாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் பிரதேச ஊடகவியலாளர்களாலும், பொதுமக்களாலும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் குழுவுடன் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பயணத்தில் தென்னிலங்கை மற்றும் வடபகுதி ஊடகவியலாளர்களிடையே காணப்படும் இடைவெளியை நிரப்புவதுடன் இரு தரப்பினரிடையேயும் மேலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பயணத்தின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான அடிக்கற்களும் நடப்படவுள்ளன. இந்த வீடுகளை லேக் ஹவுஸ் நிறுவனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம், சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியன அமைத்துக் கொடுக்கவுள்ளன.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸாரால் தாம் கண்காணிக்கப்படுகின்றோம் எனும் சந்தேகம் வடபகுதி ஊடகவியலாளர்களிடம் இன்றும் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் சந்திப்பு ஒன்றும் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஊடகக் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமையும், நாளை திங்கட்கிழமையும் வடபகுதியில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர். அத்துடன் ஊடகவியலாளருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வும் அங்கு ஆரம்பித்து வைக்கப்படும். வடக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக தென்பகுதி ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவுத் தூபி ஒன்றும் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்தத் தென்பகுதி ஊடகக் குழுவின் முக்கியஸ்தரான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர்பீடப் பணிபபாளர் சமன் வகஆராச்சி தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.